ஹோம் /நியூஸ் /சேலம் /

ஆண்களே பொங்கல் வைத்து வழிபடும் ‘அஞ்சலான் குட்டை முனியப்பன்’ கோயிலில் கும்பாபிஷேக விழா..!

ஆண்களே பொங்கல் வைத்து வழிபடும் ‘அஞ்சலான் குட்டை முனியப்பன்’ கோயிலில் கும்பாபிஷேக விழா..!

அஞ்சலான் குட்டை முனியப்பன் கோயில்

அஞ்சலான் குட்டை முனியப்பன் கோயில்

வாழப்பாடி அருகே ஆண்கள் மட்டும் பொங்கல்  வைத்து வழிபடும் பழமையான அஞ்சலான் குட்டை  முனியப்பன் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem, India

சேலம் மாவட்டம்  வாழப்பாடி அருகே சிங்கிபுரம் ஊராட்சி  பழனியாபுரம் காலனி எல்லை  வனப்பகுதியில் 200 ஆண்டுகள்  பழமையான அஞ்லான் குட்டை முனியப்பன் கோயில்  அமைந்துள்ளது. கற்சிலையான மூலவர் மட்டுமின்றி சடாமுனி, வால்முனி, செம்முனி ஆகிய ராட்சத உருவம் கொண்ட 3 முனியப்பன் சிலைகளும் கோயில் வளாகத்தில் கம்பீரமாக  காட்சியளிக்கிறது.

ஆள் நடமாட்டமில்லாத வனப்பகுதியில் அமைந்துள்ளதாலும், இரவு  நேரத்தில் காவல்  தெய்வமான ‘முனி’ உலவுவதாகவும், குறி  சொல்லும் குடுகுடுப்பை வேட்டுவர்கள் சக்தி திரட்டுவதாகவும்  நம்பிக்கை தொடர்வதால் இக்கோயிலுக்கு பெண்கள்  செல்வதில்லை. 200 ஆண்டுகளாக இக்கோயிலுக்கு பெண்கள் செல்லவும் அனுமதிப்பதில்லை.

இக்கோயிலில்  ஆண்களே  பொங்கலிட்டு, ஆட்டுக்கிடா, கோழி  பலியிட்டு, கறி சமைத்து சாமிக்கு படையல் வைத்து வழிபடும்  விநோதம் இன்றளவும் மரபு மாறாமல் முன்னோர்கள்  வழியாக  தொடர்ந்து  வருகிறது.

சக்தி வாய்ந்த  காவல் தெய்வமான  அஞ்சலான்  குட்டை  முனியப்பனுக்கு  ஆண்கள்  வைத்த  பொங்கல் மட்டுமின்றி  சமைத்த  கறியையும்  பெண்கள்  சாப்பிடுவதில்லை. இக்கோயில் விபூதியை கூட பெண்கள்  வைத்து கொள்வதில்லை.

கேட்ட வரம் கொடுக்கும் என்ற நம்பிக்கையால் இந்த  முனியப்பன் கோயிலுக்கு சேலம்  மாவட்டத்தின் பல்வேறு  பகுதியை சேர்ந்த ஆண்கள், உறவினர்கள்  மற்றும் நண்பர்களை அழைத்து வந்து பொங்கலிட்டு, ஆடு ,கோழி  பலியிட்டு கறி சமைத்து விருந்து வைத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருவது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.

பிரசித்தி  பெற்ற  இக்கோயில், திருப்பணிகள்  மேற்கொள்ளப்பட்டு புனரமைக்கப்பட்டதை தொடர்ந்து கோயில் கும்பாபிஷேக  விழா  இன்று  காலை  நடைபெற்றது. யாக பூஜை , அபிஷேக, ஆராதனைகளுக்கு  பின் முனியப்பன்  மலர்  மாலை அலங்காரத்தில், பக்தர்களுக்கு  அருள்பாலித்தார்.

Also see... கோவை கார் வெடிப்பு வழக்கில் புதிய தகவல்கள்..

சேலம்,  நாமக்கல் மாவட்டத்தின்  பல்வேறு பகுதியை சேர்ந்த  ஆயிரக்கணக்கான ஆண் பக்தர்களும், சுற்றுப்புற கிராமங்களைச்  சேர்ந்த பொதுமக்களும் பங்கேற்று வழிபாடு நடத்தினர். தொடர்ந்து  48 நாட்களுக்கு மண்டல அபிஷேக பூஜைகள் நடத்திடவும்  அஞ்சலான் குட்டை  முனியப்பனை குல தெய்வமாக வணங்கி வரும்  இப்பகுதி மக்கள்  திட்டமிட்டுள்ளனர்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Hindu Temple, Salem