ஹோம் /நியூஸ் /புதுக்கோட்டை /

குடிதண்ணீரில் மலம்.. கோயிலுக்குள் தீண்டாமை.. கடைகளில் இரட்டைக்குவளை.. அடுத்தடுத்து புகார்கள்.. அதிரடி நடவடிக்கை எடுத்த ஆட்சியர்!

குடிதண்ணீரில் மலம்.. கோயிலுக்குள் தீண்டாமை.. கடைகளில் இரட்டைக்குவளை.. அடுத்தடுத்து புகார்கள்.. அதிரடி நடவடிக்கை எடுத்த ஆட்சியர்!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்

Pudukkottai | இறையூர் அய்யனார் கோயிலில் வழிபட பல தலைமுறைகளாக அனுமதி மறுக்கப்பட்டதாக ஆதிதிராவிடர் காலனி மக்கள் வேதனையுடன் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவிடம் தெரிவித்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலை அடுத்த இறையூர் அருகே அமைந்துள்ளது வேங்கிவயல் கிராமம். இங்குள்ள ஆதிதிராவிடர் காலனியில் வசிக்கும் மக்களிடம் அப்பகுதியினர் பாகுபாட்டுடன் நடந்துகொள்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்த 4 குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது குடிநீரில் பிரச்னை இருந்தது தெரியவந்தது. அங்கிருந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியை பார்வையிட்டபோதுதான், அதில் மலம் கலக்கப்பட்டதை அப்பகுதி இளைஞர்கள் கண்டறிந்தனர். இதனை அறிந்த ஆட்சியர் கவிதா ராமு மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதி மக்களை ஆட்சியர் கவிதா ராமு சந்தித்தபோது, இறையூர் அய்யனார் கோயிலில் வழிபட பல தலைமுறைகளாக அனுமதி மறுக்கப்பட்டதாக ஆதிதிராவிடர் காலனி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். இதனையடுத்து உடனடியாக அவர்களை அய்யனார் கோயிலுக்கு அழைத்துச் சென்ற ஆட்சியர் கவிதா ராமு, அனைவரும் வழிபட நடவடிக்கை மேற்கொண்டார்.

அப்போது, கோயில் பூசாரியான ராஜன் என்பவரது மனைவி சிங்கம்மாள், தனக்கு சாமி வந்ததைப் போன்று ஆடினார். மேலும், கோயிலில் வழிபட்ட ஆதிதிராவிடர் காலனி மக்கள் குறித்து இழிவாக பேசினார்.

இதனைக்கண்ட ஆட்சியர் கவிதா ராமு, சிங்கம்மாள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தார். இதனையடுத்து மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே உத்தரவின்பேரில் சிங்கம்மாள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த அஞ்சப்பன் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வெள்ளனுர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இவர்களில் சிங்கம்மாளை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், இறையூர் கிராமத்தில் தேநீர் கடையில் இரட்டை குவளை முறை பின்பற்றியதாக, மூக்கையா - மீனாட்சி தம்பதியினர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மூக்கையாவை காவல் துறையினர் கைது செய்தனர்.

Also see... “ஏர்போர்ட்ல அவமானப்படுத்துனாங்க” நடிகர் சித்தார்த் வேதனை

பல தலைமுறைகளுக்குப் பிறகு அப்பகுதியில் உள்ள கோயிலில் ஆதிதிராவிட மக்கள் வழிபட நடவடிக்கை மேற்கொண்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்துள்ள மக்கள், தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் நிலவும் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர்: ரியாஸ், புதுக்கோட்டை

First published:

Tags: Pudukottai