சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நடுவிக்கோட்டை கிராமத்தை சேர்ந்த பாண்டியன். இவர் தற்போது காரைக்குடியில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். சொந்த ஊரான நடுவிக்கோட்டையில் திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில் வந்து செல்வது வழக்கம். இங்கு குடும்பத்தினரோடு வந்தால் வீட்டில் சமைப்பதற்காக பாத்திரங்கள், குத்துவிளக்கு மற்றும் மின்விசிறி உள்ளிட்ட பொருட்கள் மட்டும் வீட்டில் வைத்திருந்தார்.
இந்நிலையில், இன்று காலை பாண்டியனின் வீட்டில் இருந்த சத்தம் வந்தது. இதனால் பக்கத்து வீட்டுக்காரர் அங்கு சென்று பார்த்தபோது பாண்டியன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்பு வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டின் உள்பகுதி பூட்டியிருந்தது. இதனையடுத்து வீட்டின் உரிமையாளர் பாண்டியனுக்கு தகவல் தெரிவித்தார். அதோடு நாச்சியாபுரம் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார்.
இச்சம்பவம் நடுவிக்கோட்டை பகுதிகளில் பரவ அருகில் உள்ள வீட்டுக்காரர்கள் அனைவரும் மிளகாய் பொடி, கம்பு கட்டையுடன் வீட்டை சுற்றி வளைத்தனர். பின்பு காவல்துறையினர் மற்றும் பாண்டியன் குடும்பத்தினர் வீட்டிற்கு வந்து மற்றொரு கதவை திறந்து பார்த்தனர். அப்போது வீட்டில் இருந்த கட்டிலில் மது போதையில் மட்டையாகி ஒருவர் கிடந்தார். அவரை பார்த்து பொதுமக்கள் மற்றும் பாண்டியன் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து, போலீசார் அவரை எழுப்பி விசாரித்ததில் ராமநாதபுரம் மாவட்டம் மேலச்சேந்தனேந்தல் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் சுதந்திரதிருநாதன்(27) என்பது தெரியவந்தது. இவர் ஏற்கனவே ஒரு குற்ற வழக்கில் கைதாகி சிறைக்கு சென்று விடுதலையாகி வந்துள்ளார். இரவில் பூட்டி கிடந்த வீட்டை நோட்டமிட்ட ஓட்டை பிரித்து இறங்கி வீட்டிற்குள் இருந்த பாத்திரங்கள், குத்துவிளக்கு, மின்விசிறி, வெண்கல பொருட்கள் அனைத்தையும் சாக்குபையில் பத்திரமாக கட்டி வைத்தார்.
பின்னர் மது அருந்தியதால் போதையில் காதில் ஹெட்போனில் TR.ராஜேந்தர் காதல் பாடல்களை கேட்டபடி மெத்தையில் சுதந்திரதிருநாதன் சுதந்திரமாக தூங்கியதும், ஹெட்போனில் பாட்டு கேட்டுக் கொண்டே தூங்கியதால் வெளியே சத்தம் போட்டது கூட கேட்கமால் அசந்து தூங்கியதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, நாச்சியாபுரம் சிறப்பு சார்பு ஆய்வாளர் முருகேசன், சுதந்திர திருநாதனை கைது செய்து வழக்கு பதிவு செய்து மீண்டும் சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
செய்தியாளர் : முத்துராமலிங்கம் - காரைக்குடி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Local News, Sivagangai