ஹோம் /நியூஸ் /சேலம் /

ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் இல்லத்தில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு.. எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்த இருவர் கைது..

ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் இல்லத்தில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு.. எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்த இருவர் கைது..

ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்

ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்

மண்ணெண்ணெய் கொண்டு வீச்சு தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரும் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர் . மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Salem, India

சேலத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில், சிசிடிவி காட்சிகளை வைத்து இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் பிரமுகரான ராஜன் என்பவர், கடவுள் சிலைகள் செய்து கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது இல்லத்தில் இன்று அதிகாலையில்  மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்டது.

இதனையடுத்து, இது தொடர்பாக ராஜன் சேலம் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோடா தனிப்படை அமைத்தார். இதில் துணை கமிஷனர் மாடசாமி மற்றும் உதவி கமிஷனர்கள் சரவணக்குமார் நாகராஜன் மற்றும் 30க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இடம் பெற்றிருந்தனர்.

ராஜனின் இல்லம் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியதில் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் மண்ணெண்ணெய் குண்டு வீசியது தெரியவந்தது. இதனையடுத்து, சந்தேகத்தின் பேரில் 6 பேரை, அம்மாபேட்டை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதனை அறிந்த அவர்களது உறவினர்கள் திரளாக வந்து, அம்மாபேட்டை காவல் நிலையம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 10 பெண்கள் உட்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் எஸ்டிபிஐ கட்சியின் சேலம் மாவட்ட தலைவர் சையத் அலி மற்றும் சேலம் 34வது வார்டு எஸ்டிபிஐ கிளை தலைவர் காதர் உசேன் ஆகிய இருவரும் மண்ணெண்ணெய் குண்டு வீசியது தெரியவந்தது. இவர்கள் மீது 436 (தீவைத்தல்), 511 (நற்பெயருக்கு கலங்கம் விளைவித்தல்), 153 A (மத நல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படுதல்) ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையும் வாசிக்க: குண்டுவெடிப்பு சம்பவங்கள்.. பாஜகவினர் மீது சந்தேகம் கிளப்பும் சீமான்

கைது செய்யப்பட்ட இருவரும் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர் . மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோடா, முழுமையாக விசாரணை நடத்தி, உறுதி செய்யப்பட்டு, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்தார். இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க 24 மணி நேரமும் ரோந்து செல்ல உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறினார்.

Published by:Siddharthan Ashokan
First published:

Tags: Crime News, RSS, Salem