புதுக்கோட்டை ஆலங்குடி அருகே பேருந்து பயணத்தின்போது பெண் ஒருவருக்கு சாக்லேட் கொடுத்ததால் ஏற்பட்ட தகராறில், 3 பள்ளி மாணவர்கள் தாக்கப்பட்டனர். இதனை கண்டித்து காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை ஊராட்சி தெற்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மாணவர்கள் நவீன் (16), விஷ்வா (16) ஆகியோர் தினமும் அரசு நகரப் பேருந்தில் பள்ளிக்குச் சென்று வந்துள்ளனர். இந்நிலையில் இன்று அந்த மாணவர்கள் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு பிறந்தநாள் எனவும் இதனால் பேருந்தில் இருந்த அனைவருக்கும் சாக்லேட் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
அப்போது பேருந்தில் இருந்த மாங்கோட்டை ஊராட்சி வடக்குப்பட்டி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு சாக்லேட் கொடுத்ததாகவும், இதனால் அதை பகுதியைச் சேர்ந்த ஆகாஷ்(21) என்பவர் இதை எதிர்த்தாகவும் கூறப்படுகிறது. இதனால் இரண்டு தரப்பினருக்கும் வாக்குவதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு நடைபெற்றது. பிறகு அவரவர்கள் பணிக்கும், பள்ளிக்கும் சென்றுவிட்டனர். பின்னர் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்குத் திரும்பியபோது மாங்கோட்டை பகுதியில் வடக்குப்பட்டியைச் சேர்ந்த ஆகாஷ் மற்றும் மூவர் பேருந்தை மறித்து தெற்குப்பட்டியைச் சேர்ந்தவர்களை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இதில் பள்ளி மாணவர்களான நவீன், விஷ்வா மற்றும் அவர்களது பகுதியைச் சேர்ந்த அஜூந்திரன் (22) உட்பட்ட மூவரும் கடுமையாக காயமடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த தெற்குப்பட்டி பகுதியினைச் சேர்ந்தவர்கள் மூவரையும் ஆலங்குடி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, மூவரையும் தாக்கிய ஆகாஷ் உள்ளிட்ட 4 நபர்களையும் கைது செய்யக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.`
இந்த மறியல் போராட்டத்தால் ஆலங்குடி-ஆதனக்கோட்டை சாலையில் கடும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் போராட்டத்தைக் கைவிட்டனர். இந்த சூழலில் காயமடைந்த மூவரும் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் பொது இடங்களில் ஆபாசமான வார்த்தைகளை பேசுவது, ஆயுதங்களைக் கொண்டு காயம் ஏற்படுத்துவது மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய 3 பிரிவின் கீழ் ஆகாஷ் உட்பட 4 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Fight, Pudukkottai, School students