சூர்யாவைப் போற்று!

நடிகர் சூரியா

நடிகர் என்பதையும் தாண்டி, தற்போது சூர்யாவின் தயாரிப்பில் சிற்ந்த திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மேலும், தற்போது அரசியல் ரீதியான சர்ச்சைகளிலும் சூர்யாவின் பெயர் தொடர்ந்து அடிபடுகிறது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  2014ஆம் ஆண்டு. இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் சுதந்திர தினத்தன்று வெளியானது ‘அஞ்சான்’ திரைப்படம். கமர்சியல் மசாலா திரைப்படமாக, அதீத பில்ட் அப்களுடன் வந்திருந்ததால், வணிக ரீதியாக மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது ‘அஞ்சான்’. சூர்யா நாயகனாக மட்டுமின்றி, முதன்முறையாகப் பின்னணி பாடகராகவும் அறிமுகமாகியிருந்தார். படத்தின் வணிகத் தோல்வியைத் தாண்டி, படத்தின் ப்ரொமோஷனுக்கான நேர்காணல் ஒன்றில் இயக்குநர் லிங்குசாமி பேசியது சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு, வைரலாகி, மிகப்பெரிய ட்ராலாக மாறியது. தமிழ் இணைய உலகில் பெரும்பாலும் அனைவரும் இணைந்து அடித்த முதல் விவகாரமாக, மீம் க்ரியேட்டர்களைப் புதிது புதிதாக உருவாக்கிய கண்டெண்டாக மாறியது ‘அஞ்சான்’.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஏறத்தாழ 6 ஆண்டுகளுக்குப் பிறகு, 2020ஆம் ஆண்டில் கொரோனா ஊரடங்கு காரணமாகத் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன.

  தீபாவளியன்று புதிய திரைப்படங்களைக் காண்பது தமிழ்ப் பண்பாட்டின் பகுதியாக மாறிவிட்ட இந்தக் காலத்தில் ஓ.டி.டி தளத்தில் வெளியானது ‘சூரரைப் போற்று’. தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களுள் ஒருவரான சூர்யாவின் திரைப்படம் இணையத்தில் வெளியாவது பலருக்கும் அதிர்ச்சியைத் தந்தது. வரதட்சணை வாங்காமல் கல்யாணம் செய்துகொள்ள விரும்பும் ஆணை, ‘என்ன பிரச்னையோ’ என்று சமூகம் பார்த்து வருந்துவதைப் போல, சூர்யாவையும் அணுகியது. ‘சூரரைப் போற்று’ அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியானது.  முதல் காட்சியில் விமானத்தைத் தாம்பரத்தில் தரையிறக்க நெடுமாறன் ராஜாங்கம் முயற்சிக்க, நெடுமாறனின் கனவோடு சேர்ந்து கொண்டான் தமிழன். நெடுமாறன் விமான நிலையத்தில் அழும் போது, தானும் அழுதான்; காளி வெங்கட்டோடு காமெடி செய்த போது ரசித்தான். வில்லனால் சிக்கல்களுக்கு உள்ளான போது, நெடுமாறன் வருந்தும் போது, தானும் வருந்தினான். இறுதிக் காட்சியில், நெடுமாறன் ஆனந்தக் கண்ணீர் வடித்த போது, தானும் நெகிழ்ச்சியோடு மகிழ்ந்தான். நீண்ட காலமாகத் தோல்வியின் விளிம்பில் இருந்த சூர்யா, ‘கையிலே ஆகாசம்’ என்று தனது கண்ணில் தேங்கிய கண்ணீரோடு, நெகிழ்ந்து நிற்க, சூர்யாவைக் கொண்டாடி தீர்த்தது தமிழ்ச் சமூகம். ‘சூரரைப் போற்று’ படத்தின் முடிவில் சூர்யா மீண்டும் போற்றப்படத் தொடங்கினார்.

  தான் நடித்த நெடுமாறன் ராஜாங்கத்தைப் போல, சூர்யாவின் ஒட்டுமொத்த சினிமா வாழ்க்கையும் ஏற்ற இறக்கங்களால் நிரம்பியது.

  சூர்யாவின் தொடக்க காலம்....

  1997ஆம் ஆண்டில், அப்போதைய முன்னணி நடிகர் விஜய் நடித்த ‘நேருக்கு நேர்’ படத்தில் மற்றொரு நாயகனாக அறிமுகமாகினார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, விஜயுடன் மீண்டும் ‘பிரெண்ட்ஸ்’ படத்திலும் நடித்தார். ’நேருக்கு நேர்’ வெற்றிப்படமாக இருந்த போதும், அடுத்தடுத்த படங்கள் சரியாகப் போகவில்லை. ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ அவரது சினிமா வாழ்க்கையிலும், சொந்த வாழ்க்கையிலும் மற்றொரு திருப்புமுனை. தனியாக நடித்து முதல் வெற்றிப்படமாகவும், தனது எதிர்கால மனைவி ஜோதிகாவுடன் நடித்த முதல் திரைப்படமாகவும் இருந்தது அந்தப் படம்.  நடிகர் சிவகுமாரின் மகன் என்ற போதும், தமிழ் சினிமா சூர்யாவுக்குக் கருணை எதுவும் காட்டவில்லை. தொடக்க காலத் தோல்விகளுக்குப் பிறகு, தனது நடிப்பின் பாணியை மாற்றத் தொடங்கினார்.

  கெட்டப் மாற்றிய சூர்யா...

  இயக்குநர் பாலாவின் ‘நந்தா’ படத்தில் சிறுவனாக சிறை சென்று மீண்டும் சமூகத்திற்குள் வாழத் தொடங்கி புறக்கணிக்கப்படும் கதாபாத்திரம். வாழ்க்கையில் இரண்டாம் வாய்ப்புக்காக ஏங்கும் நந்தாவின் கதாபாத்திரம் சூர்யாவின் கரியரில் ஓர் மைல்கல்.

  ‘நந்தா’ படத்திற்குப் பிறகு, வெவ்வேறு படங்களில் நடித்திருந்தாலும், அனைவரையும் திரும்பிப் பார்க்கச் செய்தது அவர் ஏற்று நடித்த அன்புச்செல்வன் ஐ.பி.எஸ் கதாபாத்திரம். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘காக்க காக்க’ படம் அவருக்கான ஆக்‌ஷன் இமேஜை உருவாக்கித் தந்தது. மீண்டும் ஜோதிகாவுடன் சூர்யா இணைந்த திரைப்படம் அது. என்கவுண்டர்களை நியாயப்படுத்திப் பேசியிருந்தாலும், சூர்யாவின் நடிப்பில் மிகச்சிறந்த திரைப்படமாக அது வெளிவந்திருந்தது.

  சென்னையின் துணை கமிஷனராகக் கம்பீரத்தையும், வில்லனால் கொல்லப்பட்ட மனைவியை நினைத்து ‘நதியின் மடியில் காத்துக் கிடக்கும்’ காதல் கணவனாகவும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதுவரை வெளிவந்திருந்த போலீஸ் திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தது ‘காக்க காக்க’.  மீண்டும் இயக்குநர் பாலாவுடன் இணைந்து ‘பிதாமகன்’ படத்தில் நடித்தார். இந்தப் படத்திற்காக நடிகர் விக்ரம் தேசிய விருது பெற்றிருந்தாலும், இதில் சூர்யாவின் நடிப்பு கொண்டாடப்படாத ஒன்றாகவே இருந்து வருகிறது. இன்று டிக்டாக்கிலும், இன்ஸ்டாகிராம் ரீல்ஸிலும் ‘பிதாமகன்’ படத்தில் சூர்யா பேசிய வசனங்களுக்குப் பலரும் தங்கள் நடிப்பைக் கொடுத்து வருவதில் அடங்கியிருக்கிறது சூர்யாவின் வெற்றி.

  ’பேரழகன்’ படத்தில் கூன் விழுந்த மாற்றுத் திறனாளியாக, ‘மாயாவி’ படத்தில் அனைவரையும் சிரிக்க வைத்த திருடனாக காமெடியில் கலக்கியிருந்தார் சூர்யா.

  மணிரத்னம் இயக்கிய ’ஆயுத எழுத்து’ மற்றொரு முக்கியமான திரைப்படம். அரசியலில் நுழையும் இளைஞன் மைக்கேலாக சூர்யா நடித்திருப்பார்.

  திராவிட இயக்கத்தின் மீதான விமர்சனமாக அந்தப் படம் அமைந்திருந்தது. சூர்யாவின் நடிப்பு சமூகத்தின் மீது உண்மையான அக்கறை கொண்ட, அரசியல்வாதிகளின் மீது கோபம் கொண்ட இளைஞனாக தத்ரூபமாக இருந்தது. இதே பாணியில், பின்னாட்களில் அவர் முயன்ற ‘என்.ஜி.கே’ படம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.  ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த ‘கஜினி’ இன்றும் பேசப்படும் திரைப்படமாக இருக்கிறது. ஞாபக மறதி கொண்டவராகவும், தொழிலதிபர் சஞ்சய் ராமசாமியாகவும் வெவ்வேறு துருவங்களில் நடித்திருப்பார் சூர்யா. மிகப்பெரிய வெற்றிப்படமாகவும் அமைந்தது ‘கஜினி’,

  Also read... #HBDSuriya: எப்போதெல்லாம் அரசியல் பேசினார் சூர்யா - ஒரு தொகுப்பு!

  தனது சினிமா வாழ்க்கையின் வழியாகத் தனது சொந்த வாழ்க்கையையும் தேர்ந்தெடுத்துக் கொண்டார் சூர்யா. ’பூவெல்லாம் கேட்டுப்பார்’, ‘உயிரிலே கலந்தது’, ‘காக்க காக்க’, ‘மாயாவி’, ‘பேரழகன்’ முதலான படங்களில் அவரோடு நடித்த ஜோதிகாவைத் திருமணம் செய்துகொண்டார்.

  அனைவரின் பார்வையும் சூர்யா - ஜோதிகா ஜோடி மீது இருக்க, தமிழ்நாடே தனது மருமகளாக ஜோதிகாவைக் கொண்டாடி வரவேற்றது. திருமணத்திற்கு இரு தினங்களுக்கு முன்பு, அவர்கள் இருவரும் இணைந்து நடித்த ‘சில்லுனு ஒரு காதல்’ வெளியானது. ரகளையான காலேஜ் மாணவனாக ஒரு பக்கம், பொறுப்பான காதல் கணவனாக மறுபக்கம் என வெரைட்டி கொடுத்திருப்பார் சூர்யா. அடுத்தடுத்து நிகழ்ந்ததெல்லாம் ஏறுமுகம் தான்.  மீண்டும் கௌதம் வாசுதேவ் மேனனுடன் இணைந்து சூர்யா நடித்த ‘வாரணம் ஆயிரம்’ இன்றும் போற்றப்படும் ஓர் கிளாசிக். பதின்வயது இளைஞன் முதல் வயதான தோற்றம் வரை, ஒரு மனிதனின் முழு வாழ்க்கையைத் தொட்டிருக்கும் ‘வாரணம் ஆயிரம்’. இந்தப் படத்திற்காக சூர்யா மேற்கொண்ட உடல் உழைப்பும், மெனக்கெடலும் அசாத்தியத்தின் உச்சம். அதுவரை எந்த தமிழ் நடிகரும் செய்திராத சிக்ஸ் பேக் உடலமைப்புக்கு மாறினார் சூர்யா. தமிழ்நாட்டு இளைஞர்கள் சூர்யாவின் உடலைப் போல தங்களது உடலும் இருக்க வேண்டும் எனக் கனவு காணத் தொடங்கினர். ஏற்கனவே இருந்த இளம்பெண்க் ரசிகைகளின் எண்ணிக்கை இன்னும் அதிகமானது.

  சிங்கம் சூர்யா...

  மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கிய ‘அயன்’ திரைப்படம் சூர்யாவின் திரைப்பயணத்தில் மற்றொரு முக்கிய திரைப்படம். கமர்சியல் திரைப்படங்களில் ஹாலிவுட் பாணியில் வெளிவந்தது ‘அயன்’. வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்குள் கடத்தல் பொருள்களைக் கொண்டு வரும் சாகசக்காரனாகப் பட்டையைக் கிளப்பியிருந்தார் சூர்யா. கமர்சியல் திரைப்படங்களின் வரிசையில், மீண்டும் காக்கிச் சட்டை அணிந்து, இயக்குநர் ஹரி இயக்கத்தில் ‘சிங்கம்’ திரைப்படத்தில் சூர்யா நடிக்க, கிராமங்களிலும் சூர்யாவின் வெற்றிக் கொடி பறந்தது.

  மீண்டும் இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்த ‘ஏழாம் அறிவு’ கடுமையான உடற்பயிற்சியைக் கோரியது. சீனா சென்ற தமிழன் போதிதர்மராகவும், சர்க்கஸ் கலைஞனாகவும் சூர்யாவின் உழைப்பு பாராட்டத்தக்கது. ஒட்டிப் பிறந்த இரட்டையர்களாக, கே.வி.ஆனந்த் இயக்கிய ‘மாற்றான்’ படமும் பலராலும் பாராட்டப்பட்டது. அதன்பிறகு சூர்யாவின் திரைப்பயணத்தில் சறுக்கல் விழத் தொடங்கியது. எனினும், டைம் ட்ராவலை மையமாகக் கொண்ட ‘24’ படத்தில் தன்னால் மிகச்சிறந்த வில்லனாகவும் நடிக்க முடியும் என்று நிரூபித்தார் சூர்யா. ‘ஆயுஷ்மான் பவா!’ என்று ஆத்ரேயாவாக மிரட்டியிருந்தார்.  தொடர் தோல்விகளுக்குப் பிறகு, மிகப்பெரிய வெற்றியாக அவருக்கு அமைந்தது ‘சூரரைப் போற்று’.

  நடிகர் என்பதையும் தாண்டி, தற்போது சூர்யாவின் தயாரிப்பில் சிற்ந்த திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மேலும், தற்போது அரசியல் ரீதியான சர்ச்சைகளிலும் சூர்யாவின் பெயர் தொடர்ந்து அடிபடுகிறது.

  சூர்யாவின் அரசியல்..

  மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய கல்விக் கொள்கையைத் தமிழ்நாட்டு நடிகர்களுள் முதல் ஆளாக முன்வந்து தனது எதிர்ப்பைப் பதிவுசெய்தார் சூர்யா. ‘மச்சி, மச்சி, மொறச்சிட்டான்டா!’ என்று தமிழ் ஊடகங்களும், இணைய உலகமும் சூர்யாவைத் திரும்பிப் பார்த்தன. தான் நடத்திக் கொண்டிருக்கும் அகரம் அறக்கட்டளையின் வழியாகப் பல மாணவர்களின் கல்விக் கனவை நிறைவேற்றியிருந்த சூர்யாவுக்கு, ஒன்றிய அரசு முன்வைத்த புதிய கல்விக் கொள்கை பிரச்னையாகத் தென்பட்டது. ’காப்பான்’ படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியின் போது, நடிகர் ரஜினி சூர்யாவின் எதிர்க்குரல் பிரதமர் மோடியை எட்டிவிட்டதாகப் பெருமையுடன் பேசினார்.

  ’அகரம்’ மேடைகளில் சூர்யாவின் உதவியால் கல்விபெற்ற குழந்தைகளின் கனவுகள் நிஜமானதை ஒவ்வொரு குழந்தையும் பேசும் போது, தான் உயர்ந்த மனிதன் என்பதைச் சமூகத்திற்கு நிரூபித்திருந்தார். ‘நீட்’ தேர்வால் மருத்துவராகவும் கனவுகள் நொறுங்கிய குழந்தைகள் உயிரை மாய்த்துக் கொண்ட போது, சூர்யா ’நீட்’ தேர்வுக்கு எதிராக வெளியிட்ட அறிக்கை, பல்வேறு அரசியல் கட்சிகளாலும் வெளிப்படையாகப் பேசாத விவகாரங்களைத் தைரியமாகப் பேசியது. ‘கனவுகள் வெல்ல, காரியம் துணை!’ என்று பாடியவர், குழந்தைகளின் கனவுகளுக்காக ஒன்றிய அரசைக் கடுமையாக எதிர்க்கத் துணிந்தார். சமீபத்தில் ஒளிப்பதிவு திருத்தச் சட்டதிருத்ததை எதிர்த்த முதல் தமிழ் நடிகராகவும் தன்னை முன்னிறுத்திக் கொண்ட சூர்யாவை எதிர்த்து, பி.ஜே.பி இளைஞர் அணி தீர்மானம் நிறைவேற்றியது.  சினிமாவில் ஏற்ற, இறக்கங்கள் இருந்த போதும், அரசியல் நெருக்கடி வரும் எனத் தெரிந்த போதும், வெளிப்படையாக குழந்தைகளின் கல்விக் கனவுக்காக, மருத்துவராக வேண்டும் என்ற ஆசைக்காக சூர்யா அரசுக்கு எதிராகப் பேசியது, பிற முன்னணி நடிகர்கள் செய்யத் தவறியது. அகரம் மேடைகளில் குழந்தைகளின் வெற்றிக் கதைகளைக் கேட்டு, கண்ணீர் சிந்தும் சூர்யாவைத் தமிழ்நாடே அள்ளி அணைத்துக் கொள்கிறது.

  சமீப காலத்தில் சூர்யாவின் போக்கை மிகச்சரியாகக் கணித்து, அவரது அடுத்த படத்தின் டைட்டிலை ’எதற்கும் துணிந்தவன்’ எனச் சூட்டியிருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.

  ஆம், சூர்யா எதற்கும் துணிந்தவர்!  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published: