சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி அருகே உள்ளது சின்னக் கொல்லப்பட்டி. இந்த பகுதியில் தனியார் சட்டக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் தனியார் சட்ட கல்லூரி அருகே உள்ள வீடுகள் மற்றும் அப்பார்ட்மென்ட்களில் வாடகை எடுத்து தங்கி கல்லூரிக்கு சென்று வருகின்றனர். இந்த கல்லூரியில் தர்மபுரி மாவட்டம் வெண்ணாம்பட்டி அருகே உள்ள காமராஜர் நகரை சேர்ந்த சஞ்சய் (18) என்பவர் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சஞ்சயின் பெற்றோர் வங்கிகளில் பணியாற்றி வருகின்றனர்.
சஞ்சையும், மேலும் சில மாணவர்களும் தனியார் சட்ட கல்லூரி அருகே மாடி வீட்டில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தனர். சஞ்சயுடன் கரூர் மாவட்டத்தை சேர்ந்த 18 வயது மாணவியும் படித்து வருகிறார்.
மாணவி தனியார் சட்டக் கல்லூரி அருகே உள்ள ஒரு அப்பார்ட்மெண்ட்டில் அவரது பெற்றோருடன் வசித்து வந்தார்.
சஞ்சையும், அந்த மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு 1 மணியளவில் சஞ்சய் அவரது நண்பர்களிடம் வெளியில் சென்று வருவதாக கூறிவிட்டு அவரது காதலியை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றார்.
பிறகு காதலிக்கு செல்போனில் மாடிக்கு வருமாறு தெரிவித்து மாடிக்கு சென்றார். காதலன் அழைத்ததால் மாணவியும் அங்கு சென்று பேசிக்கொண்டு இருந்ததாக தெரிகிறது. அப்போது மாணவியின் தாயார் அவரை தேடிக்கொண்டு மாடிக்கு வந்துள்ளார். அப்போது காதலியின் தாயாரை சஞ்சய் பார்த்ததால் அதிர்ச்சிடைந்தார். பிறகு அவர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்துள்ளார். ஆனால் இருட்டில் மாடி படி இருக்கும் இடம் தெரியாததால் மாடியிலிருந்து சுமார் 50 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்துள்ளார்.
இதனால் சஞ்சய்க்கு தலையில் பலத்த அடிப்பட்டு அதே இடத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்த அக்கம் பக்கம் இருந்தவர்கள் உடனே கன்னங்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அஸ்தம்பட்டி போலீஸ் உதவி கமிஷனர் லட்சுமி பிரியா மற்றும் கன்னங்குறிச்சி காவல் ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மாணவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குமாரமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து கன்னங்குறிச்சி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாணவன் இறந்ததால் கன்னங்குறிச்சி காவல் நிலையத்திற்கு மாணவி மற்றும் அவரது தாயார் அழைத்து வரப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. சேலத்தில் தனியார் சட்ட கல்லூரி மாணவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Local News, Salem