சீனாவில் மருத்துவ படிப்பு முடித்து பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் கடந்த 20 தினங்களுக்கு முன்பாக பயிற்சிக்காக சீனா சென்ற புதுக்கோட்டையைச் சேர்ந்த மருத்துவ மாணவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு அங்கேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் உயிரிழந்த மாணவரின் சடலத்தையாவது சொந்த ஊருக்கு கொண்டு வர மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை போஸ் நகரை சேர்ந்த சையது அபுல்ஹாசன் என்பவரது மகன் ஷேக் அப்துல்லா. இவர் சைனாவில் உள்ள (QIQIHAR MEDICAL UNIVERSITY ) பல்கலைக்கழகத்தில் 2017-18 ஆம் மருத்துவ படிப்பு படிக்க தொடங்கி தேர்ச்சியும் பெற்று விட்டார். கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு இருந்ததால் ஆன்லைன் மூலமாகவே கல்வியை கற்று முடித்த மாணவர் ஷேக் அப்துல்லா மருத்துவ பயிற்சிக்காக கடந்த 11ம் தேதி மீண்டும் சைனா சென்றுள்ளார். பின்னர் அந்நாட்டின் விதிமுறைப்படி எட்டு நாட்கள் கொரோனாவின் காரணமாக தனிமைப்படுத்திக் கொண்ட ஷேக் அப்துல்லா அதன்பின் தனது யூனிவர்சிட்டிக்கு சென்றுள்ளார்.
இதன் பின் கடந்த ஒரு வாரத்திற்கு முன் ஷேக் அப்துல்லாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு அவர் அங்குள்ள ஹர்பன் சிட்டி மருத்துவமனையில் உள்ள ஐசியூவில் சிகிச்சை பெற்று வருவதாக அவரது பெற்றோருக்கு யுனிவர்சிட்டி நிர்வாகம் மூலம் தகவல் வந்துள்ளது. தற்போது சீனாவில் மாறுபட்ட கொரோனாவான ஒமிக்கிறான் வகை மிக வேகமாக பரவி வருவதால் பதட்டம் அடைந்த அவரது பெற்றோர் அங்கு இருப்பவர்களை தொடர்பு கொண்டு பேசிய போது அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றும் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கான சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
மேலும், மருத்துவ செலவுக்கு தேவையான பணத்தை அனுப்பி வைக்குமாறு அங்கிருந்து கூறியுள்ளனர். இதனையடுத்து அவரது தந்தை சையது அபுல்ஹாசன் சாதலி தனது உறவினர்களிடம் கடன் வாங்கி ரூபாய் 6 லட்சத்து 40 ஆயிரத்தை அனுப்பி வைத்துள்ளார். தன் மகனை எப்படியாவது உயிருடன் ஊருக்கு அழைத்து வந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த 26ம் தேதி மாவட்ட ஆட்சியரிடமும் அதன் பின் மாநில அரசுகக்கும் ஷேக் அப்துல்லாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோரிக்கை மனுவும் அனுப்பி இருந்தனர்.
இந்நிலையில் ஷேக் அப்துல்லா சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்து விட்டதாக சீன பல்கலைக்கழக நிர்வாக தரப்பில் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மட்டுமின்றி அந்த போஸ் நகர் பகுதியே துயரில் ஆழ்ந்துள்ளது.
கூலி வேலை பார்த்து கடன் வாங்கி ஷேக் அப்துல்லாவின் பெற்றோர்கள் அவரை சீனாவில் மருத்துவம் படிக்க அனுப்பி வைத்த நிலையில் தற்போது இறந்த மகனின் உடலை கூட சொந்த ஊருக்கு கொண்டு வர முடியாமல் அவரது பெற்றோர் தவிக்கும் காட்சி காண்போரையும் கண்கலங்க வைத்துள்ளது.
Also see... அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு
இதனால் உடனடியாக ஒன்றிய மாநில அரசுகள் இப்பிரச்சனையில் தலையிட்டு இறந்த மாணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது இஸ்லாமிய முறைப்படி அங்கேயே அடக்கம் செய்ய வழிவகை செய்ய வேண்டும். அது மட்டும் இன்றி உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு ஒன்றிய மாநில அரசுகள் உரிய நிவாரண தொகையை வழங்கிட வேண்டும் எனவும் அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்: ர.ரியாஸ், புதுக்கோட்டை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Doctor, Medical Students, Pudukkottai