ஆடிப்பெருக்கு நாளில் மேட்டூர் காவிரியில் நீராட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஒரு லட்சத்திற்கு அதிகமானோர் வந்து செல்வது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா அச்சம் காரணமாக ஆடிப்பெருக்கில் காவிரியில் நீராட தடை விதிக்கப்பட்டு இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு காவிரியில் நீராட இந்த ஆண்டு குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேட்டூர் அணைக்கு வெள்ளப்பெருக்கு காரணமாக அதிக அளவில் நீர்வரத்து வந்து கொண்டிருப்பதாலும், வினாடிக்கு ஒரு லட்சத்து 40,000 கன அடி வரை வெள்ளநீர் வெளியேற்றப்படுவதாலும் மாவட்ட நிர்வாகத்தால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இன்று ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு மேட்டூர் காவிரியில் புனித நீராட பொதுமக்கள் காலை முதலே வரத் தொடங்கினர். மேட்டூர் அணையின் அடிவாரம் மட்டம், காவிரி படித்துறை, மற்றும் கிழக்குக்கரை கால்வாய் ஆகிய இடங்களில் மட்டும் காவிரியில் நீராட அனுமதி வழங்கப்பட்டது. காவிரியில் தண்ணீர் அதிகளவில் செல்வதால், போலீசார் தடுப்புகளை அமைத்து பொது மக்கள் பாதுகாப்பாக குளிக்க அனுமதித்தனர்.
பக்தர்கள் தங்கள் கோவில்களில் இருந்து கொண்டுவந்த சாமி சிலைகள் மற்றும் பூஜைப் பொருட்களை காவிரி ஆற்றில் சுத்தம் செய்து சிறப்பு பூஜைகள் செய்தனர். முதன்முதலாக ஆடிப்பெருக்கு விழாவைக் கொண்டாடும் புதுமணத்தம்பதிகள் அருகம்புல் தலையில் வைத்து நீராடினர்.
பின்னர் திருமணத்தின்போது தங்களுக்கு அணிவிக்கப்பட்ட மாலைகள், முகூர்த்தக்கால் ஆகியவற்றை கொண்டு வந்து நீர்நிலைகளில் விட்டனர். ஏற்கனவே கட்டிய தாலியை கழற்றிவிட்டு புதிய மஞ்சள் கயிறை மனைவிமார்களுக்கு அணிவித்தனர். முன்னதாக அவர்கள் காவிரித்தாயை மனமுருக வழிபட்டனர். நீராடல் முடிந்து புதுமணத்தம்பதிகள் புதிய வேட்டி, சட்டை, சேலைகளை அணிந்து கொண்டு வழிபட்டனர்.
மேட்டூர் காவிரி கரையோரத்தில் நான்கு இடங்களில் தற்காலிக உடைமாற்று அறைகள் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தடுப்பதற்காக 100-கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். யாரேனும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டால், அவர்களை மீட்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு படையினர் ரப்பர் படகு மூலம் தயார் நிலையில் உள்ளனர். இருப்பினும் வெள்ள அச்சம் காரணமாக பொதுமக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.
Also see... ஆடிப்பூரம்: மடிசார் சேலை கட்டி பக்தர்களுக்கு காட்சியளித்த அகிலாண்டேஸ்வரி அம்மன்
இதேபோல், எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி காவேரி ஆற்றில் கட்டுப்படுத்தப்பட்டு இடங்களான பில்லுக்குறிச்சி கால்வாய் , பூலாம்பட்டி சந்தை கூடக்கல் குப்பனூர் ஆகிய பகுதியில் மட்டும் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். அனுமதிக்க படாத இடங்களில் குளித்தால் வருவாய்துறையினர் , காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். அப்பகுதியில் பெரும் அளவில் கூட்டம் அதிகரித்து வருவதால் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.