முகப்பு /செய்தி /சேலம் / சொத்து தகராறு : சேலத்தில் கிரில் பட்டறை அதிபரை கொல்ல முயன்ற தம்பதி உட்பட 5 பேர் கைது

சொத்து தகராறு : சேலத்தில் கிரில் பட்டறை அதிபரை கொல்ல முயன்ற தம்பதி உட்பட 5 பேர் கைது

கைதானவர்கள்

கைதானவர்கள்

Salem News : சேலத்தில் கிரில் பட்டறை அதிபரை கொலை செய்ய முயற்சி செய்த சம்பவத்தில் கணவன், மனைவி உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Salem, India

சேலம் செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (40) . இவர் பள்ளப்பட்டி கோரிக்காடு பகுதியில் கிரில் பட்டறை நடத்தி வருகிறார். கடந்த வாரம் கிரில் பட்டறையில் சிவக்குமாரும், கூலி தொழிலாளர்கள் சாரதி, பாஸ்கர் இருவரும் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது முகமூடி மற்றும் ஹெல்மட் அணிந்த 3 பேர் திடீரென கிரில் பட்டறைக்குள் புகுந்து சிவக்குமாரை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கி அங்கிருந்து தப்பினர். இந்த தாக்குதலில் சிவக்குமார் மற்றும் அவரது 2 ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் படுகாயமடைந்த மூவரையும் மீட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் குறித்தான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்மல்ஹோடா உத்தரவிட்டார். அதன்பேரில் சூரமங்கலம் உதவி கமிஷனர்  நாகராஜன் தலைமையில் பள்ளப்பட்டி காவல் ஆய்வாளர் ராணி மற்றும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதன்படி கிரில் பட்டறை அதிபர் சிவக்குமார் கொலை முயற்சி நடந்த சம்பவம் தொடர்பாக சேலம் செவ்வாய்பேட்டையை  சேர்ந்த டிப்ளமோ இன்ஜினியர் பாபு(32), அவரது மனைவி நந்தினி( 30), உறவினர் விமல்ராஜ்(28), கிஷோர்(23) மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் சிவக்குமாரின் தந்தை கந்தசாமி 15 வருடங்களுக்கு முன்பு கடன் பிரச்சனையால் சிரமப்பட்டு வந்தார். இதனால் பாபுவின் மாமனார் ஏழுமலை ரூ.4 லட்சத்து 80 ஆயிரத்தை கந்தசாமியிடம் கொடுத்து பிரச்சனையை முடித்து வைத்தார். அப்போது கந்தசாமி, அவரது  வீட்டை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என ஏழுமலையிடம் கந்தசாமி தெரிவித்ததாக தெரிகிறது. இதன்பிறகு கந்தசாமி இறந்து விட்டார். இந்த வீட்டை கந்தசாமி தெரிவித்ததுபோல தனக்கு எழுதி தர வேண்டும் என பாபு, கிரில் பட்டறை உரிமையாளர் சிவக்குமாரிடம் தகராறில் ஈடுபட்டு  வந்துள்ளார். ஆனால் இதற்கு சிவக்குமார் ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பாபு அவரது மனைவி நந்தினி மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து சிவக்குமாரை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.

இதற்காக பாபு  கூலிப்படை அமைத்து சிவகுமாரை தாக்கியுள்ளார். கூலிப்படையினர் சிவகுமாரை வெட்டும்போது கொடுவாளில் இருந்த பிடி கீழே விழுந்து விட்டதால் சரியாக சிவகுமாரை வெட்ட முடியவில்லை. இதனால் சிவக்குமார் உயிர் பிழைத்துள்ளது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள கூலிப்படையினரை தற்போது சேலம் தனிப்படை போலீசார் மதுரை மற்றும் நெல்லையில் வலை வீசி தேடி வருகின்றனர். மேலும் கைது செய்யப்பட்ட பாபு, விமல்ராஜ், கிஷோர், நந்தினி ஆகியோரை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பாபு, விமல்ராஜ், கிஷோர் ஆகிய சேலம் மத்திய சிறையிலும், நந்தினி பெண்கள் சிறையிலும், அடைக்கப்பட்டனர். 16 வயது சிறுவன் அரசு காப்பகத்தில் அனுப்பி வைக்கப்பட்டான்.

செய்தியாளர் : திருமலை தமிழ்மணி - சேலம்

First published:

Tags: Crime News, Local News, Salem