Home /News /salem /

சொந்த மாமாவை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த சகோதரர்கள் - ஆத்தூர் அருகே பயங்கரம்

சொந்த மாமாவை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த சகோதரர்கள் - ஆத்தூர் அருகே பயங்கரம்

கொலை செய்யப்பட்ட சீனிவாசன்

கொலை செய்யப்பட்ட சீனிவாசன்

Salem : ஆத்தூர் அருகே நிலத்தகராறு காரணமாக சொந்த மாமாவை இரண்டு சகோதரர்கள் சேர்ந்து சராமாரியாக வெட்டி படுகொலை செய்த வெறிச்செயல் அரங்கேறியுள்ளது.

சேலம்  மாவட்டம் ஆத்தூர் அருகே,  நிலத்தகராறு  காரணமாக சொந்த மாமாவை பின் தொடர்ந்து சென்று, சரமாரியாக வெட்டி  படுகொலை செய்துவிட்டு தப்பியோடிய கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆத்தூர் அருகே கெங்கவல்லியை அடுத்துள்ள கடம்பூர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்.  இவரது மகன்  சீனிவாசன் (வயது 42) ஓட்டுனராக பணியாற்றி வந்தார். இவருக்கும், இவரது அத்தையான பங்காரு என்பவரின் குடும்பத்தாருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இது சம்பந்தமாக நீதிமன்றத்தில்  வழக்கு நிலுவையில் உள்ளது. இதனிடையே நிலப்பிரச்சனை தொடர்பாக முதலமைச்சர் தனிப்பிரிவிற்கும் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகார் தொடர்பாக கடந்த சனிக்கிழமை கெங்கவல்லி   போலீசார், இரு தரப்பினரையும்  காவல் நிலையத்திற்கு அழைத்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் இருதரப்பினருக்கும் உடன்பாடு  எட்டப்படாததோடு, அவர்களுக்குள் வாக்குவாதமும் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றி ஒரு கட்டத்தில் காவல் நிலையத்திலேயே கைகலப்பாகவும் மாறியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை சீனிவாசன் தனது இருசக்கர வாகனம் மூலம் கடம்பூரில் இருந்து பைத்தூர் புதூருக்கு இறைச்சி வாங்குவதற்காக, இறைச்சி கடை நோக்கி சென்றுள்ளார். அப்போது பின் தொடர்ந்து சென்ற சீனிவாசனின், மாமாவான ரவிச்சந்திரன் என்பவரின் மகன்கள் மணிகண்டன் (வயது 31) மற்றும் அவரது தம்பி விஜய் (வயது 28) ஆகிய இருவரும் கணவாய்மேடு பகுதியில் உள்ள முருகேசன் என்பவருடைய தோட்டத்தின் அருகில் சீனிவாசனை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, வாக்குவாதம் முற்றி மீண்டும் கைகலப்பாக மாறிய நிலையில், மணிகண்டன் மற்றும் அவரது தம்பி விஜய் ஆகிய இருவரும், சீனிவாசனின் மார்பு மற்றும் கழுத்து பகுதிகளில், அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சராமாரியாக, கொடூரமாக வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் ஆத்தூர் ஊரக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொலையான சீனிவாசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, தப்பியோடிய கொலையாளிகளான மணிகண்டன் மற்றும் விஜய் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Must Read : பேருந்துக்காக காத்திருந்தவர்களை தூக்கிவந்து மொட்டையடித்து துன்புறுத்தல்.. ஆட்கடத்தலா? - கோவை தன்னார்வ அமைப்பினரிடம் விசாரணை

மேலும்,  இந்த கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிலத்தகாராறு காரணமாக பட்டப்பகலில் சொந்த மாமாவை சராமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Suresh V
First published:

Tags: Crime News, Murder, Salem

அடுத்த செய்தி