மக்கள் நீதி மய்யத்தின் ஓராண்டு: அரசியல்வாதியாக கமலின் ஓராண்டு செயல்பாடு - ஓர் அலசல்

தமிழிசைக்கு எதிராக குரல் எழுப்பியதால் கைது செய்யப்பட்ட சோபியாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். கருணாநிதி உடலை அடக்கம் செய்வதற்கு மெரினாவில் இடம் வழங்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

மக்கள் நீதி மய்யத்தின் ஓராண்டு: அரசியல்வாதியாக கமலின் ஓராண்டு செயல்பாடு - ஓர் அலசல்
கமல் ஹாசன்
  • News18
  • Last Updated: February 21, 2019, 11:00 PM IST
  • Share this:
தமிழ் திரைவுலகுக்கு மட்டுமல்ல, இந்திய திரையுலகுக்கே கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக ஜாம்பவான்களாகத்தான் இருந்துவருகிறார்கள். சினிமாவில் நிறைய பரிச்சார்த்த முயற்சிகளை அறிமுகப்படுத்தியபோதிலும், நடிப்பில் பல பரிமாணங்களை வெளிப்படுத்தியபோதிலும், கமல் படங்களை விட ரஜினியின் படங்களுக்கு அதீத எதிர்பார்ப்பு இருக்கும். படத்தின் வசூலிலும் ரஜினி படங்களின் வசூலை கமல் படங்கள் நெருங்கியது இல்லை.

மக்கள் நீதி மய்யம் தொடக்க விழா


அரசியல் களத்திலும் ரஜினியின் வருகைக்கு இருந்த எதிர்பார்ப்பில் ஒரு பகுதிகூட கமலின் வருகைக்கு இருந்தது கிடையாது. இன்னும் சொல்லப்போனால், கமலுக்கும் அரசியலுக்கு வருவது குறித்த எந்த விருப்பமும் இருந்தது கிடையாது. ’ஒரு கட்சியும் வேணாம், ஒரு கொடியும் வேணாம்’ என்று ரஜினி, அரசியலை சினிமாவுக்குள் இழுத்தபோது, ’ராஜா கைய வைச்சா, அது ராங்கா போனதில்லை’ என்று சினிமாவில் புதுமையை புகுத்துவதில் ஆர்வம் காட்டிக் கொண்டிருந்தார் கமல்ஹாசன்.


கமல்ஹாசன்


ரஜினி அடுத்தடுத்த படங்களில் அரசியலுக்கு காய்கள் நகர்த்திக் கொண்டிருந்தபோதும், கமல்ஹாசனின் குறி ஆஸ்காரை நோக்கியே இருந்தது. 2000-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் ’கட்சிகளையும் பதவிகளையும் நான் விரும்ப மாட்டேன். காலத்தின் கட்டளைகளை நான் மறுக்கமாட்டேன்.’ என்று ரசிகர்களுக்கு ரஜினி சமிக்ஞையால் சொன்ன போதும், ’இதயம் என்பது சதைதான் என்றால் எறிதழல் தின்றுவிடும், அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்’என்று ரசிகர்களுக்கு இருப்பை போதித்துக் கொண்டிருந்தார். ஆனால், காலம் விசித்திரமானது. அரசியல் களத்தில் கமலை முன்னதாக இறக்கிவிட்டிருக்கிறது. சினிமாவில் விடுப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனை அவரே விரும்பி ஏற்றுள்ளார் என்றுதான் கூறவேண்டும்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன்
’நான், அரசியலுக்கு தாமதமாக வந்தது வருத்தமாக இருக்கிறது’ என்று அவரை வருத்தப்படவும் வைத்துள்ளது இந்த அரசியல் பயணம். ஓராண்டு அரசியல் பயணம் அவரை மகிழ்ச்சியாக உணர வைத்துள்ளதாகவே இதன்மூலம் புரிந்துகொள்ள முடிகிறது. மக்கள், அவரை பெரிதும் நம்புவதாக அவர் நம்புகிறார். இந்த ஒரு வருட அரசியல் பயணத்தில் ரஜினிகாந்த், கமலை சீண்டாவிட்டாலும், கமல்ஹாசன் அவ்வப்போது ரஜினியை சீண்டிப் பார்க்கவே செய்துள்ளார். அதுதான் அரசியல். அது தெரிந்தேதான் அதில், களமிறங்கி தற்போது வேட்டியையும் மடித்துக் கட்டியுள்ளார் கமல்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன்


மக்கள் நீதி மய்யம் கட்சியை கமல்ஹாசன் தொடங்கி இன்றுடன் இரண்டாம் ஆண்டு தொடங்குகிறது. இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை கமல் மற்றும் கட்சித் தொண்டர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொடிக் கம்பம் நட்டு கொடி பறக்கவிடப்பட்டது. சென்னையிலுள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் கமல் கட்சிக் கொடியேற்றிவைத்தார்.

கட்சித் தொடங்கிய 2017 பிப்ரவரி 21-ம் தேதி ராமேஸ்வரத்திலுள்ள மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் வீட்டுக்குச் சென்று கலாமின் சகோதரர் முத்து மீரான் மரைக்காயரிடம் ஆசிபெற்று, அவரது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். அங்கிருந்து அப்துல் கலாம் படித்த பள்ளிக்குச் செல்ல கமல் திட்டமிட்டிருந்தார். ஆனால், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதனையடுத்து, ராமேஸ்வரம் மீனவர்களைச் சந்தித்துவிட்டு ராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டார். பின்னர், மாலை 6 மணி அளவில் மதுரை ஒத்தக்கடையில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களுக்கு மத்தியில் ’இவன் யாரென்று தெரிகிறதா, தீயென்று புரிகிறதா’ என்ற பாடல் பின்னணியில் ஒலிக்க அவரது கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார் கமல்ஹாசன்.

கலாம் சகோதரிடம் வாழ்த்து பெறும் கமல்


அதுவரையில், தமிழகத்தில் நிரம்பியிருக்கும் கட்சிகள், ஒன்றிரண்டு அடர் வண்ணங்கள் நிறைந்த கட்சிக் கொடியாக கொண்டிருந்துவருகின்றன. ஆனால், கமல்ஹாசன் ஏற்றிய கொடி, முற்றிலும் தமிழ் சூழலுக்கு புதிதாக இருந்தது. அந்தக் கொடி முழுவதும் வெண்மை நிறத்தில் ஒன்றை ஒன்று பற்றிக் கொண்டிருக்கும் ஆறு கைகளின் படத்தை மட்டும் கொண்டிருந்தது. ஆனால், அந்தக் கொடியும் ஒன்றை உறுதி செய்தது. தமிழகத்தில் அரசியலின் அடிநாதமாக கருப்பு, சிவப்பு நிறம் இருக்கிறதென்று. அவருடைய கொடியில் வெள்ளையைத் தவிர்த்த மீதமிருந்த இரண்டு நிறங்கள் அவைதான். கொடியை ஏற்றிய பிறகு பின்னணி இசை ஒலிக்க, அவர் நடந்து சென்று மேடையில் ஏறி கையை உயர்த்தி பேசத் தொடங்கும் முன்புவரை திரையில் ஒளிபரப்பாகிய ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு ப்ரேமும் சினிமாவை மிஞ்சும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இருந்தது. நிகழ்ச்சியின் தொடக்கத்தை அப்படிதான் வடிவமைத்திருந்தார் கமல்ஹாசன். தான், ஒரு தேர்ந்த திரைக் கலைஞர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருந்தார்.மேடையேறிய சில நிமிடங்களிலேயே ‘மக்கள் நீதி மய்யம்’ என்று கட்சிப் பெயரை அறிவித்தார் கமல். திராவிடம் என்பது 60 ஆண்டு கால தமிழக அரசியலின் அச்சாரம் என்பது கமலுக்கு நன்றாக தெரிந்திருந்தும் அந்த வார்த்தை இல்லாமல் கட்சியின் பெயரை உருவாக்கியிருந்தார் கமல். மேடையில் அவருடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி சட்டமன்ற உறுப்பினர் சோம்நாத் பாரதி, விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் ஆகியோரும் அமர்ந்திருந்தனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் கமலின் அரசியல் வருகைக்கு வாழ்த்து தெரிவித்த வீடியோ பெரிய திரையில் ஒளிபரப்பப்பட்டது. அந்தப் பொதுக்கூட்டத்தில இத்தனை அம்சங்கள் இருந்தும் அன்று அவரது உரை, அத்தனை மெச்சத்தக்கதாக இல்லை என்றே அரசியல் விமர்சகர்கள் கருதினார்கள்.

மக்கள் நீதி மய்யம் தொடக்க விழா


மேடையில் அவர் பேசும்போது, ‘உச்ச நீதிமன்றம் வரை சென்றும் தீராத தண்ணீர் பிரச்னைக்கு சரியான பேச்சுவார்த்தை இல்லாததுதான் காரணம் என்றார். பெண்கள் மீதான வன்முறைக்கு தீர்வு என்ன என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, நம் மனம் மாறாததுதான் காரணம் என்று பதிலளித்தார். தமிழகத்தில் ஏன் தமிழ் அழிந்துகொண்டிருக்கிறது என்ற கேள்விக்கு ’தொடர்ந்து தமிழில் பேசுங்கள்’ என்றார். உங்கள் பயணத்தை எதற்காக ராமேஸ்வரம், எதற்காக கலாம் வீட்டிலிருந்து தொடங்கினீர்கள் என்ற கேள்விக்கு, கலாம் வீடு ராமேஸ்வரத்தில் இருப்பதால் அங்கிருந்து தொடங்கினேன். ஆனால், கலாம் வீட்டை நோக்கி ஏன் சென்றீர்கள் என்றதற்கு பதில் இல்லை. காந்தி, அம்பேத்கர், பெரியார் யாருடைய பாதை உங்களுடைது என்ற கேள்விக்கு மூன்று பேருமே பிடித்த தலைவர்கள் என்றார். மக்கள் நலன்தான் கட்சியின் கொள்கை என்றார். ஒன்றை மட்டும் அவர் உறுதியாகக் கூறினார். தன்னுடைய நிலைப்பாடு, இடதுமல்ல, வலதுமல்ல,  ‘மய்யமானது’ என்று.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஒரு ஆண்டு பயணம்: ஒரு பார்வை

கட்சி தொடங்கியதிலிருந்து இன்றுவரை, அரசியல் களத்தில் தன்னுடைய இருப்பை எதோவொரு வகையில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் கமல். பெரும்பாலும், அவரது மய்யமான நிலைப்பாடு தமிழக நலன் சார்ந்தே இருந்துவருகிறது. நீட் தேர்வுக்கு எதிராக மிகக் கடுமையாக குரல் எழுப்பினார். உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு தாமதப்படுத்திய நிலையில், உடனே மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு வீடியோ மூலம் கோரிக்கைவிடுத்தார்.அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கர்நாடாகாவைச் சேர்ந்த சூரப்பாவை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்துக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். தூத்துக்குடி மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். ’போராட்டம், போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்’ என்று ரஜினிகாந்த் கூறியபோதும், மக்கள் போராட்டம் நியாயமானது. காவல்துறைதான் வன்முறையை கையாண்டுள்ளது என்று கமல்ஹாசன் உறுதியாகக் கூறினார். தமிழிசைக்கு எதிராக குரல் எழுப்பியதால் கைது செய்யப்பட்ட சோபியாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். கருணாநிதி உடலை அடக்கம் செய்வதற்கு மெரினாவில் இடம் வழங்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

கமல்ஹாசன்


கஜா புயல் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்தார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டார். அவரது, கட்சி மூலம் உதவிகளைச் செய்தார். சர்க்கார் படத்துக்கு அ.தி.மு.க நெருக்கடி கொடுத்தபோது கண்டனம் தெரிவித்தார். அவருடைய நிலைப்பாடுகள் பெரும்பாலும் தமிழக மக்கள் விருப்பத்தை ஒத்து, தமிழக நலனைக் காக்கும் வகையிலேயே இருந்துவருகிறது.

இருப்பினும், ஒரு விவகாரத்தில் ஆதரவாக இருந்தாலும், எதிர்ப்பாக இருந்தாலும் தனிநபரைப் போல ட்விட்டரில் கருத்தைப் பதிவிட்டு அவருடைய பங்களிப்பை முடித்துவிடுகிறார். கடந்த வருடத்தில் அதி தீவிர பிரச்னையாக உருவெடுத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்திய போராட்டம் உள்ளிட்ட எதிலும் போராட்டக்களத்தில் பங்கேற்கவில்லை. உண்மையில் அவருடைய கட்சிக்கு தொண்டர்கள் பலம் எவ்வளவு இருக்கிறது என்பதை அவர் தெரிந்துகொள்ள விரும்பவில்லை என்றே தோன்றுகிறது.

கமல், தனிப்பட்ட ஒரு நபராக அரசியல் எதிர்வினைகளை ஆற்றினாரே தவிர, ஒரு கட்சியாக அவரின் செயல்பாட்டை வெளிப்படுத்தவில்லை. இந்த ஓரிரு வருடங்களாக மிகத் தீவிரமாக அ.தி.மு.கவை மட்டுமே விமர்சனம் செய்துவந்தார். மக்களவைத் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்தபிறகு, தி.மு.கவையும் மு.க.ஸ்டாலினையும் மிகக் கடுமையாக விமர்சனம் செய்யத் தொடங்கியுள்ளார். தி.மு.கவும், அ.தி.மு.கவும் மிகப் பெரிய கூட்டணியுடன் களம் காணத் தயாராகிவரும் நிலையில், இருகட்சிகளையும் தனியாக எதிர் கொள்ள முடிவெடுத்துவிட்டார் கமல்ஹாசன்.

ஸ்டாலின், M K Stalin,
மு.க.ஸ்டாலின்


கட்சி தொடங்கி ஒரு ஆண்டைக் கடந்துவிட்ட பிறகும் கொள்கை எனும் கேள்விக்கு ’மக்கள் நலன் என்பதுதான் கட்சியின் கொள்கை என்கிறார். அரசியலை ஆழப் புரிந்தவர்களுக்குத் தெரியும், கொள்கை என்பது ’மக்கள் நலன்’ என்ற வார்த்தைகளுக்குள் அடங்கிவிடாது என்று. அது, நிலைப்பாடு சார்ந்தது.

இந்தியும் சேர்த்து மும்மொழிக் கொள்கை என்பது பா.ஜ.கவின் நிலைப்பாடு. இந்தி திணிப்பை ஏற்க முடியாது. இரு மொழிக் கொள்கை என்பது தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர் உள்ளிட்ட மாநில சுயாட்சி பேசும் கட்சிகளின் நிலைப்பாடு.

நீட் தேர்வு தேவை என்பது பா.ஜ.க, காங்கிரஸின் நிலைப்பாடு. நீட் கூடாது என்பது மாநில நலன் பேசும் கட்சிகளின் நிலைப்பாடு. எழுவர் விடுதலையை மறுப்பது தேசியக் கட்சிகளின் நிலைபாடு. எழுவர் விடுதலையை வலியுறுத்துவது மாநிலக் கட்சிகளின் நிலைப்பாடு. இதுபோன்ற எண்ணற்ற விவகாரங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிலைப்பாடு எது என்பதை விவரிப்பதையும் உள்ளடக்கியதுதான் கொள்கை என்பதை கமல்ஹாசன் உணரவேண்டும். இந்தப் பிரச்னைகளில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிலைபாடு எது என்பதைவைத்தே, தமிழக மக்கள் உங்களைத் தேர்வு செய்ய முடியும்.

கமல்ஹாசன், அவரது அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்துவதற்கு முன்னதாகவே ஒருமுறை இயக்குநர் பாரதிராஜா ஒரு முறை மேடையில் பேசும்போது, ’கமல்ஹாசனை சீண்டாதீர்கள். அவர், அரசியலுக்கு வந்தால் முழுவதும் கற்றுக்கொண்டு வருவார். உங்களால் அவரை(கமலை) எதிர்கொள்ள முடியாது’ என்று பேசியிருந்தார். அவர் கூறியதுபோல, கமல்ஹாசன் அரசியலுக்கு வந்துவிட்டார். ஆனால், களத்துக்கு தயாராக வந்துள்ளரா? என்பதற்கு வரும் காலம்தான் பதில்சொல்லும்.

Also see:

First published: February 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்