ஒற்றுமை திருவிழா எனப்படும் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழாவுக்கான பயணத்தை ராமநாதபுரம் ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ராமேஸ்வரத்தில் இருந்து 12 மைல் தொலைவிலும், இலங்கையின் நெடுந்தீவில் இருந்து 10.5 மைல் தொலைவிலும் 285 பரப்பளவில் அமைந்துள்ளது கச்சத்தீவு. இங்கு 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் ராமநாதபுரத்தை சேர்ந்த சீனிகுப்பன் படையாட்சி என்பவர் அந்தோணியார் தேவாலயத்தை கட்டியுள்ளார். இந்த தேவாலயத்தில் ஆண்டு தோறும் மார்ச் முதல் வாரத்தில் வருடாந்திர திருவிழாவும், தவக்கால யாத்திரையும் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு மார்ச் 3,4 ஆகிய தேதிகளில் இந்த திருவிழா நடைபெறுகிறது.
இந்த திருவிழாவில் பங்கேற்க தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கிறிஸ்தவ மக்கள் உள்ளிட்ட 2408 பேர் பயணம் செய்ய விண்ணப்பித்துள்ளனர். இதே போல இலங்கையில் இருந்தும் 3,000-க்கும் மேற்பட்ட பயணிகள் பங்கேற்கிறார்கள். ராமேஸ்வரத்தில் உள்ள மீன் இறங்கு தளத்தில் இருந்து 60 விசைப்படகுகள் மற்றும் 12 நாட்டுப் படகுகளில் பயணிகள் முழு பாதுகாப்புடன் அழைத்து செல்லப்படவுள்ளனர்.
அந்தோணியார் கோவிலில் மார்ச் 3 மாலை 4 மணிக்கு கொடியேற்றமும், அதனை தொடர்ந்து திருச்செபமாலை, திருச்சிலுவை பாதை தியானம், நற்கருணை ஆராதனை, திருச்சொரூப பவனி உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெறும். மார்ச் 4 காலை 7 மணிக்கு திருச்செபமாலை, திருவிழா திருப்பலி, திருசொரூப ஆசீரும் நடைபெற்று திருவிழா நிறைவுறும்.
இந்த திருவிழாவில் பங்கேற்க செல்லும் பயணிகளை ராமேஸ்வரம் மீன் இறங்கு தளத்தில் இருந்து பரிசோதித்து பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் பணிகளை மேற்கொள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் கடற்படை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டனர். .பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும், கத்தி போன்ற ஆயுதங்களை கொண்டு வர கூடாது, போதை பொருட்களை கொண்டு செல்ல கூடாது, கைபேசி தவிர்த்த வேறு எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்லக் கூடாது, அதிகமான தங்க ஆபரணங்கள், ரொக்கம் கொண்டு செல்ல கூடாது, வியாபார நோக்கத்துடன் எந்த பொருட்களையும் கொண்டு செல்ல கூடாது போன்ற அறிவுறுத்தல்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இலங்கைக்கு கச்சதீவு அளிக்கப்பட்ட பின்னர், அந்நாட்டு கடற்படையால் அரை நூற்றாண்டு காலமாக தமிழ்நாட்டு மீனவர்கள் சந்திக்கும் இன்னல்கள், அவலங்களால் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையின் படி கச்சதீவு தமிழ்நாட்டுக்கு ஒரு கனவுத்தீவாகவே பார்க்கப்படுகிறது. இந்த தீவில் ஆண்டுக்கு ஒரே ஒரு நாள் தமிழ்நாட்டு மக்களும் - இலங்கை மக்களும் ஒன்றாக பங்கேற்கும் இந்த அந்தோணியார் கோயில் திருவிழா ஒற்றுமையின் திருவிழாவாக கருதப்படுகிறது. கச்சத்தீவு அந்தோணியார் தேவாலயத்தில் இந்திய - இலங்கை மக்களின் பங்களிப்புடன் நடைபெறும் வருடாந்திர திருவிழாவுக்கான பயணத்தை ராமநாதபுரம் ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ramanathapuram, Rameshwaram, Srilanka, Tamil News