சிறுமி கரு முட்டை விற்பனை விவகாரத்தில் தனியார் மருத்துவமனைகள் விதி மீறலில் ஈடுபட்டு இருப்பது கண்டறியப்பட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை உயர் மட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமி கருமுட்டைகளை விற்பனை செய்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் இதுவரை பெண்ணின் தாயார் இந்திராணி, இந்திராணியின் இரண்டாவது கணவர் சையத் அலி, இடைத்தரகர் மாலதி மற்றும் ஆதார் அட்டையில் திருத்தம் செய்து கொடுத்த ஜான் ஆகிய நான்கு பேரை கைது செய்துள்ளனர். இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக சுகாதாரத்துறை விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக சுகாதாரத்துறை இயக்குனர் விஸ்வநாதன் தலைமையில் காவல் ஆய்வாளர் உள்பட 7 பேர் கொண்ட குழுவினர் ஈரோட்டில் காப்பகத்தில் உள்ள சிறுமியிடம் நேரடி விசாரணை நடத்தினர். அதில் பாதிக்கப்பட்ட சிறுமி பல்வேறு திடுக்கிடும் தகவல்களை கூறியதாக தெரிகிறது. சிறுமியிடம் இருந்து பலமுறை கருமுட்டைகளை எடுத்ததும், அதற்காக தன்னை ஈரோடு மட்டுமின்றி, சேலம், ஓசூர், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனையடுத்து முதல்நாளான நேற்று ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனைகளில் சுகாதாரத்துறை உயர்மட்டக்குழுவினர் நேரடி விசாரணை நடத்தினர். இதனைத்தொடர்ந்து இரண்டாவது நாளாக சேலம் பிருந்தாவனம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டர் விஸ்வநாதன் தலைமையிலான குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த மருத்துவமனையில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் எத்தனை பேருக்கு செயற்கை கருவூட்டல் செய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பான ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
இதை படிக்க: ஆர்த்தி ஸ்கேன் நிறுவனத்தில் வருமான வரித்துறை ரெய்டு
தொடர்ந்து சம்பந்தப்பட்ட மருத்துவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. சுமார் 3 மணிநேரம் வரை நடைபெற்ற இந்த விசாரணைக்குப் பின்னர் சுகாதார பணிகள் இணை இயக்குனர் விஸ்வநாதன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், கருமுட்டை விற்பனை விவகாரத்தில் தொடர்ந்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், முழுமையான விசாரணை நிறைவடைந்த பின்னர் இதுகுறித்த அறிக்கை அரசுக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் படிக்க: விக்னேஷ் காவல் மரணம்: போலீசார் 5 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி
விதி மீறலில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டால் மருத்துவமனைகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.சிறுமி அளித்த தகவலின் அடிப்படையில் தமிழகம் மட்டுமின்றி மற்ற சில மாநிலங்களில் புள்ள மருத்துவமனைகளிலும் விசாரணை நடத்தப்படும் என்றும் டாக்டர் விஸ்வநாதன் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து இந்தக்குழுவினர் ஒசூர், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளுக்கும் செல்ல உள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Minor girl, Salem