சேலம் மாவட்டம் கூடமலை பகுதியை சேர்ந்தவர் விவசாயி முருகேசன். இவருக்கு ஜெயலட்சுமி என்கிற மனைவியும் நந்தினி, ரோஜா என்கிற இரண்டு மகள்களும் விஜய் என்கிற ஒரு மகனும் உள்ளனர். முருகேசன் கூடமலையில் இருந்து கடம்பூர் செல்லும் சாலையில் உள்ள தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து குடும்பத்துடன் தோட்டத்திலேயே தங்கி விவசாயம் செய்து வருகிறார்.
முருகேசனின் இரண்டாவது மகள் ரோஜா ஆத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ தமிழ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ஆத்தூர் அருகே உள்ள தாண்டவராயபுரம் பகுதியை சேர்ந்த நீலக்கிருஷ்ணன் மகன் சாமிதுரை என்பவர், கூடமலையில் உள்ள தனது பெரியப்பா சின்னதுரையின் வீட்டிற்கு சென்றபோது கல்லூரி மாணவி ரோஜாவை பார்த்துள்ளார். அப்போது மாணவியை ஒரு தலை பட்சமாக காதலித்து வந்துள்ளார்.
அடிக்கடி மாணவியின் ஊருக்கு சென்ற சாமிதுரை பேருந்தில் கல்லூரிக்கு செல்லும் போது மாணவியை காதலிக்க வலியுறுத்தி கட்டாயபடுத்தியுள்ளதோடு திருமணம் செய்ய வலியுறுத்தி கொலை மிரட்டல் விடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.இச்சம்பவம் மாணவியின் உறவினர்களுக்கு தெரியவந்ததால் ஊரின் முக்கியஸ்தர்களை அழைத்து பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளனர். இதற்கு சாமிதுரையின் உறவினர்கள் இனி சாமிதுரை கூடமலை பகுதிக்கு வரமாட்டார் என உத்தரவாதம் அளித்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பஞ்சாயத்து செய்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த சாமிதுரை ரோஜாவின் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு தோட்டத்திற்கு சென்று வீட்டின் பின்புற பகுதியில் பதுங்கியுள்ளான். இருட்டான பிறகு வீட்டில் இருந்து வெளியே வந்த ரோஜாவை தன்னை காதலித்து திருமணம் செய்து கொள் இல்லையென்றால் உன்னை கொன்று விடுவேன் எனக் கூறியுள்ளான்.
இதற்கு ரோஜா மறுப்பு தெரிவித்து கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்த சாமிதுரை மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை மேலே ஊற்றியுள்ளார் பின்னர் ரோஜாவை கீழே தள்ளி கழுத்தில் காலை வைத்து மிதித்து கொண்டு கல்லை தூக்கி தலையில் போட்டு கொடூரமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
இதை தடுக்க முயன்ற குடும்பத்தாரையும் கீழே தள்ளி விட்டு கொடூரமாக தாக்கியுள்ளார். உடனே ரோஜாவை மீட்டு சிகிச்சைக்காக கூடமலை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு ரோஜாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆத்தூர் டிஎஸ்பி, ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Follow @ Google News:கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பின்னர் இறந்து போன ரோஜாவின் உறவினர்களிடம் டிஎஸ்பி ராமச்சந்திரன் விசாரணை மேற்கொண்ட போது கொலையை யார் நேரில் பார்த்தீர்கள் அவர்கள் மட்டும் இருங்கள் இல்லையென்றால் அனைவரும் கலைந்து செல்லுங்கள் என கூறியதால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. காதலிக்க மறுத்ததால் கல்லூரி மாணவியை வாலிபர் கல்லால் தாக்கி கொலை செய்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.