Home /News /sivagangai /

கணவர் உயிருடன் இருக்கும்போதே இறந்துவிட்டதாக கூறி சொத்தை விற்ற மனைவி!

கணவர் உயிருடன் இருக்கும்போதே இறந்துவிட்டதாக கூறி சொத்தை விற்ற மனைவி!

பாதிக்கப்பட்டவர்

பாதிக்கப்பட்டவர்

மீண்டும் அந்த மனுவை பதிவு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் சந்திரசேகர் மனைவியின் மீதும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Sivaganga | Tamil Nadu
    சிவகங்கை அருகே உயிருடன் இருக்கும்போதே கணவர் இறந்து விட்டதாக கூறி இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் பெற்று கணவரின் பெயரில் இருந்த 40 லட்சம் மதிப்பிலான சொத்தை விற்பனை செய்த மனைவியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூரில் வசித்து வருபவர் சந்திரசேகர். இவர் தனது தந்தையுடன் மளிகை கடை நடத்தி வருகின்றார். காரைக்குடியைச் சேர்ந்த நதியா ஸ்ரீ என்பவரை கடந்த 2005ஆம் ஆண்டு திருமணம் செய்து உள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தபோது கடந்த 2015 ஆம் ஆண்டு தனது கணவர் உயிருடன் இருக்கும்போதே இறந்து விட்டதாக காரைக்குடி நகராட்சியில் பதிவு செய்து இறப்புச் சான்றிதழும், வருவாய்த்துறை மூலம் வாரிசு சான்றிதழும் பெற்று சந்திரசேகர் பெயரில் உள்ள 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான இடத்தை வேறு நபருக்கு  விற்பனை செய்து உள்ளார். தனது பெயரில் உள்ள இந்த இடத்தை சந்திரசேகர் விற்பனை செய்ய முயற்சி செய்தபோது  தனது மனைவி தனக்கு இறப்புச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் பெற்று ஏற்கனவே இடத்தை வேறு நபருக்கு விற்பனை செய்துள்ளது தெரியவந்தது.

    சந்திரசேகர் தனது மனைவி மீது சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் 2022 ஆம் ஆண்டு நடவடிக்கை எடுக்ககோரி மனு கொடுத்துள்ளார். அந்த மனுவின் மீது எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று கூறுகிறார்.

    தற்போது தனது மனைவியின் தரப்பு தொடர்ந்து என்னை மிரட்டுவதாகவும், தனது மனைவி வெளிநாடு செல்ல  திட்டமிட்டு இருப்பதாகவும் அவர்கள் மீது உடனடியாக சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி சந்திரசேகர் இன்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்க வந்தார்.

    அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் உயிருடன் இருக்கும் போதே இறந்து விட்டதாக சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுக்க வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    ALSO READ | ஸ்ரீரங்கம் கோவிலை சுற்றி விதிகளை மீறி கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கியது யார்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி…

    இதனை அறிந்து கொண்ட சில அதிகாரிகள் சந்திரசேகர் மனு பதிவு செய்யும் இடத்தில் அந்த மனுவை பெற்றுக் கொண்டு பதிவு செய்யாமல் நீங்கள் காரைக்குடிக்கு வாருங்கள் உங்கள் பிரச்சினையை தீர்த்து வைப்பதாக கூறி மனுவை எடுத்து சென்றுவிட்டதாகவும் சந்திரசேகர் கூறினார்.

    மேலும் இது குறித்து, மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தபோது அவர், மீண்டும் அந்த மனுவை பதிவு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் சந்திரசேகர் மனைவியின் மீதும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாகவும் தெரிவித்துள்ளார். உயிருடன் இருக்கும்போதே ஒருவருக்கு இறப்பு சான்றிதழ்,  வழங்கிய சம்பவம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

     
    Published by:Anupriyam K
    First published:

    Tags: District collectors, Sivagangai

    அடுத்த செய்தி