ஹோம் /நியூஸ் /சேலம் /

விவசாயம் பிளஸ் மாட்டுப்பண்ணை... திருநங்கைகளுக்கு முன்மாதிரியாக திகழும் சாரதா

விவசாயம் பிளஸ் மாட்டுப்பண்ணை... திருநங்கைகளுக்கு முன்மாதிரியாக திகழும் சாரதா

திருநங்கை சாரதா

திருநங்கை சாரதா

Salem | பால் உற்பத்தியில் சிறப்பாக தொழில் புரிந்து வந்த திருநங்கை சாரதா, தற்போது, சேலம் மாவட்ட நிர்வாக உதவியுடன் ஆவின் பால் கொள்முதல் நிலையமும் அமைத்து நடத்தி வருகிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Salem, India

திருநங்கைகள் என்றாலே பாலியல் தொழிலாளர்கள், யாசகம் பெறுபவர்கள் என்ற கருத்தை மாற்றும் விதமாக, இன்று மருத்துவ துறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் நுழைய ஆரம்பித்துள்ளனர். சிலர் மீன் கடை, சிக்கன் கடை, டிபன் கடை என வியாபாரங்களிலும் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

ஆனாலும்  திருநங்கை என்ற சமூகத்திற்கான ஆதரவு என்பது நமது சமுதாயத்தில் குறைவாகவே உள்ளது. சரியான வேலைவாய்ப்பு கிடைக்காத காரணத்தாலும், தொழில் தொடங்குவதற்கான பொருளாதார காரணங்களாலும்  திருநங்கைகள் சிலர் யாசகம் பெற்றே வாழ்வை நடத்த வேண்டிய சூழலில் உள்ளனர்.

இந்நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த கருப்பூர் அருகே உள்ள வட்டக்காடு என்ற  கிராமத்தை சேர்ந்த திருநங்கை சாரதா என்பவர், விவசாய தொழிலில் ஈடுபட்டுள்ளதோடு, 15 மாடுகள் கொண்ட மாட்டு பண்ணை அமைத்து பால் உற்பத்தி செய்து வருகிறார்.

இதையும் படிங்க : அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்து வினியோகத்தை தடுக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு

தனது விவசாய நிலத்தில் கரும்பு, மாட்டு தீவனங்கள் பயிரிட்டுள்ளதோடு, மாடுகளுக்கு தேவையான தீவனங்களை நறுக்குவதற்காக மின் இயந்திரங்கள், நவீன முறையில் பால் கறப்பதற்கான இயந்திரங்கள், மின் கம்பரசர்கள் ஆகியவற்றை பயன்படுத்து வருகிறார்.

இதற்கான மின் தேவைக்காக சோளார் பேனல்களும் அமைத்துள்ளார். பால் உற்பத்தியில் சிறப்பாக தொழில் புரிந்து வந்த திருநங்கை சாரதா, தற்போது, சேலம் மாவட்ட நிர்வாக உதவியுடன் ஆவின் பால் கொள்முதல் நிலையமும் அமைத்து நடத்தி வருகிறார். தற்போது வட்டக்காடு கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பால் உற்பத்தியாளர்கள், இந்த கொள்முதல் நிலையத்திற்கு வந்து பால் ஊற்றிச் செல்கிறார்கள்.

தற்போது இந்த பால் கொள்முதல் நிலையம் பற்றிய பேச்சுதான் வட்டக்காடு கிராமத்தில். சமுதாயத்தால் புறக்கணிக்கப்படும் திருநங்கைகளுக்கு மத்தியில், நாம சமுதாயத்திற்கு என்ன கொடுக்கின்றோமோ, அதேதான் சமூகம் நமக்கு திருப்பி கொடுக்கும் என கருதி,  திருநங்கைகளுக்கு முன் உதாரணமாக இருக்கவேண்டும் என முடிவெடுத்து, தனது தாத்தா, தந்தை வழியில் விவசாய தொழிலை தேர்ந்தெடுத்ததாக கூறும் சாரதா, தனது பெற்றோர் மற்றும் மாவட்ட ஆட்சியர், கிராம மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு இந்த வெற்றி சாத்தியமானதாக தெரிவித்தார்.

இந்த வெற்றி வரவேற்கத்தக்கது எனக் கூறும்,  சேலம் ரோட்டரி கிளப் ஆப் சக்தி என்ற அமைப்பின் தலைவர் திருநங்கை பிரியா கூறும்போது, “ஒவ்வொரு திருநங்கையும் தங்களது திறமைகளை வெளிகொண்டு வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்காக உதவிகள் செய்யும் அரசுக்கு நன்றி. திருநங்கைகளின் வாழ்வை முன்னேற்ற அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் சமுதாயத்தின் முழுமையான அங்கீகாரம் கிடைக்காமல் இருப்பதால் திருநங்கைகள் சந்திக்கும் பிரச்னைகளும் தடைகளும் ஏராளமாக உள்ளது. குறிப்பாக திருநங்கைகள் லோன் பெற முடியவில்லை” என்றார்.

இதையும் படிங்க : ஈரோட்டில் செயல்பட்டு வந்த போலி வங்கி... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

மேலும், “கடன் கேட்டு விண்ணப்பிக்கும்போது, வங்கிகளில் ஏராளமான விண்ணப்பங்கள் இருப்பதாக கூறி எங்கள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகிறது. நான்

மாவட்ட தொழில் மையத்தில் கடன் கேட்கும்போது, 83% தகுதி இருந்தும், சிவில் காரணத்தால் எனக்கு லோன் மறுக்கப்பட்டது. இதுபோன்ற பிரச்சனைகள் திருநங்கைகளின் வாழ்வாதாரங்களுக்கு பின்னடைவாக உள்ளது.

தற்போது அறுபது சதவீத முன்னேற்றம் தான் அடைந்துள்ளோம். மக்கள் மத்தியிலும், அரசு அலுவலர்கள், காவல் துறை உள்ளிட்ட அனைவருக்கும் கூடுதல் விழிப்புணர்வு வேண்டும். விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு முன்வரவேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

Published by:Karthi K
First published:

Tags: Salem, Transgender