ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மணி நகர் பகுதியில் வசித்து வருபவர் முருகன். இவர் நயினார் கோவில் அரசு ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சிறு வயதிலிருந்து பழங்கால பொருட்கள் மீது பற்றுகொண்டவர். இதனால் அவற்றை சேகரிக்கும் பணியில் ஈடுபட தொடங்கியுள்ளார். அதன்படி கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக பழங்கால பொருட்கள் மற்றும் நாணயங்களை சேமித்து வந்துள்ளார். இதற்காக அவர் இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் சென்று பொருட்கள் மற்றும் நாணயங்களை வாங்கி சேகரித்து வந்துள்ளார்.
அந்த வகையில் சுமார் 1800 -1900ம் ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், தொலைநோக்கு கருவி, வானொலி, தொலைபேசி, தட்டச்சு இயந்திரம், மைபேனா போன்றவற்றை பழமை மாறாமல் இன்றும் பாதுகாத்து வருகிறார். மேலும் சோழ மன்னர்களின் ஆட்சி காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்தபோது பயன்படுத்தப்பட்ட நாணயங்கள் அவர்கள் அன்றைய நாணய மதிப்பில் செய்த பத்திர பதிவுகள் அதற்கான பத்திரங்கள் போன்றவற்றை பழமை மாறாமல் பாதுகாத்து வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “எனது சிறு வயதில் இருந்த ஆர்வம் தற்போது வரை குறையாமல் உள்ளது. இன்னும் பல பழமையான பொருட்கள் மற்றும் நாணயங்களை தேடி சேகரித்துக்கொண்டு வருகிறேன். வருங்கால மாணவர் சந்ததிகள் பழங்கால பொருட்கள் மற்றும் நாணயங்களை வெறும் புகைப்படமாக பார்க்க கூடாது. அவர்களுக்கு இது நேரடியாக சென்று சேர வேண்டும் என்பது எனது ஆசை. இதை ஒவ்வொரு பள்ளியிலும் காட்சிப்படுத்த வேண்டும். நான் சேகரித்த பொருட்கள் மற்றும் நாணயங்களை அரசிடமே ஒப்படைத்து விடுவேன்” என்றார்.
இதுபோன்ற அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்களது ஆசிரியர் பணியை மட்டுமே பாராமல் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு செயல்படுவது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இவரது இந்த பணியை பாராட்டி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழும் வழங்கி உள்ளார்.
செய்தியாளர்: தமிழ்ச்செல்வன் - பரமக்குடி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram