சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் திருப்பூரில் உள்ள ஒரு உணவு விடுதியில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இவரது இளைய மகன் விஜயகுமார் (15), இவர் அருகில் உள்ள வேலங்குடி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
பத்தாம் வகுப்பு பொது தேர்வு வருவதையொட்டி இப்பள்ளியில் மாணவர்களுக்கு, கடந்த சில நாட்களாக காலையில் பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருவதால் மாணவர்கள் காலை 7.30 மணிக்கு பள்ளிக்கு வந்து விடுகின்றனர். பின் 8:30 மணி அளவில் உணவுஇடைவேளைக்காக கடை தெருவிற்கு சென்று உணவகங்களில் உணவு அருந்தி விட்டு வருவது வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை சிறப்பு வகுப்பு முடிந்து உணவு இடைவேளைக்காக கடைக்கு சென்ற 10 ம் வகுப்பு மாணவன் விஜயகுமார் உணவு அருந்திவிட்டு வரும் பொழுது குறுக்கு பாதையில் உள்ள ஒரு வீட்டின் மின் இழுவை கம்பியில் கை வைத்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தான்.
இதனை கண்ட அருகில் இருந்த இளைஞர்கள் கட்டையால் மாணவனின் கையை தட்டிவிட்டு மாணவனை எழுப்ப முயன்றுள்ளனர். அதோடு 108 வாகனத்திற்கு தகவல் தெரிவித்தனர். வாகனம் வராத நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் வைத்து அழைத்துச் சென்றனர்.திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மாணவன் விஜயகுமாரை பரிசோதித்த மருத்துவர்கள் விஜயகுமார் இறந்து விட்டதாக கூறினர்.
இதனையடுத்து மாணவனின் பெற்றோர் உறவினர் என பலரும் கதறி அழுதனர். பின்பு தகவல் அறிந்து விரைந்து வந்த கண்டவரயான்பட்டி போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு சென்ற மாணவன் மின்சாரம் தாக்கி உயர்ந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் : முத்துராமலிங்கம் (காரைக்குடி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Sivagangai, Tamil News, Thirupathur