ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை மங்களநாத சாமி திருக்கோவிலில் ஜன.5-ந்தேதி (நாளை) நடைபெறும் ஆருத்ரா தரிசன விழாவின் சிறப்பு நிகழ்ச்சியான சந்தனக் காப்பு களைப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தரிசனம் செய்பவர்களுக்கு விலையில்லா சந்தனம் வழங்கப்படும் என்று ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் திவான் மற்றும் நிர்வாக செயலாளர் பழனிவேல் பாண்டியன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது,
திருஉத்தரகோசமங்கை மங்களநாதசாமி திருக்கோவில் வளாகத்தில் மரகதத்திலான நடராஜர் சிலை உள்ளது. ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்டு காட்சியளிக்கும் நடராஜர் சிலை சிவனுக்கு உகந்த நாளான ஆருத்ரா தரிசனத்தையொட்டி சந்தனக்காப்பு களையப்படும். நாளை 5-ந் தேதி காலை 8 மணிக்கு சந்தனம் களைதலும், காலை 9 மணிக்கு மூலவர் மரகத நடராஜ பெருமானுக்கு மகா அபிஷேகமும் நடைபெறும்.
அதை தொடர்ந்து, இரவு 11 மணிக்கு மேல் மூலவர் மரகத நடராஜ பெருமானுக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் நடைபெறும். அதன் பிறகு, ஜன. 6-ந்தேதி அதிகாலை ஆருத்ரா தரிசனமும் நடைபெறும். தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்பட்டதால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் 1.50 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், போலி சந்தன பாக்கெட்டுகள் விற்பனையை தடுக்க திவீரமாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பக்தர்கள் சிரமமில்லாமல் தரிசனம் மேற்கொள்ளும் வகையில் இலவச தரிசனம், ரூ.10, ரூ.100, ரூ.250 என நான்கு பிரிவுகளாக மரத்தடுப்புகள் அமைத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர வி. ஐ, பி, வி.வி.ஐ.பி.க்களுக்கு தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. தரிசனம் முடிந்ததும் பக்தர்கள் சிரமமின்றி வெளியில் செல்ல இரண்டு புதிய பாதைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், ரூ.100, ரூ.250 கட்டணம் செலுத்தி சிறப்பு தரிசனம் செய்பவர்களுக்கு விலையில்லா சந்தனம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க 28 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இது தவிர 20 கேமரா கூடுதலாக பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டடு வருகிறது.
அத்துடன், கோவில் வளாகத்தில் 12 இடங்களில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வரிசையில் நீண்ட நேரமாக நிற்கும் பக்தர்களின் தாகத்தை போக்கும் வகையில் குறிப்பிட்ட இடத்திற்கே சென்று சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர் வழங்கிட கோவில் நிர்வாகத்தால் தனிக்குழு அமைக்கபபட்டுள்ளது. இரவில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக பால் வழங்கப்படும்.
மதுரை, காரைக்குடி, சாயல்குடி, முதுகுளத்தூர் உள்பட முக்கிய ஊர்களில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் உள்ள புதிய கலையரங்கத்தில் ஜன.5-ந்தேதி காலை 9 மணி முதல் 6-ந் தேதி காலை 9 மணி வரை நாட்டியாஞ்சலி விழா நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 26 குழுவினர் பங்கேற்க உள்ளனர்.
ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் சேதுபதி ராணி ராஜேஸ்வரி நாச்சியார் அறிவுரையின்படி அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடந்து வருகிறது" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
செய்தியாளர்: வீரக்குமரன், ராமநாதபுரம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ramanathapuram