Home /News /ramanathapuram /

புதிய பாலம் கட்டுமானத்தால் 300 ஏக்கர் விவசாயம் பாதிப்பு... ராமநாதபுரத்தில் விவசாயிகள் வேதனை...

புதிய பாலம் கட்டுமானத்தால் 300 ஏக்கர் விவசாயம் பாதிப்பு... ராமநாதபுரத்தில் விவசாயிகள் வேதனை...

பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட சாலை

பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட சாலை

Ramanathapuram | ராமநாதபுரம் அருகே புதியதாக கட்டப்பட்டுவரும் பாலத்தால் 300 ஏக்கர் விவசாயம் பாழாய் போவதாக விவசாயிகள் பரிதவிக்கின்றனர். இது குறித்து அதிகாரிகளும் அலட்சியம் காட்டுவதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India
    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் வட்டத்திற்கு உட்பட்டது கருங்குடி கிராம வட்டம். இந்த கருங்குடி வட்டத்தில் பால்குளம், ஊரவயல், கருங்குடி, வளமாவூர், மாவிலிங்கை ஏந்தல் ஆகிய 5 கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களைச் சேர்ந்த மக்களுடைய வாழ்வாதாரமே விவசாயம் தான். விவசாயத்தை ஆதாரமாககொண்டு விவசாயத்தை நம்பியே இக்கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    தமிழக அளவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 48 மடை கொண்ட ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் என்ற பெயர் பெற்ற கண்மாய் இருக்கிறது. ஆனால்  பால்குளம் கண்மாய்க்கு உரிய வரத்து கால்வாய் இல்லாததால் வானம் பார்த்த பூமியான பால்குளம் கன்மாய்க்கு மழை பெய்தால் மட்டுமே தண்ணீர் பெருகும். அப்போதுதான் விவசாயம் செய்ய முடியும் என்ற சூழல் இருந்து வருகிறது. இந்நிலையில் பால்குளம் கண்மாய் தண்ணீரை நம்பி 300 ஏக்கரில் 5 கிராம விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். குறிப்பாக நெல், மிளகாய், பருத்தி போன்ற விவசாயத்தில் அதிகமாக ஈடுபடுகின்றனர்.

    இந்நிலையில் கொத்தியார்கோட்டை வழியாக சோழந்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் நெடுஞ்சாலை துறையினர், சாலையை பிளந்து பாலம் அமைக்கும் பணியை தொடங்கியுள்ளனர். சுமார் 17 லட்சம் மதிப்பீட்டில் பாலம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ள நிலையில், இந்த பாலம் அமைப்பதற்கு பால்குளம் மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

    கொத்தியார் கோட்டை அருகில் சாலையின் நடுவில் பாலம் அமைத்தால் பால்குளம் கண்மாயின் தண்ணீர் கொத்தியார் கோட்டை வழியாக வெளியேறிவிடும் என்றும், இதனால் 300 ஏக்கரில் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் பால்குளம் கிராம மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர், வருவாய் கோட்டாட்சியர், நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் ஏற்கனவே மனுக்கள் கொடுத்தும் இதுவரை எந்த பலனும் இல்லை.

    பாலம் கட்டும் பணி நிறுத்தம்:

    மேலும் கொத்தியார் கோட்டை கிராமத்தின் மழைநீர் செல்வதற்கு ஏற்கனவே உள்ள வரத்து கால்வாய் சீரமைப்பு செய்தாலே தண்ணீர் தேங்காமல் சென்று விடும். ஆனால் அதிகாரிகள் இதுவரை அந்த வரத்து கால்வாயையும் சரி செய்யவில்லை என்றும் பால்குளம் கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    இந்நிலையில் உடனடியாக பாலம் கட்டும் பணியை நிறுத்திடக்கோரி பால்குளம் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரை நேற்று சந்தித்து கோரிக்கை மனு அளித்ததன் அடிப்படையில் தற்காலிகமாக பாலம் கட்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பால்குளம் விவசாயி ரவிச்சந்திரன் கூறுகையில்: ”நெடுஞ்சாலை துறையினர் சாலையை துண்டித்து பாலம் கட்டுவதால் பால்குளம் கண்மாயில் 300 ஏக்கரில் விவசாயம் செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். கொத்தியார் கோட்டை கிராமத்தின் உபரி நீர் வெளியேறுவதற்காக பாலம் கட்டப்படுவதாக தவறான தகவலை நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்துள்ளனர்.



    ஆண்டாண்டு காலமாக கொத்தியார் கோட்டையின் உபநீர் வரத்து கால்வாயில் வழியாகவே கண்மாய்க்கு சென்றது. தற்போது அந்த வரத்து கால்வாயை கொத்தியார் கோட்டை மக்களே ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றாமல் 300 ஏக்கர் விவசாயத்தை பாலாக்கும் இந்த பாலத்தை கட்டுகின்றனர். மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவின் காரணமாக பாலம் கட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

    நிரந்தரமாக நிறுத்திவிட்டு முழுமையான சாலையை அமைத்திட வேண்டும். அப்படி பாலம் கட்டும் பணியை நிறுத்தாவிட்டால் அரசு கொடுத்த அனைத்து அரசு அடையாள அட்டைகளையும் மாவட்ட ஆட்சியரிடமே திரும்பி ஒப்படைத்து விட்டு கிராமத்தை விட்டு வெளியேறி விடுவோம்” என்று தெரிவித்தார்.



    Also see... திருச்செங்கோடு கைலாசநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு

    மேலும் இது குறித்து, பால்குளம் கிராமத்தைச் சேர்ந்த ரூபிணி கூறுகையில்: ”கொத்தியார் கோட்டை- பால்குளம் ஆகிய இரண்டு கிராமங்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் நெடுஞ்சாலைத்துறை பாலம் அமைக்கின்றது. இந்த பாலத்தால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. விவசாயிகளுக்கு தான் மிகவும் பாதிப்பு. ஆகையால் பாலம் கட்டும் பணியை நிறுத்திட வேண்டும். அப்படி நிறுத்தாவிட்டால் விவசாயிகளை ஒன்று திரட்டி பால்குளம் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் அடைவோம்” என்று தெரிவித்தார்.

    இது குறித்து நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சந்திரனிடம் நாம் கேட்டபோது: கொத்தியார்கோட்டை மக்கள் பாலம் வேண்டும் என்கிறார்கள், பால்குளம் மக்கள் பாலம் வேண்டாம் என்கிறார்கள். அதுபோக கடந்த ஆண்டு பெய்த மழையில் சாலையில் நீர் தேங்கி இருந்தது. இதனால் சாலை சேதமடையும். இந்த பாலம் கட்டினால் சாலை சேதமடையாது என்று தெரிவித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முறையான சாலை வசதிகள் இல்லை சேதமடைந்த பாலங்களை சீரமைக்கவும் இல்லை. இப்பேற்பட்ட நிலையில் இரண்டு கிராமங்களுக்கு இடையே நெடுஞ்சாலை துறை மோதலை ஏற்படுத்தி 300 ஏக்க விவசாயத்தை பாலாக்குவது வேதனைக்குரிய விஷயமே” என்றார்.

    செய்தியாளர்: பொ. வீரக்குமரன்,இராமநாதபுரம் 
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி