தேவகோட்டை அருகே சிறுமியை பகலில் பட்டினி போட்டு இரவில் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள் கைதான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த கூலித் தொழிலாளிக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் திருமணம் ஆன நிலையில் இளைய மகள் அருகில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இளைய மகள் கடந்த 2ம் தேதி வீட்டில் இருந்த ரூ.3,000 எடுத்துக்கொண்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் தங்களது மகளை காணவில்லை என போலீசில் புகார் கொடுத்தனர்.
இந்நிலையில், கடந்த 6ம் தேதி தேவகோட்டை பஸ் நிலைய பகுதியில் சிறுமி மயங்கி கிடந்தார். தகவலறிந்த தேவகோட்டை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியை மீட்டனர். சிறுமியிடம் நடத்திய விசாரணையில், சிறுமியை 4 இளைஞர்கள் கடத்தி சென்று தனியறையில் அடைத்து வைத்து பகலில் பட்டினி போட்டு இரவில் 4 இளைஞர்களும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக தேவகோட்டை தாலுகா பாவனக்கோட்டையை சேர்ந்த கார்த்திக்(31), அவரது நண்பர்கள் கோபாலபட்டினம் முகமது ஷரீப்(22), அங்காளங்கோட்டை கிராமத்தை சேர்ந்த விஜய்(23), வாரியன்வயல் கிராமத்தை சேர்ந்த ஜோஸ் பெர்நாடிக்(19) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் 4 பேரும் சேர்ந்து சிறுமியை பகலில் பட்டினி போட்டு இரவில் தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
இதில் கார்த்திக் கடந்த 6ம் தேதி போக்சோ சட்டத்தில் கைதாகி சிறைக்கு அனுப்பப்பட்டார். தலைமறைவாக இருந்த முகமது ஷரீப், விஜய், ஜோஸ்பெர்நாடிக் ஆகிய மூவரும் தற்போது போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் : முத்துராமலிங்கம் - காரைக்குடி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Local News, Sivagangai