Home /News /salem /

செல்போன் டவரை காணோம்.. ஷாக்கான ஊழியர்கள் - நூதன முறையில் திருடிய கும்பல் சிக்கியது

செல்போன் டவரை காணோம்.. ஷாக்கான ஊழியர்கள் - நூதன முறையில் திருடிய கும்பல் சிக்கியது

ரூ.30 லட்சம் மதிப்பிலான மொபைல் போன் டவரை திருடி சென்ற 3 பேர் கைது

ரூ.30 லட்சம் மதிப்பிலான மொபைல் போன் டவரை திருடி சென்ற 3 பேர் கைது

Salem | வாழப்பாடி அருகே ரூ.30 லட்சம் மதிப்பிலான மொபைல் போன் டவரை நூதன முறையில் திருடி சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Salem, India
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே எம்.பெருமாபாளையம் கிராமத்தை சேர்ந்த சுப்ரமணி என்பவரது இடத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு தனியார் நிறுவனம் சார்பில் மொபைல் போன் டவர் அமைக்கப்பட்டது. இந்த செல்போன் டவரை பாதுகாக்க  அப்பகுதியை சேர்ந்த ஒருவரை பாதுகாவலராக நியமித்து இருந்தனர்.

இதனிடையே  கடந்த  ஜூலை மாதம் இறுதியில் 10பேர் கொண்ட ஒரு கும்பல் அங்கு வந்து அங்கிருந்த பாதுகாவலரிடம்  சில ஆவணங்களை காட்டி இந்த செல்போன் டவர் செயல்படாமல் உள்ளது. எனவே இதை  கழற்றி  வேறு  இடத்தில் அமைக்க உள்ளோம்  என்று  தெரிவித்துள்ளனர். பின்னர் அந்த கும்பல் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்  டவரை  ராட்சத  கிரேன் இயந்திரங்களைக்  கொண்டு முழுவதுமாக கழற்றிச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில்  கடந்த சில தினங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தை சேர்ந்த பணியாளர்கள் செல்போன் டவரில்  பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக அங்கு வந்து பார்த்தனர். அப்போது அங்கு செல்போன் டவர் மாயமாகி இருந்ததை கண்டு  அதிர்ச்சி அடைந்தனர். செல்போன் டவர் அமைக்க அடிப்பகுதியில்  இருந்த கான்கிரீட் தூண்கள் மட்டுமே காட்சி அளித்துள்ளது. இதை  கண்டு  திடுக்கிட்ட அவர்கள்  நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர்.

பின்னர் சேலத்தை  சேர்ந்த செல்போன் டவர் பராமரிப்பு மேலாளர் தமிழரசன் வாழப்பாடி காவல் நிலையத்தில்  அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு  செய்த போலீசார் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடி வந்தனர். தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில் செல்போன் டவரை திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி ஏமன்குளம் பகுதியைச் சேர்ந்த நாகமுத்து [ 35 ] வாழப்பாடி காமராஜர் நகர் ஆத்துமேடு பகுதியைச் சேர்ந்த ராகேஷ் சர்மா [ 38 ] மற்றும் துாத்துக்குடி மாவட்டம் ஏரல் ஆழ்வார் திருநகர் பகுதியை சேர்ந்த சண்முகம் [ 33 ] ஆகிய மூவருடன் பத்து பேர் கொண்ட கும்பல் திருடி ஸ்ரீவில்லிபுத்துாரில் விற்பனை செய்தது தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் டவர் பாகங்கள்


இதனையடுத்து மூவரையும் கைது செய்த தனிப்படை போலீஸார், மேட்டுப்பட்டியில் திருடப்பட்ட செல்போன் டவரின் பாகங்கள், ஜெனரேட்டர் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த நுாதன திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற நபர்களையும் தேடி வருகின்றனர். இச்சம்பவத்தைப் போன்றே ஒரு கும்பல் உள்ளூர் புள்ளிகளின் உதவியுடன், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மட்டுமின்றி தமிழக முழுவதும் பல்வேறு பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான செயல்படாத ஏராளமான செல்போன் டவர்களை நுாதன முறையில் திருடியுள்ளது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Also see.. கடையிலிருந்த உலோக சிலைகளை திருடி, கடை உரிமையாளரிடமே விற்பனை செய்து வந்த கடை ஊழியர் கைது

மேலும் வாழப்பாடியில் பிடிபட்டுள்ள இந்த கும்பலிடம் உரிய விசாரணை நடத்தினால், தமிழகம் முழுவதும் நடைபெற்ற பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நூதன திருட்டு குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவருமென கூறப்படுகிறது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Crime News, Mobile phone, Salem, Thief

அடுத்த செய்தி