ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரி ஆற்றில் அனுமதித்த இடங்களில் மட்டும் நீராட வேண்டும் என்றும், அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர மற்ற பகுதிகளில் நீராட வேண்டாம் என்றும் ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் மாவட்டம், மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியில் உள்ள நிலையில், தற்போது அணைக்கு வரும் 75 ஆயிரம் கன அடி நீரும் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் சுமார் 1 இலட்சம் கனஅடிக்குமேல் தண்ணீர் வர வாய்ப்புள்ளதால், அவ்வாறு அணைக்கு வரும் நீரானது முழுமையாக உபரி நீராக வெளியேற்றப்படும்.
மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் அதிகளவில் திறக்கப்படும் என வருவாய்த்துறை, நீர்வளத்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதோடு தண்டோரா மூலமும், ஒலிப்பெருக்கி மூலமும், தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் வாயிலாகவும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், நாளை 03.08.2022 (ஆடி 18) ஆடிப்பெருக்கு விழாவினை முன்னிட்டு, காவிரி ஆற்றில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பொது மக்கள் புனித நீராட வேண்டும். மற்ற பகுதிகளில் நீராட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேட்டூர் அணைக்குத் தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் காவிரி கரையோரம் வசிக்கும் பொது மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆபத்தை விளைவிக்கும் வகையில் யாரும் நீர் நிலைகளுக்கு அருகில் செல்வதோ, புகைப்படங்கள் எடுப்பதோ கூடாது என எச்சரிக்கப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் எவரும் மேட்டூர் அணையின் கரையோரம் காவிரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகள், அணையின் தாழ்வான பகுதிகள், சேலம் மாவட்டம், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி வட்டங்கள் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகள், நீர்படுகைகள் மற்றும் நீர் வழித்தடங்கள், மேட்டூர் அணை பூங்கா, செக்கானூர் ககவணை, கோட்டையூர், பரிசல்துறை,பூலாம்பட்டி, நெரிஞ்சிப்பேட்டை உள்ளிட்ட காவேரி கரையோரப் பகுதிகளில் சிறுவர்கள்
மற்றும் பொதுமக்கள் நீர் நிலைகளுக்கு அருகில் செல்வதை முற்றிலும் தவிர்த்திட வேண்டும்.
குறிப்பாக, காவிரியில் இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோர் நீரில் இறங்கி குளிப்பதையோ, நீச்சல் அடிப்பதையோ, மீன் பிடிப்பதையோ, கால்நடைகளை குளிப்பாட்டுவதையோ, புகைப்படங்கள் மற்றும் சுயபடங்கள் எடுப்பதையோ, காவிரி கரையோரங்களில் நின்று வேடிக்கை பார்ப்பதையோ முற்றிலும் தவிர்த்திட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மீறினால் காவல்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cauvery River, Mettur Dam, Salem