முகப்பு /செய்தி /புதுக்கோட்டை / வேங்கைவயல் சம்பவத்தில் ஆயுதப்படை காவலருக்கு தொடர்பா? 6 காவலர்களிடம் சிபிசிஐடி கிடுக்குபிடி விசாரணை நடத்துவதால் பரபரப்பு

வேங்கைவயல் சம்பவத்தில் ஆயுதப்படை காவலருக்கு தொடர்பா? 6 காவலர்களிடம் சிபிசிஐடி கிடுக்குபிடி விசாரணை நடத்துவதால் பரபரப்பு

வேங்கைவயல் கிராமம்

வேங்கைவயல் கிராமம்

Vengaivayal Village Issue | புதுக்கோட்டை ஆயுதப்படை போலீசாரிடம் சிபிசிஐடி நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணை போலீஸ் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில், பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரம் குறித்து, சிபிசிஐடி போலீசார் 26வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த டிசம்பர் 26ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம்  முத்துக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் நீர்த்தேக்கத் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் திருச்சி சிபிசிஐடி அலுவலகத்தில் டிஎஸ்பி பால்பாண்டி தலைமையிலான போலீசார், கடந்த மூன்று நாட்களாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த, 7ம் தேதி வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த ஆயுதப்படை காவலர் முரளிராஜா உள்ளிட்ட 8 பேரிடம் விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் 2 ஆயுதப்படை காவலர்களிடம், நேற்று, 4 ஆயுதப்படை காவலர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்திய ஆறு காவலர்களும் புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் ஆவார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தை சாராத இவர்கள் அனைவரும் இவ்வழக்கில் ஏற்கனவே விசாரிக்கப்பட்ட வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த காவலர் முரளிராஜாவின் வாட்ஸ்அப் குழு நண்பர்கள் ஆவார்கள்.

இந்த நிலையில் இவர்கள் ஆறு பேரும், வேங்கை வயல் சம்பவம் தொடர்பான பல்வேறு பதிவுகளை வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்ததும், குழுவில் இருந்த தகவல்களை பல்வேறு குழுக்களுக்கு 'பார்வர்டு' செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களுக்கு வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பு இருக்கிறதா? அல்லது சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை இவர்களுக்கு தெரிந்திருக்கிறதா? என்ற கோணத்தில் சிபிசிஐடி போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தியுள்ளனர்.

வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக, புதுக்கோட்டை ஆயுதப்படை போலீசாரிடம் சிபிசிஐடி நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணை, போலீஸ் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆறு ஆயுதப்படை காவலர்களையும் சேர்த்து, இவ்வழக்கில் இதுவரை, 98 பேர் விசாரிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: CBCID, Crime News, Pudukottai