அம்மாவும், தமிழ் சினிமாவும்...

CM Doss | news18
Updated: May 14, 2018, 4:13 PM IST
அம்மாவும், தமிழ் சினிமாவும்...
CM Doss | news18
Updated: May 14, 2018, 4:13 PM IST
உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தமிழ் சினிமா, தொப்புள் கொடி உறவான அம்மாவுக்கு சற்று அதிக பங்களிப்பையே கொடுத்து வருகிறது. குறிப்பாக உறவுகளின் சிறப்பை குறிக்கும் தமிழ் பாடல்களில் அம்மாவுக்கு என்றுமே தனிச்சிறப்பு தான். அம்மா என்ற உறவை போலவே.

இந்த உலகத்தில் தப்பான பெண் இருக்கலாம் ஆனால் தப்பான தாய் இருக்கவே முடியாது என ஜனகராஜ் கூறி முடித்ததும்,

"காலையில் தினமும் கண் விழித்தால் நான் கை தொழும் தேவதை அம்மா" என்ற பாடல் நியூ படத்தில் இடம் பெற்றிருக்கும். ஏ.ஆர்.ரகுமானின் மெட்டு உடலுக்கு, கவிஞர் வாலி வரி கொடுத்து உயிர் கொடுத்திருப்பார்.

"இமை போல் இரவும் பகலும் எனை காத்த அன்னையே!
உனதன்பு பார்த்த பின்பு அதை விட வானம் பூமி யாவும் சிறியது
தாயின் அன்புக்கு முன்பு வானமும் பூமியும் சிறியது"   என அடர்த்தியான வரிகளை உள்ளடக்கி இருக்கும் அந்த பாடல்.

வியாபாரி படத்தில், "ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவை வாங்க முடியுமா?"   என்ற பாடல் உலகில் மதிப்பற்ற ஒரு உறவு அம்மாவின் உறவு என மனம் அழுந்த சொல்லும்
Loading...
"பட்டினியா கிடந்தாலும் பிள்ளைக்கு பால் கொடுப்பா
பால் குடிக்கும் பிள்ளை முகம் பார்த்து பசி தீர்ப்பா" என்ற வரிகள், நாம் அனைவரும்  அன்னையிடத்தில் உணர்ந்த ஒரு விஷயம் என்பதை உணர வைக்கும். அது தான்  அந்த பாடல் நம்மை ஆட்கொண்டதற்கான காரணம்.

அம்மா பாடல் என்றாலே நமக்கெல்லாம் உடனே ஞாபகம் வருவது, மன்னன் படத்தில் வரும் "அம்மா என்றழைக்காத உயிரில்லையே" என்ற பாடல். ரஜினியின் பிள்ளைமுகத்திற்கு இசைஞானி மெட்டு கொடுக்க "பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணிவைரம்
அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா?" என்று தாய்க்கு ஈடு ஏதும் இல்லை என கவிஞர் வாலி சொல்லியிருப்பார்.

உழைப்பாளி படத்தில் வரும் "அம்மா அம்மா எந்தன் ஆருயிரே
நானும் நீயும் என்றும் ஓருயிரே" என்ற பாடலும் வாலியின் வைர வரிகளில் அம்மா புகழ் பாடும் பாடல்.

திருப்புமுனை திரைப்படத்தில் "அம்மான்னா சும்மா இல்லடா" என்று தொடங்கும் பாடலை சோக கீதத்தில் உருவாக்கி இருப்பார் இளையராஜா. "பெத்தவளை மறந்தா அவன் செத்தவனே தாண்டா" என அழுத்தமான வரியை புகுத்தி இருப்பார் இளையராஜா. ராஜாவின் பார்வையிலே படத்தில் வரும் ”அம்மன் கோவில் எல்லாமே எந்தன் அம்மா உந்தன் கோவிலம்மா” என்ற பாடலும் இளையராஜாவின் பெஸ்ட் கலெக்‌ஷன்.

தளபதி படத்தில் முக்கிய திருப்புமுனையாக வரும் அம்மா பாடல் தான் ”சின்னத்தாயவள் தந்த ராசாவே”. கூட்ஸ் வண்டியின் சத்தத்தோடு தொடங்கும் அந்த பாடல் என்றும் பசுமை ரகம். இளையராஜாவும், வாலியும் இணைந்து கொடுத்த பொக்கிஷம் அது.

தென்மேற்குப் பருவக்காற்று படத்தில் வரும் "கள்ளிக்காட்டில் பிறந்த தாயே" என்ற பாடல் வைரமுத்துவுக்கு தேசிய விருது வாங்கி கொடுத்தது.  தாயின் உழைப்பை, தியாகத்தை, அன்பை வெளிக்காட்டும் இந்த பாடலில் வரும்

”சொந்தம் நூறு சொந்தம் இருக்குது
பெத்த தாயி போல ஒண்ணு நெலைக்குதா
சாமி நூறு சாமி இருக்குது அட
தாயி ரெண்டு தாய் இருக்குதா?” என்ற வரிகளே அந்த பாடலின் தரத்துக்கு சான்று.

தர்மதுரை படத்தில் வரும் “போய் வாடா....... என் பொலி காட்டு ராசா” என்ற பாடல், மகனுக்கு தாய் கொடுக்கும் ஊக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் வைரமுத்து எழுதி இருப்பார்.

”வைகை நதி நடந்தா வயக்காடு முந்தி விரிக்கும்
வல்லவனே நீ நடந்தா
புல்லுவெளி நெல்லு விளையும்”

என்ற வரிகளில் தாய்மை கசிந்து நிற்கும்.

வரலாறு படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வரும் ”தீயில் விழுந்த தேனா?” பாடல் தாயை காக்க வேண்டிய மகனின் பார்வையில் இருந்து உருவாகி இருக்கும்.

“எனக்கேதும் ஆனதுன்னா, உனக்கு வேறு பிள்ளையுண்டு!
உனக்கேதும் ஆனதுன்னா,எனக்கு வேற தாயிருக்கா?” என வைரமுத்து சிலாகித்து எழுதியிருப்பார்.

இந்த கால இளைஞர்களுக்கு பிடித்த அம்மா பாடல்களில் ஒன்று எம். குமரன் படத்தில் வரும் ”நீயே நீயே நானே நீயே
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே” பாடல் ,

“வேருக்கு நீரை விட்டாய்
நீராய் கண்ணீரை விட்டாய் பூவாச்சு என் தோட்டமே” என்ற வரிகளில் அந்த பாடலின் ஜீவன் இருக்கும். ”புது விடியல் வேண்டும் எனக்கு எந்த நாளும் நீதான் கிழக்கு” என்று அந்த பாடல் முடியும் போது நம் தாயின் முகம் நம் கண்முன்னே நிச்சயம் வந்து போகும்.

ராம் படத்தில் வரும் ”ஆராரிராரோ நான் இங்கு பாட” என்ற பாடல் இனிமையின் உச்சம்.

”காலத்தின் கணக்குகளில் செலவாகும்
வரவும் நீ...... சுழல்கின்ற பூமியில் மேலே சுழலாத
பூமியும் நீ”  என்று வரி கொடுத்து கவிஞர் சினேகன் , அம்மா மீது நம்மை சினேகம் கொள்ளச்செய்திருப்பார்.

வேலையில்லா பட்டதாரி படத்தில் கதையின் போக்கையே மாற்றக்கூடிய கட்டத்தில் வரும் ”அம்மா அம்மா
நீ எங்க அம்மா” பாடலை நடிகர் தனுஷ் எழுதியிருப்பார்.

“ஊரும் பிரிவில்லை தயங்காதே என் கண்ணே
உலகம் விளையாட உன் கண்முன்னே” என்ற வரிகள் நமக்கெல்லாம் ஊக்கம் தருபவை.

நாம் பார்த்த பாடல்கள் சில, பார்க்காத பாடல்கள் பல. நடுநிசி வானத்தில் உற்றுப்பார்க்கும் இடமெல்லாம் நட்சத்திரம் பளிச்சிடுவதை போல தமிழ் சினிமாவில் எங்கு பார்த்தாலும் அம்மா பாடல்கள் எதிரொலித்துக்கொண்டே இருக்கும். ஏனென்றால் அம்மா என்றுமே போற்றப்படுபவள், போற்றத்தக்கவள்.

சி.முருகதாஸ்
First published: May 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்