ஹோம் /நியூஸ் /சேலம் /

சேலத்தில் இலங்கை அகதிகள் முகாமில் கத்தியுடன் இரு தரப்பினர் மோதல்... கஞ்சா போதை காரணம் என பெண்கள் குற்றச்சாட்டு...

சேலத்தில் இலங்கை அகதிகள் முகாமில் கத்தியுடன் இரு தரப்பினர் மோதல்... கஞ்சா போதை காரணம் என பெண்கள் குற்றச்சாட்டு...

இலங்கை அகதிகள் முகாமில் மோதல்

இலங்கை அகதிகள் முகாமில் மோதல்

Salem | தாரமங்கலம் அருகே பவளத்தானூர் இலங்கை அகதிகள் முகாமில் இரு தரப்பினரிடையே கோஸ்டி மோதல் ஏற்ப்பட்டது. அதில் இரண்டு பேருக்கு கத்திக்குத்து விழுந்ததுடன், 10 மோட்டார் சைக்கிகள் அடித்து நொறுக்கப்பட்டது. இந்த மோதல் தொடர்பாக தாரமங்கலம் போலீசார் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Salem, India

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ளது பவளத்தானூர். இங்கு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது. இந்த முகாமை சேர்ந்த சுஜிமான் என்பவரது வீட்டிற்கு, அவருடன் படித்த தாரமங்கலம் நகராட்சியைச் சேர்ந்த 18 வயது சசிதரன், என்பவர் வந்துள்ளார். மேலும், கடந்த சில நாட்களாக சசிதரன் வீட்டிற்கு செல்லாமல் அங்கேயே தங்கியுள்ளார். இதனால் சசிதரனின் உறவினர்கள் மூன்று பேர் சுஜிமான் வீட்டிற்கு வந்து சசிதரனை அழைத்துள்ளனர். ஆனால், சசிதரன் அவர்களுடன் செல்ல மறுத்துள்ளார்.

இந்த நிலையில் அங்கு இருந்தவர்களுடன் வாய்த் தகராறு மற்றும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து சசிதரனை அழைத்து செல்ல வந்தவர்கள், அரவிந்த் என்பவருக்கு போன் செய்து முகாமில் இருப்பவர்கள் தங்களை தாக்கி விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து 10-க்கும் மேற்பட்டோர் அகதிகள் மறு வாழ்வு முகாமிற்கு சென்று அங்கிருந்த 10-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தி பெண்களையும் தாக்கியுள்ளனர்.

அப்போது முகாமை சேர்ந்த வாலிபர்கள் சிலர் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து வந்து அரவிந்த் தரப்பை சேர்ந்த குணா மற்றும் பாரதிகண்ணன் ஆகியோரை குத்தியுள்ளனர். இதில், இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மயக்கம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தாரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருதரப்பையும் சமானதானம் செய்தனர்.

தொடர்ந்து படுகாயமடைந்த இருவரையும் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து முகாம் பகுதியை சேர்ந்த சாந்தி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் அரவிந்த், கார்த்தி, வல்லரசு, பிரதீப், பாரதிகண்ணன், குணா, ராகுல் உள்ளிட்ட 9 பேர் மீதும், குணா கொடுத்த புகாரின் பேரில் ராகுல், அருண், சசிமான் என மொத்தம் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Also see... வரும் 29ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும்.. வானிலை ஆய்வு மையம்!

இதனிடையே நடந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு சென்ற போலீசாரையும், வருவாய்த்துறை அதிகாரிகளையும் முகாமை சேர்ந்த மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முகாம் பகுதியை சேர்ந்த பெண்கள் கூறும்போது, இங்குள்ள இளைஞர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகி வருவதாகவும், கஞ்சா போதையாலேயே மோதல் சம்பவத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர்.

அதனால், கஞ்சாவை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இதுகுறித்து தாரமங்கலம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Cannabis, Crime News, Salem, Sri Lanka