தண்ணீர் பிரச்னையை பேசிய தமிழ் சினிமாக்கள்!

நூறு ஆண்டுகால வரலாற்றை கொண்ட தமிழ் சினிமாவில் தன்ணீர் பிரச்னையை பேசிய படங்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருப்பது வேதனைக்குரியதே.

தண்ணீர் பிரச்னையை பேசிய தமிழ் சினிமாக்கள்!
கத்தி
  • News18
  • Last Updated: July 5, 2019, 8:55 PM IST
  • Share this:
காலத்தின் கண்ணாடியாய் சமூகத்தில் அரங்கேறும் அவலங்களை கலையின் மூலம் பிரதிபலிப்பதே ஒரு படைப்பிற்கு ஆகச்சிறந்த அழகு. அந்தவகையில் நாடெங்கும் தலைவிறித்தாடும் தண்ணீர் பிரச்னையை தீவிரமாக பேசிய சில தமிழ் திரைப்படங்களும் இருக்கின்றன. அதில் பேசப்பட்ட தண்ணீர் பிரச்னையும் அதற்கான தீர்வாய் அவர்கள் முன்னிறுத்தும் கருத்துகளையும் பார்ப்போம்.

கே.பாலசந்தரின் தண்ணீர் தண்ணீர்:

தமிழ் சினிமாவில் தண்ணீர் பஞ்சத்தை அதன் கோர முகத்தை பொட்டில் அறைந்தார் போல சொன்ன ஒரு மைல்கல் சினிமா தண்ணீர் தண்ணீர். கே.பாலசந்தர் இயக்கத்தில் கோமல் சுவாமிநாதனின் கதை, வசனத்தில் 1981-ம் ஆண்டு வெளியான இந்தப் படம்தான் தற்போதுவரை தமிழில் எந்த சமரசமுமின்றி தண்ணீர் பிரச்னையை காட்சிக்குக் காட்சி தோலுரித்துக் காட்டிய ஒரே சினிமா.


தண்ணீர் பற்றி பேசும் சினிமா


வறண்டு கிடக்கும் குளம் குட்டைகள், பிளந்து கிடக்கும் ஏரி குளங்கள், காய்ந்து போன மரங்கள், தாகத்தில் தவிக்கும் ஊர் மக்கள் என அத்திப்பட்டி கிராமத்தை மையப்படுத்தி ஒட்டுமொத்த தமிழகத்துக்குமான பிரச்னையை இதில் பேசிய கே.பாலச்சந்தர் தனது கலைத் தாகத்தை தண்ணீர் தாகத்தை கொண்டு தீர்த்திருப்பார்.

ரஜினியின் புகைப்படத்துக்காக எடுத்து வந்த பானை தண்ணீரை கீழே சிந்தும் சிறுவனில் ஆரம்பித்து ஊர் மக்களே சேர்ந்து கட்டும் கால்வாய்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அரசாங்க அதிகாரி வரை ஏழ்மையின் பரிதாபத்தையும் அதிகார வர்கத்தின் அடக்கு முறைகளையும் காட்சிக்கு காட்சி இப்படம் அதன் வேதனையோடு பதிவு செய்திருக்கும்.
கே.பாலசந்தரின் தண்ணீர் தண்ணீர் படம்


படத்தின் நாயகி செவந்தி மூன்று பானை நீரை சுமந்துகொண்டு வேகாத வெயிலில் பல மைல்கள் எடுத்துவரும் காட்சி படம் வெளியாகி இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்னும் ரசிகனின் நினைவுத்திரையில் இருந்து நீங்காத ஒன்று. இன்றைய தேதியிலும் தமிழகத்தின் மூலை முடுக்குகளில் இப்படி எத்தனையோ செவந்திகள் குடங்களை சுமந்துகொண்டு தண்ணீருக்காக திரிகிறார்கள் என்பதை நினைத்தாலே உள்ளம் உறைவதை எவராலும் தடுக்க முடியாது.

படத்தின் ஒரு காட்சியில் ஊர் மக்கள் ஒன்றுகூடி தேர்தலை புரக்கணிப்பார்கள். அப்போது ஒருவர் மட்டும் பூத்துக்குள் சென்று வருவார். அவரை ஊர் மக்கள் சேர்ந்து அடிக்கச் செல்ல,” ஓட்டுபோட போகவில்லை, பூத்துக்குள் நல்ல தண்ணி இருந்தது. அதை குடிக்கத்தான் சென்றேன்” என அவர் சொன்னதும் கலங்கியது ஊர் மக்கள் மட்டுமல்ல ரசிகர்களும்தான்.

கே.பாலசந்தர்


தண்ணீர் பிரச்னையையும் அதனால் கிராமத்தின் பொடியனில் தொடங்கி, ஊர் பெரியவர் வரை எல்லோருடைய வாழ்வாதாரமும் சிதைந்து போன கொடூரத்தையும் இப்படி காட்சிக்குக் காட்சி சொன்ன ஒரு சினிமா தமிழில் அதன்பின் வரவேயில்லை என்ற முறையில் தமிழ் சினிமாவின் தவரிக்க முடியாத ஒரு கிளாசிக் படமாக உயர்ந்து நிற்கிறது தண்ணீர் தண்ணீர்.

அதேசமயம் அந்தப் படம் வெளிவந்து கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் ஆகியும், அதில் சொல்லப்பட்ட பிரச்னைகள் துளியும் குறையவில்லை என்ற சுடும் உண்மையும் உள்ளத்தை உலுக்குகிறது.

தண்ணீர் இன்றி தவிக்கும் விவசாயிகளின் தற்கொலை பற்றி பேசிய கத்தி:

தண்ணீர் தண்ணீர் படத்துக்குப் பின் தண்ணீர் பிரச்னையை பிரதானமாகக் கொண்டு வெளியான படம் கத்தி. தண்ணீர் தண்ணீர் படம் தண்ணீர் பஞ்சத்தை அதன் வலியோடு யதார்த்தமாக பதிவு செய்தது என்றால், கத்தி படம் கார்ப்ரேட் நிறுவனங்கள் விவசாய நிலங்களை அபகரித்து காசாக்குவதை கமர்சியலாகச் சொல்லி வெற்றிபெற்றது.

கத்தி படம்


கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தால் தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் தற்கொலை செய்வதில் தொடங்கி, இந்தியாவில் ஒவ்வொரு அரை மணிநேரத்திற்கும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கிறார். தாமிரபரணி ஆற்றில் மட்டும் ஒரு நாளைக்கு 9 லட்சம் லிட்டர் தண்ணீரை கார்ப்பரேட் நிறுவனங்கள் உறிஞ்சுகிறார்கள் என நிகழ்கால தண்ணீர் அரசியலை ஒரு கமர்சியல் படத்தின் மூலம் பாமரனுக்கும் கொண்டு சேர்த்ததில் கத்தி எல்லோராலும் பாராட்டப்பட்டது.

தண்ணீர் பற்றாக்குறையையும் அதனால் பாதிக்கப்படும் விவசாயிகளின் வேதனையையும் இன்றைய தலைமுறைக்கு உரக்கச் சொல்லியது கத்தி.

கத்தி படத்தில் தற்கொலை செய்துக்கொள்ளும் விவசாயிகள்


நகரத்தில் குழாயை திறந்தால் தண்ணி என்றிருப்பததால்தான் அவர்களுக்கு விவசாயிகளின் வேதனை புரியவில்லை என்று நாயகன் எடுக்கும் முடிவு அபத்தமானதாக இருந்தாலும் நகரங்களில் தண்ணீர் இல்லாமல் ஒருநாள் எப்படி இருக்கும் என்ற பகீர் பிம்பத்துக்கு திரை வடிவம் கொடுத்த வகையில் அந்த காட்சிகள் ரசிகர்களை பதற வைத்தது.

கத்தி படத்தின் இயக்குனர் ஏ.ஆர்முருகதாஸ்-நடிகர் விஜய்


சம காலத்தின் தண்ணீர் பிரச்னையும் அதன் பின்னணியில் இருக்கும் கார்ப்பரேட் அரசியல் குறித்த விழிப்புணர்வையும் ஒரு கமர்ஷியல் படத்தின் மூலம் மக்கள் மனதில் விதைத்த விதத்தில் கத்தி முக்கியத்துவம் பெறுகிறது.

ஆழ்துளைக் குழாயில் கூட தண்ணீர் கிடைக்காததை பேசிய அறம்:

கத்திக்கு அடுத்தபடியாக குடிநீர் பஞ்சத்தை மையக்கதையாகக் கொண்டு வெளிவந்த இன்னொரு படம் அறம். நீரின்றி வறண்டு போயிருக்கும் காட்டூர் கிராமம். அடிப்படைத் தேவையான தண்ணீர் கூட இல்லாத இதே தேசத்தில் கோடிகளை செலவு செய்து மண்ணில் இருந்து விண்ணிற்கு ராக்கெட் அனுப்பும் முரணை அதிகார வர்க்கத்துக்கு எதிரான குரலாய் ஒலிக்கச் செய்த படம் அறம்.

ஆழ்துளைக் குழாய் குலி தண்ணீர் கிடைக்காத கிராமம் பற்றி பேசிய அறம் படம்


ஆழ்துளைக் குழாய் குலி தண்ணீர் கிடைக்காத காரணத்தினால் மூடாமல் இருக்க, அதில் சிக்கிவிடும் குழந்தையை மீட்டெடுப்பதுதான் இப்படத்தின் மையக்கரு. ஆனால் அதில் ஆரம்பம் முதல் இறுதிவரை தண்ணீர் பஞ்சம், கிராமங்களின் வறட்சி என எளிய மக்களின் கூக்குரலை படறவிட்டிருக்கும் கோபி நயினாரின் கதையமைப்பு உச்சம்.
குடிநீருக்காக சாலைகளில் இறங்கி போராடும் கிராமவாசிகளின் வேதனையை பதிவு செய்ததில் தொடங்கி, விவசாயிகளுக்கு கிடைக்காத தண்ணீர், வாட்டர் பாட்டில் நிறுவனங்களுக்கு மட்டும் எப்படிக் கிடைக்கிறது என்பது போன்ற கேள்விகளையும் எழுப்பியது இப்படம்.

தண்ணீர் பேசிய படங்கள்


இறுதியில் தங்களுடைய தேவைகளை மக்களே ஒன்றிணைந்து நிறைவேற்றிக் கொள்வதன் மூலம் மக்களுக்கான சினிமாவாக மாறியது அறம்.
தண்ணீர் தண்ணீர், கத்தி, அறம் ஆகிய படங்கள் தண்ணீர் பிரச்னையை பிரதானமாய் கொண்டு தமிழில் வெளிவந்த படங்கள்.

நதிநீர் இணைப்பை பறைசாற்றும் விதமான படம் லிங்கா:

சில படங்களில் அங்கும் இங்குமாய் சில காட்சிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளின் தண்ணீரின் கண்ணீர் கதைகளை திரையில் பதிவு செய்திருக்கிறார்கள். அதில் ஒரு படம் லிங்கா. தென் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் அணைக்கட்டை கட்டிய பென்னி குக்கின் வாழ்க்கை கதையைதான் ரஜினிக்கேற்ப இப்படம் மாற்றி காட்டியிருக்கும்.தனது நீண்டநாள் கனவான நதிநீர் இணைப்பை பறைசாற்றும் விதமான கதை என்பதால் இதில் ஆர்வத்துடன் நடித்தார் ரஜினி. வணிக ரீதியாக படம் தோல்வியை தழுவினாலும், தமிழில் தண்ணீர் பிரச்னையை பேசிய படங்களில் ஒன்றாக லிங்கா மாறியது.

கடல் நீரை குடிநீராக மாற்றுவதை பேசிய படம் கனா கண்டேன்:

தமிழில் தண்ணீர் கதையை பேசிய படங்களில் சற்று வித்தியாசமான ஒரு படம் கனா கண்டேன். தண்ணீர் விற்றுப் பிழைக்கும் தாய்க்கு பிறந்த ஒருவன், அறிவியல் ஆராய்ச்சியின் மூலம் கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டத்தில் வெற்றி பெறுகிறான் என்பதுதான் இப்படத்தின் ஆதாரப்புள்ளி.

கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்றால் கோடிகளை அள்ளலாம் என்றாலும், பொதுமக்களுக்கு மட்டுமே இந்தத் திட்டம் உதவ வேண்டும் என்ற நாயகனின் கொள்கையே இந்தப் படம் கவனம்பெறக் காரணம். ஆனால் அதன்பின் பணத்தாசை பிடித்த வில்லன், அவனுக்கு எதிராக போராடும் சாமான்யன் என சராசரி படமாக இதன் போக்கு மாறியது.

எனினும் இளைஞர் வடிவமைக்கும் குடிநீர் திட்டம், அதை கண்டுகொள்ளாத அரசாங்கம் என பேசியதில் இப்படம் கவனம் பெற்றது.

விவசாயிகளுக்காக பேசப்பட்ட சேரனின் பாண்டவர் பூமி:

குடும்ப உறவுகளின் மேன்மையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட சேரனின் பாண்டவர் பூமி படத்தின் ஒரு பகுதியில் புதிதுபுதிதாக களமிறங்கும் இயந்திரங்களால் விவசாயிகளின் நிலமை திண்டாட்டம் அடைவதை தத்ரூபமாக காட்சிப்படுத்தியிருப்பார் சேரன். அதில் கிராமத்துக்கு வரும் தோல் ஃபேக்டரியை எதிர்த்து ராஜ்கிரணும் ஊர் மக்களும் பேசும் வசனங்கள் விவசாயகிகளின் உள்மனக் குரலாய் திரையில் ஒலித்திருக்கும்.

தண்ணீர் பஞ்சத்தை எதிர்த்து போராடும் இளைஞர்களைப் பற்றி பேசிய பூமராங்:

அதர்வா நடிப்பில் கண்ணன் இயக்கத்தில் வெளிவந்த பூமராங் படத்தின் மையக்கருவும் தண்ணீர் பிரச்னைதான். ஐடி துறையில் இருந்து வெளியேறும் இளைஞர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று அங்கிருக்கும் தண்ணீர் பஞ்சத்தை எதிர்த்து போராடுவதுதான் இப்படத்தின் பிரதான கதை. நண்பர்களான அதர்வா, ஆர்.ஜே.பாலாஜி, இந்துஜா ஆகியோர் அரசாங்கத்தை நம்பாமல் அவர்களாகவே களத்தில் இறங்கி தண்ணீர் பிரச்னையை தீர்க்க புது திட்டங்களை கொண்டு வருகிறார்கள்.

ஆனால் அது பிடிக்காத அரசியல்வாதிகள் இவர்களை எதிர்க்க, அதை சமாளித்து இளைஞர்கள் எப்படி தண்ணீர் பஞ்சத்தை போக்கினார்கள் என்பதை இப்படம் மசாலாத்தன்மையுடன் சொல்லியிருக்கும்.

தண்ணீர் பஞ்சத்தை எதிர்த்து போராடும் இளைஞர்களைபற்றி பேசிய பூமராங் படம்


சமீப காலமாக போராட்ட களங்களில் இளைஞர்களின் குரல் ஒலிக்கத்தொடங்கியிருக்கும் நிலையில், அதை முன்வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருக்கும். அரசியல்வாதிகளை நம்பாமல் மக்களுக்கான பிரச்னைகளை இளைஞர்களே தட்டிக்கேட்க வேண்டும் என்ற கருத்தை வலுவாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டிருக்கும்.

இதே அதர்வா நடிப்பில் வெளியான சண்டிவீரன் படமும் தண்ணீர் சண்டையில் கலவர பூமியாக மாறியிருக்கும் 2  கிராமங்களை பற்றிய படம்தான். ஒரு ஊரில் இருக்கும் பெரியவர்கள் சிலர் பக்கத்துக்கு ஊருக்கு தண்ணீர் கொடுக்காமல் அநியாயம் செய்கிறார்கள். இதை அதர்வா தட்டி கேட்பதுதான் இப்படத்தின் மையக்கரு. இதன்மூலம் கிராமங்களுக்கு இடையிலான தண்ணீர் மோதலுக்கு இப்படம் திரை வடிவம் கொடுத்திருக்கும்.

2 கிராமங்களுக்கு இடையிலான தண்ணீர் பிரச்சனையை பேசிய  சண்டி வீரன் படம்


இந்தப் பட்டியலில் இறுதியாக வெளியாகி தவிர்க்கவே முடியாத ஒரு தடத்தை பதித்த படம் கேணி. இதுவரை தண்ணீர் பிரச்னையை பேசிய படங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட கிராமத்தின் பிரச்னையை மட்டுமே பேசியிருக்கும். ஆனால் முதல்முறையாக இரு மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர் பிரச்னையை துணிச்சலாக பேசி கவனம் பெற்ற படம் கேணி.

அதிகார வர்கத்தின் அரசியலால் வாழ்க்கையை இழந்த இரு பெண்கள், ஊர் மக்களின் தண்ணீர் பிரச்னையை கையில் எடுத்து போராடுவதுதான் இப்படத்தின் சிறப்பம்சம். மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர் பிரச்னையை அரசியலுக்கு எல்லாம் அப்பாற்பட்ட மனிதநேயத்தால்தான் தீர்க்க முடியும் என்ற கருத்தை இப்படம் வலியுறுத்தியிருக்கும். இப்படியொரு துணிச்சலான கதையில் பார்த்திபன், ஜெயப்ரதா, அனுஹாசன், ரேவதி என ஒரு நட்சத்திர பட்டாளமே சேர்ந்து நடித்ததும் கூடுதல் ஆச்சரியம் அளித்திருக்கும்.

கேணி படம்


ஏற்கனவே சொன்னதுபோல், நம் சமூகத்தின் அவலங்களை படைப்புகளின் மூலம் அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வதுதான் ஒரு கலைக்கான அழகு. ஆனால் நூறு ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட தமிழ் சினிமாவில், தன்ணீர் பிரச்னையை பேசிய படங்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருப்பது வேதனைக்குரியது. அதேசமயம் காலம் காலமாய் நாட்டையே உலுக்கி வரும் இந்தப் பிரச்னையை கையில் எடுத்த சினிமாக்களும் பாராட்டுக்குரியவையே.

செய்தியாளர் - ராகேஷ் பிரபாகர்
First published: June 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories