கொலை செய்யப்பட்ட ராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அமைதி பேரணியாக மெழுகுவர்த்தி ஏந்திச்சென்ற மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் கட்சித் தொண்டர்கள் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்தது தமிழக அரசின் அராஜகப் போக்கை வெளிப்படுத்துவதாக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணன் திருப்பதி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் திருமங்கலம் ஃபார்முலா என்பதை விட இந்த முறை ஈரோடு கிழக்கு பார்முலா என்ற புதிய முறையை திமுக அரசு வழங்கி இருக்கிறது. மக்களை பட்டியில் அடைத்து வைத்து அவர்களுக்கு சினிமா படங்களை காண்பித்து காலை முதல் இரவு வரை வெளியே வராத வண்ணம் அவர்களை முடக்கி வைத்திருக்கின்றனர். மிக மோசமான முறையில் திமுக பணத்தை செலவழித்து வருகின்றனர். ஒரு சட்டமன்றத் தொகுதியை வெற்றி பெற்று விட வேண்டும் என்ற வெறியில் திமுக செயல்பட்டு வருகின்றனர். இதற்குக் காரணம் திமுக ஆட்சி சரிவர செயல்படாததே காரணம். மக்களை பணத்தால் அடித்து விலைக்கு வாங்கி விடலாம் என்ற கர்வத்தை அவர்களிடம் பார்க்க முடிகிறது. இதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது என்றார்.
அடித்து கொலை செய்யப்பட்ட ராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அமைதி பேரணியாக மெழுகுவர்த்தி ஏந்திச்சென்ற மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் கட்சித் தொண்டர்கள் மீது வழக்கை பதிவு செய்துள்ளது காவல்துறை. இது தமிழக அரசின் அராஜகப் போக்கை மீண்டும் வெளிப்படுத்துகிறது. ஒரு ராணுவ வீரர் அடித்துக் கொல்லப்பட்டிருக்கும் போது கூட முதல்வர் அவர்களை விசாரிக்காமல் இருப்பது வேதனையை அளிக்கிறது. இதுவரை திமுக எந்த ஒரு அறிக்கையும் கொடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் மௌனம் சாதிப்பதற்கு காரணம் ஏன் என தெரியவில்லை. கட்சியில் இருந்து கூட அவரை நீக்கவில்லை என்றால், எந்த செய்தியை அவர்களுக்கு தெரிவிக்கிறீர்கள் என்பது தெரியவில்லை என்ற அவர், பிரியாணி கடைக்கு போய் ஆறுதல் சொல்லத் தெரிந்த முதல்வர் ஸ்டாலினுக்கு சேலம் வந்தபோது பக்கத்தில் இருக்கும் கிருஷ்ணகிரிக்கு சென்று ஆறுதல் சொல்லாதது ஏன் என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து திமுக வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்டு வருகிறது. அதை முதல்வர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்.இரண்டு ஆண்டுகளில் மக்களுக்கான எந்த வளர்ச்சி திட்டங்களும், கட்டமைப்பு திட்டங்களும், வேலைவாய்ப்பும் இல்லை. ஆனால் 24 மணி நேரமும் மது விற்பனை அமோகமாக செயல்படுகிறது என்ற அவர், உண்மையில் மொழி பிரச்சனை, மதவாத அரசியலை முன்னெடுப்பது திமுக மற்றும் காங்கிரஸ் தான் என்றார். மேலும் வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் காவல்துறை நினைத்தால் உடனடியாக சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய முடியும் ஆனால் இதுவரை அவர்களை காவல்துறையினர் கைது செய்யவில்லை காவல்துறை செயல்பட தமிழக அரசு அனுமதிக்க வில்லை என்று குற்றம் சாட்டினார்.
மேலும், ஈரோடு இடைத்தேர்தலில் நடக்கும் உண்மையை வெளிக்கொண்டுவரும் நோக்கில் செய்தியாளர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக நாராயணன் திருப்பதி தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.