ஆக்ரோஷமாக செயல்படுவதாலேயே கங்குலி ஆகிவிடுவாரா கோலி?: சிறப்புக்கட்டுரை

  • News18
  • Last Updated :
  • Share this:
கோலி சிறந்த கேப்டன்தானா? என்ன பாஸ், இப்டி சொல்றீங்க? கோலி தலைமையில் இந்தியா ஜெயித்த போட்டிகளின் கணக்குகள், புள்ளி விவரங்கள் எல்லாம் தெரியாமல் பேச வேண்டாம். இந்தியாவிலேயே கங்குலிக்கு அடுத்து சிறந்த கேப்டன் கோலிதான் தெரியுமா? என நீங்கள் சொல்வது புரிகிறது. ஆனால், வெற்றி பெற்ற ஆட்டங்கள், அதன் புள்ளி விவரங்கள் மட்டுமே ஒரு கேப்டனை தீர்மானித்து விடும் என்றால் பிறகு கேப்டனுக்கு என்னதான் வேலை?

அணி இக்கட்டான தருணங்களில் இருக்கும்போது கேப்டன் எடுக்கும் முடிவுதான், ஒட்டுமொத்த அணியையும் கரைசேர்க்கும். அப்படி கோலி இதுவரை எடுத்த நல்ல முடிவுகளை கொஞ்சம் பட்டியலிட்டு பாருங்கள். ஒன்றுகூட தேறாது. இது முழுக்க, முழுக்க கோலியை குற்றம்சாட்டும் கட்டுரை அல்ல. கோலியின் கேப்டன்சியால்தான் இந்திய அணி நம்பர் ஒன் இடத்தைப் பிடித்துள்ளது எனக்கூறவே முடியாது. அனைத்து போட்டிகளிலும் தான் சிறப்பாக ஆடிவிட்டால் மட்டும் அணி ஜெயிக்காது என்பதை கோலி புரிந்துகொள்ள வேண்டும். வெற்றிகரமான ஒரு அணியை வழிநடத்த தலைமைப் பண்பும் அவசியம் என்பதை கோலி உணர வேண்டும்.

அணித் தேர்வில் குழப்பம்…

கோலி தலைமை வகித்த டெஸ்ட் போட்டிகளில், ஒரே ஒரு முறையைத் தவிர மற்ற அத்தனை போட்டிகளிலும் அவர் அணியை மாற்றாமல் இருந்ததே இல்லை. ஒரு போட்டியில், வெற்றி பெற்றாலும் சரி, தோல்வி அடைந்தாலும் சரி, அடுத்த போட்டியில் அணியை மாற்றி விடுவார் கோலி. ஒரு திறமையான வீரருக்கு குறைந்தபட்சம் தொடர்ச்சியாக 5 டெஸ்ட் போட்டிகளில் கூட வாய்ப்பு வழங்கவில்லை கோலி. அணித் தேர்வில் கோலிக்கு ஏற்பட்டுள்ள குழப்பத்தால் அணியின் வெற்றியும் பாதிக்கப்படுகிறது.அண்மையில் நடந்து முடிந்த இங்கிலாந்து தொடரையே எடுத்துக் கொள்வோம். தொடரின் முதல் போட்டியில் புஜாராவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை கிரிக்கெட் ரசிகர்கள் நன்கு அறிவர். புஜாரா இல்லாததால் வெறும் 32 ரன்களில் தோல்வி அடைந்தது இந்தியா. ஒருவேளை புஜாரா இருந்திருந்தால் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கலாம். அதேபோல் தற்போதுள்ள இந்திய அணியில் வெளிநாடுகளில் சிறப்பாக விளையாடக்கூடிய வீரர்களில் முரளி விஜய் முக்கியமானவர். எந்த பந்தை ஆட வேண்டும், எந்த பந்தை விட வேண்டும் என கணித்து மிகச்சிறந்த முறையில் ஆடக்கூடிய வீரர்களில் அவரும் ஒருவர். ஆனால், அவரை வெறும் 2 போட்டிகளில் ஆடவிட்டு நீக்கிவிட்டார், கோலி. ஆனால் கடந்த சில இன்னிங்ஸில் சொதப்பி வந்த ராகுலுக்கு 5 டெஸ்ட் போட்டிகளிலும் ஆடும் வாய்ப்பு கிட்டியது. இங்கிலாந்து தொடரில் தனது கடைசி இன்னிங்சை தவிர மீதி அத்தனை இன்னிங்சிலும் ராகுல் சொதப்பியது தனிக்கதை. அதேபோல் உள்ளூரில் புலி, வெளியூரில் எலியான தவானுக்கும் ஏகப்பட்ட வாய்ப்புகள் வழங்கப்பட்டு விட்டது. தவானுக்கும், ராகுலுக்கும் வழங்கிய வாய்ப்பை முரளி விஜய்க்கு வழங்கியிருந்தால் நிச்சயம் அவர் சிறப்பாக ஆடியிருப்பார். இதற்கு முன் இங்கிலாந்து மண்ணில் ஆடிய அனுபவம் கொண்ட வீரரும், பல ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளுக்கு திரும்பிய வீரருமான தினேஷ் கார்த்திக்கிற்கும் 2 போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டது. ரிஷப் பந்த்தின் வளர்ச்சி மகிழ்ச்சி அளித்தாலும், தினேஷ் கார்த்திக்கிற்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கியிருக்கலாமோ என ரசிகர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

 

இதே கதைதான் ஜடேஜாவிற்கும் நடந்தது. கடந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் கூட ஜடேஜாவிற்குதான் வாய்ப்பு வழங்கினார் தோனி. ஆனால் இந்த தொடரில் ஜடேஜா ஆடியது ஒரே ஒரு போட்டிதான். வேகத்திற்கு ஒத்துழைக்கும் இங்கிலாந்து ஆடுகளங்களில், அஸ்வினை விட ஜடேஜாவை தேர்வு செய்ய வேண்டும் என்ற அடிப்படை அறிவு கேப்டனுக்கும், பயிற்சியாளருக்கும் இருக்க வேண்டாமா? சென்னையில் 300 ரன்கள் அடித்த பிறகு கருண் நாயர் ஆடியது வெறும் 3 போட்டிகள்தான். ஒருவர் எல்லா ஆட்டத்திலும் 300 ரன்கள் அடிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறாரா கோலி? ஜெயந்த் யாதவ், உமேஷ் யாதவ் என கோலியால் வாய்ப்பு மறுக்கப்பட்ட வீரர்கள் ஏராளம். மொக்கை அணியை வைத்துக்கொண்டு தோற்றால் கூட யாரும் விமர்சிக்க மாட்டார்கள். ஒரு நல்ல அணியை கொடுத்தும் வெற்றி கிட்டவில்லை எனில், தவறு கேப்டன் மற்றும் பயிற்சியாளர் மீதுதான்.

கோலி என்ன கங்குலியா?

கங்குலியின் பாணியை தாம் கடைபிடிப்பதாக கோலி ஒரு பேட்டியில் கூறியுள்ளார். கங்குலி போலவே கோலி வலம் வருகிறார் என அவரது ரசிகர்களும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். கத்துவது, ஆக்ரோஷமாக செயல்படுவது, எதிரணியினர் சீண்டினால், அடங்கிப் போகாமல் எதிர்த்து நிற்பது போன்றவற்றை செய்வதன் மூலம் மட்டும் கோலி, கங்குலி ஆகிவிட முடியாது. கங்குலி ஆவதற்கு கங்குலி போலவே முதலில் யோசிக்க வேண்டும். அதற்கு, தான் தேர்வு செய்யும் வீரர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். உதாரணத்திற்கு, ஒரு வீரர் ஃபார்மின்றி சொதப்பினால், அவரிடம் சென்று, “உனக்கு 10 முதல் 15 போட்டிகள் தருகிறேன். எந்தவித பிரஷரும் இல்லாமல் ஆடு” என்ற நம்பிக்கை வார்த்தைகளை கங்குலி விதைப்பார் என சக வீரர்கள் கூறியிருக்கிறார்கள். அதேபோல் இக்கட்டான பல நேரங்களில் கங்குலி எடுத்த தைரியமான முடிவுகள்தான் இன்றுவரை பேசப்படுகிறது. இதுபோன்ற செயல்களால்தான் கங்குலியின் தலைமைப் பண்பை இன்றுவரை அனைவரும் சிலாகிக்கின்றனர்.இங்கிலாந்து தொடரில் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் ஷாமி, பும்ரா, இஷாந்த், ஹர்திக் ஆகியோர் சராசரியாக 144 மைல் வேகத்தில் பந்துவீசியுள்ளனர். இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் சராசரி வேகத்தை விட இது மிக அதிகம். நினைத்துப் பாருங்கள். இப்படி ஒரு வேகப்பந்துவீச்சு கூட்டணி கங்குலிக்கோ, தோனிக்கோ கிடைத்திருந்தால், அல்லது இப்படி ஒரு அணிக்கு கேரி கிர்ஸ்டன் பயிற்சியாளராக இருந்திருந்தால் எப்படி இருக்கும்? எதிரணியின் கண்களில் விரலை விட்டு ஆட்டியிருப்பார்கள் அல்லவா? ஆனால், இப்படி ஒரு பந்துவீச்சு பலம் வாய்ந்த அணியை வைத்துக்கொண்டும் ஜெயிக்க முடியவில்லை என்றால் அது நிச்சயம் கோலியின் தலைமைப் பண்பை கேள்விக்குள்ளாக்குகிறது.

ஒரு பார்ட்னர்ஷிப் 30 ரன்களை தாண்டினால் கூட ஃபீல்டர்களை பவுண்டரிகளில் நிற்க வைத்துவிடுகிறார் கோலி. அட்டாக்கிங் ஃபீல்ட் செய்து பார்ட்னர்ஷிப்பை பிரிக்க பெரிதாக முயற்சிப்பதேயில்லை. எதிரணி எவ்வளவு ரன்கள் அடித்தால் என்ன, நாம் திருப்பி அடித்துவிடப் போகிறோம் என நினைக்கிறார் போலும். அதேபோல் பந்துவீச்சாளர்களை Rotate செய்வதில் பெரிய குழப்பத்தில் இருக்கிறார் கோலி. களத்தில் இருக்கும்போது பெரும்பாலும் கங்குலிதான் முடிவெடுப்பார். ஆனால் இங்கு பெரும்பாலான முடிவுகளை எடுப்பது ரவி சாஸ்திரிதான் எனக் கூறுகிறார்கள். பயிற்சியாளரின் ஆலோசனைகளை கேட்கலாம். மாறாக அது பயிற்சியாளரின் தலையீடாக மாறும்போதுதான் பிரச்னை ஏற்படுகிறது.

உலகக்கோப்பையை வெல்வாரா கோலி?

இனி வரும் நாட்களில், அணித் தேர்வில் செய்யப்படும் ஒவ்வொரு முடிவும் உலகக்கோப்பையை மனதில் வைத்துதான் எடுக்கப்பட வேண்டும். ஏனெனில் உலகக்கோப்பைக்கு நாட்கள் குறைவாகவே உள்ளன. ஆனால், கோலியின் கேப்டன்சி தவறுகள் ஒருநாள் போட்டிகளிலும் எதிரொலிக்கின்றன. ரோகித், தவான், கோலி, தோனி ஆகியோர் ஆடாவிட்டால், ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி மொத்தமாக சறுக்கிவிடும். காரணம், படுவீக்கான ஒரு மிடில் ஆர்டர். அனுபவம் வாய்ந்த சுரேஷ் ரெய்னா தற்போது அணியில் இல்லை. அவரை அணியில் மீண்டும் சேர்க்க எந்த முயற்சியையும் கோலியும், ரவி சாஸ்திரியும் எடுக்கவில்லை. நேர்த்தியாக, பக்குமாகவும் ஆடக்கூடிய அம்பத்தி ராயுடுவுக்கும், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என கலக்கும் ஜடேஜாவிற்கும் ஒருநாள் போட்டியில் போதுமான வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை. மாறாக எதிரணி சுலபமாக தகர்க்கும் வகையில், மனீஷ் பாண்டே, ஸ்ரேயஸ் அய்யர், கேதர் ஜாதவ் என எதிரணி சுலபமாக தகர்க்கக் கூடிய வகையில் தான் மிடில் ஆர்டர் உள்ளது. மிடில் ஆர்டரில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருந்தால் மட்டுமே அணி பின்னடைவை சந்திக்கும்போதும் மீட்டெடுத்துவர முடியும் என்பதை கோலி உணர வேண்டும். பந்துவீச்சும் புவனேஸ்வர் குமார், பும்ராவையே பெரிதாக நம்பியுள்ளது.2019 உலகக்கோப்பையை வெல்ல வேண்டுமெனில், அதற்கு அணியின் மிடில் ஆர்டர் வலுவாக இருக்க வேண்டும். பொதுவாகவே தோனி செட்டிலாக 20, 30 பந்துகளை எடுத்துக் கொள்வார் என்பதால் ஒருசில போட்டிகளில் அவரை, இரண்டாவது டவுனில் இறக்கி முயற்சித்துப் பார்க்கலாம். அல்லது ராயுடுவை இறக்கினால் பின்வரிசையில் ரெய்னா, தோனி போன்ற வீரர்களை இறக்கிவிட்டு, ஃபினிஷிங் செய்ய ஹர்திக் பாண்டியா, ஜடேஜாவை தயார் படுத்தலாம். இதுபோன்ற ஏதாவது முயற்சிகளை செய்தால் மட்டுமே உலகக்கோப்பை வசப்படும். ஒருவேளை, உலகக்கோப்பையை நாம் வெல்ல முடியாவிட்டால், எழுதி வைத்துக் கொள்ளுங்கள், அதற்கு அணியின் மோசமான மிடில் ஆர்டர்தான் காரணமாக இருக்கும்.

தற்போது உலகிலேயே சிறந்த பேட்ஸ்மென் யாரென்றால் கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம் கோலிதான் என்று. தன் மீதான விமர்சனங்களை எல்லாம் முறியடித்து, பேட்டிங்கில் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறார் கோலி. ஆனால், கோலி ஒரு சிறந்த கேப்டனா என கேட்டால், தற்போதைக்கு இல்லை என்பதே பதிலாக அமைகிறது.

- கோ.ர.மணிகண்டன் (செய்தியாளர், நியூஸ்18 தமிழ்நாடு)
Published by:Murugadoss c
First published: