புதுக்கோட்டை மாவட்டம் விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்ட மாவட்டங்களில் ஒன்று. சுமார் 95,731 ஹெக்டர் நிலப்பரப்பில் இங்கு விவசாயம் செய்யப்படுகிறது.
நீர் பாசனத்திற்கு வடகிழக்கு பருவ மழையை மட்டுமே நம்பி விவசாயிகள் உள்ளனர். கடலை, மிளகாய், சோளம், எள்ளு, தென்னை போன்ற பிற பயிர்கள் இங்கு சாகுபடி செய்யப்படும் போதும் நெல் மட்டுமே பிரதான பயிராக உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் குளவாய்ப்பட்டி கிராமத்தை சேர்ந்த மக்கள் பருவமழை தொடக்கத்தில் தீவிரமான நெல் நடவு வேலைகளில் ஈடுபட்டனர். பருவ மழையை நம்பி நெல் சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு பருவ மழை சரியாக பெய்யாத நிலையில் தற்போது பயிர்கள் அனைத்தும் தண்ணீர் இன்றி வறண்டு உள்ளது.
வயல்வெளிகளில் எல்லாம் வெடித்து நெல் சாகுபடி ஆகும் நேரத்தில் பாசனத்திற்கு போதிய தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். “பயிர் செழுத்து வளர்ந்து கதிர் பிடிக்கும் நேரத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் எங்கள் பயிர் கருகும் நிலைக்கு வந்துவிட்டது.பருவமழையை நம்பி விவசாயத்தில் ஈடுபட்டோம்.
ஆனால் தற்போது மழை இல்லாததால் தண்ணீரை வாங்கி வயலுக்கு பாய்ச்சினோம் ஆனால் அதற்கும் தற்போது எங்களிடம் காசு இல்லாத நிலையில் பயிர்கள் அனைத்தும் வீணாகி விட்டதாகவும், அறுவடை நிலைக்கு தயாரான பயிர்கள் அனைத்தும் தற்போது கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது” என விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும் விவசாயி அழகு பாண்டி கூறுகையில் ,”தனது இரண்டு ஏக்கர் நிலத்தில் நான் மட்டும் நெல் பயிர் நடவு செய்தேன் அது விளைந்தால் 60 மூட்டை நெல் கிடைத்திருக்கும். அது தனது குடும்பத்திற்கு மிகுந்த உதவியாக இருந்திருக்கும், ஆனால் அந்த பயிர்கள் முழுவதும் தற்போது கால்நடைகளை விட்டு மேய்க்கும் நிலை வந்துள்ளது, என்ன செய்ய வேண்டும் என்ற வழி தெரியவில்லை” என வேதனையுடன் தெரிவித்தனர்.
செய்தியாளர்: சினேகா விஜயன், புதுக்கோட்டை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agriculture, Farmers, Local News, Pudukkottai