Home /News /salem /

புத்தர் சிலைக்கு தலைவெட்டி முனியப்பன் பூஜை... நீதிமன்ற தீர்ப்பை ஏற்க மறுக்கும் பக்தர்கள்...

புத்தர் சிலைக்கு தலைவெட்டி முனியப்பன் பூஜை... நீதிமன்ற தீர்ப்பை ஏற்க மறுக்கும் பக்தர்கள்...

சேலம் - புத்தரை முனியப்பனாக வணங்கும் மக்கள்

சேலம் - புத்தரை முனியப்பனாக வணங்கும் மக்கள்

Salem Thalaivetti Muniappan Temple | புத்தர் சிலை தான் என்ற உயர்நீதி மன்ற உத்தரவுக்கு பின்பும் தலைவெட்டி முனியப்பனுக்கு பூஜை தொடர்ந்து செய்யப்படுகிறது. இந்த உத்தரவை அமல்படுத்த புத்த அமைப்பினர் மாவட்ட சேலம் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Salem, India
சேலம் மாநகராட்சி அலுவலகம் பின்புறம் கோட்டை மைதானத்தையொட்டி அமைந்துள்ளது தலைவெட்டி முனியப்பன் கோவில். சுமார் 26 சென்ட் பரப்பில் அமைந்துள்ள இந்த கோவிலில் அரசமரப் பிள்ளையார், திருமலையம்மன் இருபுறமும் இருக்க, நடுவில் முனியப்பன் சிலை கொண்ட அறை என மூன்று சிறிய கோவில்கள் உள்ளது. இந்துசமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள இக்கோயிலில், 2011-ல் குடமுழுக்கு நடத்தப்பட்டு இம்மூன்று அறைகோயில்களும் நிறுவப்பட்டுள்ளன.

இக்கோயில் இப்போதும் முனியப்பன் பெயராலேயே அறியப்படுகிறது. இங்கு தலைவெட்டி முனியப்பன் என்று சொன்னால் மட்டுமே, யாருக்கும் இக்கோயிலைத் தெரிகிறது. அறநிலையத் துறை சார்பாக வைக்கப்பட்டிருக்கும் பெயர்  பலகையிலும் இப்பெயரே இடம் பெற்றிருக்கிறது. முனியப்பன் சிலையின் தலை வெட்டப்பட்டு, பின்பு ஒட்டவைக்கப்பட்டது என்பதே இந்த பெயருக்கான காரணம். அது ஒட்டவைக்கப்பட்டுள்ளதைச் சிலையின் அமைப்பைப் பார்த்தவுடனே சொல்லிவிட முடியும்.

சிலையின் தலை நேராக இல்லாமல் சற்றே இடதுபுறம் திரும்பியுள்ளது. தலைக்கும் உடம்புப் பகுதிக்கும் கடப்பாரையை விட்டு ஈயத்தால் ஒட்டவைக்கப்பட்டுள்ளது என கூறப்படுகின்றது. இந்த கோவிலின் பூசாரியாக இருப்பவர் முனுசாமி, இவரது தாத்தா மற்றும் அப்பாவை தொடர்ந்து இவர் பூசாரியாக உள்ளார். தான் குழந்தையாக பிறந்தபோது, உடல் எடை மிகவும் குறைந்த நிலையில், இருந்ததாக தெரிவிக்கும் பூசாரி முனுசாமி, தனது தாத்தா இந்த முனியப்பன் காலடியில் என்னை வைத்து, நோய் தீர கடவுளை வேண்டி, எனக்கு முனுசாமி என பெயர் வைத்தார் என்கிறார்.

அப்போதிருந்து இந்த கோவில் வளாகத்திலேயே வசித்து வரும் எனக்கு சமீபத்திய உயர்நீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக வருத்தப்படுகிறார் பூசாரி முனுசாமி. இந்திய புத்த சங்கத்தின் சேலம் மாவட்ட அமைப்பாளர் ரங்கநாதன் 2011ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "சேலம் மாவட்டம் பெரியேரி கிராமத்தில், அறநிலைய  துறைக்கு சொந்தமான நிலத்தில், 'தலைவெட்டி முனியப்பன்' கோயில் உள்ளது.

3 தலைமுறையாக கோயிலை முனியப்பனாக வணங்கி வரும் பக்தர்


அங்குள்ள சிலைக்கு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், கோயிலில் உள்ளது புத்தர் சிலை.  சிலை மட்டுமின்றி, அங்குள்ள 26 சென்ட் நிலமும், புத்த சங்கத்துக்குச் சொந்தமானது. அந்த இடத்தை மீட்டு, புத்தர் சங்கத்திடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும்" என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், "சம்பந்தப்பட்ட இடத்தில் இருப்பது தலைவெட்டி முனியப்பன் சிலையா? புத்தர் சிலையா? என ஆய்வு செய்து, தமிழக தொல்லியல் துறை  அறிக்கை அளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டது. அதன்படி, தொல்லியல் துறை அறிக்கை தந்துள்ளது.



அதில், "கோயில் கட்டிடம் நவீன தோற்றம் உடையது. அங்குள்ள சிலை கடினமான கல்லாலானது. தாமரை பீடத்தில், 'அர்த்தபத்மாசனம்' எனப்படும் அமர்ந்த நிலையில் சிலை உள்ளது. கைகள், 'தியான முத்ரா' கொண்டு உள்ளன. புத்தருக்கான அடையாளங்கள், சிலையின் தலை பகுதியில் உள்ளன. தொல்பொருள் மற்றும் வரலாற்று சான்றுகளை கவனமாக ஆய்வு செய்ததில், அந்த சிற்பம் மகா லட்சணங்களை கொண்டுள்ள புத்தர் சிலை தான்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இருதரப்பு வாதங்களுக்குப் பின் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஜூலை 17- ம் தேதி பிறப்பித்த உத்தரவில், சேலம் பெரியேரி கிராமத்தில் இருப்பது புத்தர் சிலைதான் என்பதை, தொல்லியல் துறை தெளிவாகவும், திட்டவட்டமாகவும், தன் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது. அந்த சிற்பம் புத்தர் சிலை என முடிவுக்கு வந்த பிறகு, தவறான அடையாளங்களுடன் தொடர அனுமதிக்க முடியாது.

எனவே, புத்தர் சிலை உள்ள இடத்தை, தமிழக தொல்லியல் துறை தன் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும். அங்குள்ளது புத்தர் சிலை தான் என அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும். அந்த இடத்தில் பொதுமக்களை அனுமதிக்கலாம். ஆனால், புத்தர் சிலைக்கு பூஜை உள்ளிட்ட பிற சடங்குகள் செய்ய அனுமதிக்கக் கூடாது. இதை தொல்லியல் துறை உறுதி செய்ய வேண்டும். என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சக்தி வாய்ந்தவர் முனியப்பன் என கூறும் பக்தர்


ஆனால் நீதிமன்றமோ, தொல்லியல் துறையோ யார் சொன்னாலும் இது முனியப்பன் சாமிதான் என்று கூறும் பக்தர்கள், அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் உயிருக்கு போராடும் பலரும் இந்த முனியப்பனை வழிபட்டு உயிர் பிழைக்கிறார்கள் என்கிறார்கள். இரண்டு தினங்களுக்கு முன்பு கூட தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற ஒருவரை, பிழைக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் கைவிட்ட பின்பும் முனியப்பனை வழிபட்ட பின் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

Also see....திருச்செங்கோடு கைலாசநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு

50 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் அருகே சேலம் நீதிமன்றம்  செயல்பட்டபோது, நீதிபதி ஒருவருக்கு தூக்கு தண்டனை வழங்கியதாகவும், அன்று இரவு தலைவெட்டி முனியப்பன் சாமி, அந்த தீர்ப்பை மாற்றி எழுதி உயிர் பிழைக்க வைத்ததாகவும் கூறும் பூசாரியின் மனைவி சாந்தி, காலங் காலமாக இந்த கடவுளை வழிபட்டு வரும் நிலையில் இப்போது புத்தர் என சொல்வதை ஏற்கமாட்டோம். இது என்றைக்குமே முனியப்பன் தான் என்கிறார்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Buddhism, High court, Hindu Temple, Salem

அடுத்த செய்தி