Home /News /salem /

சேலத்தில் இருப்பது புத்தர் சிலைதான்... உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பின்பும் தொடரும் தலைவெட்டி முனியப்பன் பூஜை...

சேலத்தில் இருப்பது புத்தர் சிலைதான்... உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பின்பும் தொடரும் தலைவெட்டி முனியப்பன் பூஜை...

புத்தர் சிலை

புத்தர் சிலை

salem | சேலம் மாநகரில் இருப்பது புத்தர் சிலை தான் என்ற உயர்நீதி மன்ற உத்தரவுக்கு பின்பும் தலைவெட்டி முனியப்பனுக்கு பூஜை தொடர்ந்து செய்யப்படுகிறது. இந்த உத்தரவை அமல்படுத்த புத்த அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் படிக்கவும் ...
சேலம் மாநகராட்சி அலுவலகம் பின்புறம் கோட்டை மைதானத்தையொட்டி அமைந்துள்ளது தலைவெட்டி முனியப்பன் கோவில். சுமார் 26 சென்ட் பரப்பில் அமைந்துள்ள இந்த கோவிலில் அரசமரப் பிள்ளையார், திருமலையம்மன் இருபுறமும் இருக்க, நடுவில் முனியப்பன் சிலை கொண்ட அறை என மூன்று சிறிய கோவில்கள் உள்ளது. இந்துசமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள இக்கோயிலில், 2011-ல் குடமுழுக்கு நடத்தப்பட்டு இம்மூன்று அறைகோயில்களும் நிறுவப்பட்டுள்ளன.

இக்கோயில் இப்போதும் முனியப்பன் பெயராலேயே அறியப்படுகிறது. இங்கு தலைவெட்டி முனியப்பன் என்று சொன்னால் மட்டுமே, யாருக்கும் இக்கோயிலைத் தெரிகிறது. அறநிலையத் துறை சார்பாக வைக்கப்பட்டிருக்கும் பெயர்ப் பலகையிலும் இப்பெயரே இடம் பெற்றிருக்கிறது.
முனியப்பன் சிலையின் தலை வெட்டப்பட்டு, பின்பு ஒட்டவைக்கப்பட்டது என்பதே இந்த பெயருக்கான காரணம்.

அது ஒட்டவைக்கப்பட்டுள்ளதைச் சிலையின் அமைப்பைப் பார்த்தவுடனே சொல்லிவிட முடியும். சிலையின் தலை நேராக இல்லாமல் சற்றே இடதுபுறம் திரும்பியுள்ளது. தலைக்கும் உடம்புப் பகுதிக்கும் கடப்பாரையை விட்டு ஈயத்தால் ஒட்டவைக்கப்பட்டுள்ளது என கூறப்படுகின்றது.

தலைவெட்டி முனியப்பன் சிலையின் முழுத் தோற்றத்தைக் காணும் யாரும் அது புத்தர் சிலை என்பதைப் பார்த்தவுடனே கூறிவிடலாம். வழக்கமான முனியப்பன் சிலைகள் போல் கால் மீது கால் போட்டு அமர்ந்தபடி, கையில் ஆயுதங்களுடன், முறுக்கிய மீசையுடன் கம்பீரமாக இல்லாமல், தியான நிலையில் அமர்ந்தபடி இந்த சிலை உள்ளது. சில காலம் இந்த சிலைக்கு மையினால் மீசை வரைந்தும், தியான வடிவத்தில் உள்ளதை மறைக்கும் வகையில் மலர்களால் அலங்கரித்தும் வைத்திருந்தனர்.  இதனால் அது அன்றைக்குப் புத்தராக அறியப்படவில்லை.

இதனிடையே இந்திய புத்த சங்கத்தின் சேலம் மாவட்ட அமைப்பாளர் ரங்கநாதன் 2011ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், "சேலம் மாவட்டம் பெரியேரி கிராமத்தில், அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலத்தில், 'தலைவெட்டி முனியப்பன்' கோயில் உள்ளது. அங்குள்ள சிலைக்கு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், கோயிலில் உள்ளது புத்தர் சிலை. அந்த சிலை அமர்ந்த நிலையில் கைகளை மடியில் வைத்தபடி உள்ளது.
அதோடு சிலை மட்டுமின்றி, அங்குள்ள 26 சென்ட் நிலமும், புத்த சங்கத்துக்குச் சொந்தமானது. அந்த இடத்தை மீட்டு, புத்தர் சங்கத்திடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும்" என்று கோரியிருந்தார்.

மேலும் இது குறித்து அறநிலையத் துறைக்கும், முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், "சம்பந்தப்பட்ட இடத்தில் இருப்பது தலைவெட்டி முனியப்பன் சிலையா? புத்தர் சிலையா? என ஆய்வு செய்து, தமிழக தொல்லியல் துறை  அறிக்கை அளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டது.

அதன்படி, தொல்லியல் துறை அறிக்கை தந்துள்ளது. அதில், "கோயில் கட்டிடம் நவீன தோற்றம் உடையது. அங்குள்ள சிலை கடினமான கல்லாலானது. தாமரை பீடத்தில், 'அர்த்தபத்மாசனம்' எனப்படும் அமர்ந்த நிலையில் சிலை உள்ளது. கைகள், 'தியான முத்ரா' கொண்டு உள்ளன. புத்தருக்கான அடையாளங்கள், சிலையின் தலை பகுதியில் உள்ளன. தொல்பொருள் மற்றும் வரலாற்று சான்றுகளை கவனமாக ஆய்வு செய்ததில், அந்த சிற்பம் மகா லட்சணங்களை கொண்டுள்ள புத்தர் சிலை தான்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "தலைவெட்டி முனியப்பன் சிலை எனக்கருதி, பக்தர்கள், பொதுமக்கள் தொடர்ந்து வழிபாடு நடத்தி வந்துள்ளதால், அறநிலையத் துறை வசமே தொடர அனுமதிக்க வேண்டும்" என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களுக்குப் பின் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஜூலை 17- ம் தேதி பிறப்பித்த உத்தரவில், சேலம் பெரியேரி கிராமத்தில் இருப்பது புத்தர் சிலைதான் என்பதை, தொல்லியல் துறை தெளிவாகவும், திட்டவட்டமாகவும், தன் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது. அந்த சிற்பம் புத்தர் சிலை என முடிவுக்கு வந்த பிறகு, தவறான அடையாளங்களுடன் தொடர அனுமதிக்க முடியாது.

எனவே, புத்தர் சிலை உள்ள இடத்தை, தமிழக தொல்லியல் துறை தன் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும். அங்குள்ளது புத்தர் சிலை தான் என அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும். அந்த இடத்தில் பொதுமக்களை அனுமதிக்கலாம். ஆனால், புத்தர் சிலைக்கு பூஜை உள்ளிட்ட பிற சடங்குகள் செய்ய அனுமதிக்கக் கூடாது. இதை தொல்லியல் துறை உறுதி செய்ய வேண்டும். என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Also see... நெல்லை அருகே பைக்கில் வந்த இளைஞர் வெட்டி படுகொலை...

தற்போது மனுதாரர் ரங்கநாதன் இறந்து விட்ட நிலையில், நீதிமன்ற தீர்ப்பு வந்து சுமார் 20 நாட்கள் ஆகியும், இன்னும் தீர்ப்பு முழுமையாக அமுல்படுத்தபடாமல்,  முனியப்ப சாமிக்கான பூஜை தொடர்கிறது. இந்த நிலையில், மேற்கண்ட உயர்நீதி மன்ற தீர்ப்பினை அமலாக்க ஆவன செய்யுமாறும், அதில் அரசு விதி படி உண்மையான புத்த மதத்தினரை கொண்டு, ஒரு குழு அமைக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் வென்.பிக்கு.மெளரியர் தலைமையில் சேலம் புத்தா டிரஸ்ட் அமைப்பைச் சார்ந்தவர்கள் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Buddhism, Salem

அடுத்த செய்தி