Home /News /sivagangai /

இந்திய கிரிக்கெட் அணியில் இடம் கிடைத்தும் பண வசதி இல்லாமல் பரிதவிக்கும் சிவகங்கை மாற்றுத்திறனாளி இளைஞர்

இந்திய கிரிக்கெட் அணியில் இடம் கிடைத்தும் பண வசதி இல்லாமல் பரிதவிக்கும் சிவகங்கை மாற்றுத்திறனாளி இளைஞர்

சிவகங்கை மாற்றுதிறனாளி

சிவகங்கை மாற்றுதிறனாளி

Sivagangai | தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக தமிழக கிரிக்கெட்  அணியில் பேட்டிங், பௌலிங் இரண்டிலும் தனது "ஒற்றை கையால் விளையாடி சாதனை படைத்து இந்திய மாற்றுத்திறனாளிகள் அணிக்கு தேர்வு பெற்றும் தனது வெற்றிப் பயணத்தை தொடர வழி இன்றி ஏழை விவசாயி மகன்லிங்கராஜா தவிக்கிறார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Sivaganga, India
சிவகங்கை மாவட்டம் அருகே உள்ள ஈசனூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழை விவசாயி பாக்கியம் அவர்களின் மகன் லிங்க ராஜா. இவருக்கு சிறு வயதில் ஏற்பட்ட விபத்தில் ஒரு கை முறிவு ஏற்பட்டது. லிங்க ராஜா தனக்கு கிரிக்கெட் விளையாட்டின் மீது இருந்த ஆர்வத்தினால் தொடர்ந்து தனது ஒற்றை கையால் குக்கிராமத்தில் இருந்து கொண்டு கடும் பயிற்சி மேற்கொண்டு தமிழக மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணிக்கு தேர்வு பெற்றார்.

தொடர்ந்து சிறப்பாக ஐந்து ஆண்டுகள் பேட்டிங், பௌலிங் இந்த இரண்டிலும் சிறப்பாக விளையாடி மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணிக்கு தற்போது தேர்வாகியுள்ளார். இந்திய அணியில் விளையாட சிவகங்கை லிங்க ராஜாவுடன்  மதுரையைச் சேர்ந்த ராஜேஷ்,  திருப்பூர் மணிவண்ணனும் தேர்வாகியுள்ளார்கள். லிங்கராஜா தற்போது தனது பயிற்சியை மதுரையில் மேற்கொண்டு வருகிறார்.

இந்திய திவ்யாங் கிரிக்கெட்  அணிக்கும் பங்களாதேஷ் திவ்யாங் கிரிக்கெட் அணிக்கு இடையிலான மூன்று சர்வதேச T20 கிரிக்கெட் போட்டிகள் வரும் 20ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையில் மூன்று நாட்கள் ராஞ்சி மெக்கான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இதில் விளையாட சிவகங்கை லிங்க ராஜா தேர்வு செய்யப்பட்டு ஓப்பனிங் பேட்ஸ்மேன்னாக விளையாட உள்ளார். இந்த போட்டியினை தொடர்ந்து வாரணாசியில் 24ஆம் தேதி ஒரு சர்வதேச போட்டியில் 26 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையில் லக்னோவில் நடைபெற உள்ள முதல் மாற்றுத்திறனாளிகள் டெஸ்ட் போட்டியிலும் இவர் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Also see... கரூரில் களைகட்டிய ஆட்டு சந்தை... ஒரே நாளில் ரூ.1.5 கோடிக்கு விற்பனை

மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் வீரர்களின் தலைமை தேர்வாளர் ஆசிஷ் ஸ்ரீ வஸ்தவால் மூலம் இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த போட்டிகளில் இவர் பங்கேற்க தற்போது இவருக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள், பயண செலவுகளுக்கு தேவையான  பணம் இவரிடம் இல்லாமல் இருப்பதால் தற்போது இவரின் கிரிக்கெட் பயணம் கேள்விக்குறியாகி உள்ளது. இது சம்பந்தமாக தனக்கு உதவ வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலரிடம்  மனு கொடுத்து காத்திருக்கின்றார்.

மாவட்ட நிர்வாகம்  இந்திய அணிக்காக விளையாட செல்ல உள்ள லிங்க ராஜாவுக்கு உதவி செய்து இவரின் கிரிக்கெட் விளையாட்டின் கனவை நினைவாக்க வேண்டும் என்பது அந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Cricket, Crime News, Indian cricket team, Sivagangai

அடுத்த செய்தி