Home /News /salem /

சேலத்தில் வடமாநில இளைஞர் கடத்தப்பட்ட வழக்கில் திடுக்கிடும் தகவல்..! புனேவில் மீட்கப்பட்ட இளைஞரிடம் போலீஸார் விசாரணை

சேலத்தில் வடமாநில இளைஞர் கடத்தப்பட்ட வழக்கில் திடுக்கிடும் தகவல்..! புனேவில் மீட்கப்பட்ட இளைஞரிடம் போலீஸார் விசாரணை

சேலம் வடமாநில இளைஞர் கடத்தல்

சேலம் வடமாநில இளைஞர் கடத்தல்

சேலத்தில் கடத்தப்பட்ட ராஜஸ்தான் இளைஞர் புனே அருகில் போலீஸார் மீட்டுள்ளனர். குட்கா கடத்தல் விவகாரத்தில் ஆள் மாற்றி கடத்தப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    சேலம் டவுன் சின்ன கடை வீதி  பகுதியில் மளிகை கடை நடத்தி வருபவர் முல்லாராம் . இவர் கடந்த மூன்று வருடத்திற்கும் மேலாக இந்த மளிகை கடையை நடத்தி வருகிறார். இந்த கடையை இவரும், இவரது மகன் ஜெயராமும் (வயது 22) சேர்ந்து நடத்தி வந்தனர். இந்தக் கடையில் முல்லாராமின் உறவினரும், ராஜஸ்தானை சேர்ந்தவருமான சாலா ராம் (வயது 28) என்பவர் கடந்த இரண்டு வருடமாக வேலை பார்த்து வந்துள்ளார். மளிகை கடையில் ஜெயராமும் , அவரது தந்தையும்  இல்லாத போது சாலாராம் கடையை கவனித்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 2-ஆம் தேதி காலை மளிகை கடையில் இருந்த ஜெயராமை 6 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்றது. இதனை அறிந்த சேலம் டவுன் காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர் . பின்னர் மளிகை கடையில் பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரித்தனர். இந்த கடத்தல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

    இதனை அறிந்த சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோடா கடத்தப்பட்ட வாலிபரை மீட்க தனிப்படை அமைத்தார் . இதில் துணை கமிஷனர் மோகன்ராஜ், உதவி கமிஷனர் அசோகன் , செவ்வாய்ப்பேட்டை காவல் ஆய்வாளர் கணேசன் மற்றும் போலீசார் இடம் பெற்று விசாரித்து வந்தனர். இந்த கடத்தல் சம்பவம் குறித்து சேலம் தனிப்படை போலீசார் பெங்களூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து சேலம் போலீசாரும், பெங்களூர் போலீசாரும் இணைந்து தேடிவந்தனர்.

    Also Read: மெரினா கடல்அலையில் சிக்கி ஆந்திர இளைஞர் மாயம்.. தேடும்போது மற்றொரு இளைஞரை பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்

    பெங்களூரில் கடந்த இரண்டு நாட்களாக தேடி வந்த நிலையில் ஜெயராம், புனே அருகில் இருப்பது செல்போன் மூலம் தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் நேற்று நள்ளிரவு புனே சென்று கண்காணித்து கொண்டிருந்தனர். தனிப்படை போலீசார் வந்து விட்டதை அறிந்த கடத்தல்காரர்கள் காரில் ஜெயராமை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். பின்னர் போலீசார் ஜெயராமை மீட்டு இன்று காலை சேலம் அழைத்து வந்து அவரிடம் விசாரித்து வருகிறார்கள். அப்போது ஜெயராம் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.

    ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சாலாராம் ராஜஸ்தானில் உள்ள தனது நண்பர்கள் மூலம் சேலம், நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பான்பராக் ,குட்கா லாரிகளின் அனுப்பும்போது தகவல் தெரிவிக்குமாறு கேட்டு, அவர்களும் அவ்வப்போது தகவல் தெரிவித்து வந்துள்ளனர். இந்த லாரி சேலம் அருகே வரும்போது அதை கடத்தி அதில் உள்ள பான்பராக் மற்றும் குட்காவை குறைந்த விலைக்கு விற்று வந்துள்ளார்.

    பான்பராக், குட்கா முதலியவற்றை எடுத்துக்கொண்டு, லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு வந்துவிடுவது சாலாராம் வழக்கம். அதன்படி கடந்த 3 மாதத்திற்கு முன்பு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் சாலாராம் கைது செய்யப்பட்டார். அப்போது அவனிடம் 200 கிலோ பான்பராக் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு சிறையில அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளிவந்த சாலாராம் மீண்டும் ஜெயராமின் மளிகை கடைக்கு வந்து வேலை பார்த்து வந்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

    இதனிடையே பான்பராக், குட்கா கடத்தி விற்ற வகையில் ராஜஸ்தானை சேர்ந்த சிலருக்கு ரூபாய் 20 லட்சம்  பணம் தர வேண்டி இருந்துள்ளது. இதனை அவர்கள் பலமுறை கேட்டும்,  சாலாராம் பணம் தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதனால் கோபமடைந்த 6 பேர் கும்பல் கடந்த 2-ஆம் தேதி சேலம் வந்தது பின்னர் மளிகை கடைக்குள் புகுந்து சாலாராமை தேடியுள்ளனர். அப்போது சாலாராம் இல்லாததால், அவருக்கு பதிலாக கடை உரிமையாளர் ஜெயராமை கடத்தி சென்றுள்ளனர்.

    ஜெயராமை பிடித்து வைத்துக்கொண்டு சாலாராமை வரவைக்க முயற்சி செய்துள்ளனர் . ஆனால் சாலா ராம் இருக்கும் இடம் ஜெயராமுக்கு தெரியவில்லை. இதனால்  ரூபாய் 20 லட்சம் கொடுத்து விட்டு சென்று விடுமாறு ஜெயராமிடம், கடத்தல்காரர்கள்
    மிரட்டி வந்துள்ளனர் . இந்த நிலையில் தங்களை போலீசார் சுற்றிவளைத்து அறிந்த கடத்தல்காரர்கள் ஜெயராமை அப்படியே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

    தற்போது மீட்கப்பட்டுள்ள ஜெயராமிடமும் காவல்துறை உயரதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். அதே போல் தலைமறைவாக உள்ள சாலாராமை பிடித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டு இருக்கிறது. சேலம் , நாமக்கல்,  தர்மபுரி,  கிருஷ்ணகிரி  மாவட்டங்களில் யார் யாருக்கு பான்பராக், குட்கா விற்று உள்ளார் என்று விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Crime News, Kidnap, Kidnapping Case, Police, Salem, Youths

    அடுத்த செய்தி