ஹோம் /நியூஸ் /புதுக்கோட்டை /

அறந்தாங்கி இரட்டை குவளை முறை... சிறை செல்லவும் தயார் எனக் கூறும் டீக்கடைக்காரர்.!

அறந்தாங்கி இரட்டை குவளை முறை... சிறை செல்லவும் தயார் எனக் கூறும் டீக்கடைக்காரர்.!

டீக்கடை

டீக்கடை

Aranthangi | புதுக்கோட்டை மாவட்டத்தில் அடுத்தடுத்து பட்டியலின மக்களுக்கு எதிரான புகார்கள் வெடித்து வரும் நிலையில், டீக்கடைகளில் இரட்டை குவளை முறையை பின்பற்றியதுடன் சிறை செல்லவும் தயார் என உரிமையாளர் மிரட்டும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Aranthangi, India

தீண்டாமை கொடுமை தொடர்பான புகார்களால் புதுக்கோட்டை மாவட்டம் தலைப்புச் செய்திகளில் இடம்பெறுவது தற்போது தொடர்கதையாகி உள்ளது. டீக்கடைகளில் இரட்டை குவளை பயன்படுத்துவது, மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டியில் மலம் கலப்பது, கோயில்களில் அனுமதி மறுப்பது, புத்தாண்டு கொண்டாடியவர்களை அச்சுறுத்துவது, நீர் நிலைகளில் குளித்தால் கொச்சையாக பேசுவது என பட்டியலின மக்களுக்கு எதிரான புகார்கள், புற்றீசல் போன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் அடுக்கடுக்காய் வளர்ந்துக்கொண்டே செல்கின்றன.

அந்த வரிசையில் ஒரே காவல்நிலையத்துக்குட்பட்ட பகுதியில் கடந்த 2 நாட்களில் 2 தீண்டாமை புகார்கள் பதிவாகி உள்ளது சமூகநீதி குறித்த அச்சத்தை மேலும் கிளப்பி உள்ளது. பட்டியலின மக்கள் தங்களுக்கு ஏற்படும் தீண்டாமை புகார்கள் குறித்து தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அண்மையில் வாட்ஸ் ஆப் எண் ஒன்றை அறிவித்திருந்தார். அதில், அறந்தாங்கிக்கு அருகே உள்ள மங்களநாடு என்ற இடத்தில் டீக்கடைகளில் இரட்டை குவளை முறை பின்பற்றப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

இது குறித்து, விசாரணை நடத்த வருவாய்த்துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, மங்களநாடு கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் ஆய்வு செய்தார். அப்போது, வெங்கடாசலம் என்பவரது டீக்கடைக்கு சென்ற பட்டியலின இளைஞர்கள் இருவர் வடை கேட்டதும் அதற்கு கடைக்காரர் கொடுக்க முடியாது என்று மறுத்ததும் தெரியவந்தது. மேலும், அருள் ராஜ் என்பவர் கடையில் இரட்டை டம்ளர் பயன்படுத்தப்படுவதும், தட்டிக்கேட்ட பட்டியலின இளைஞரை அருள்ராஜின் மனைவி அமோகவேல் மிரட்டியதும் தெரியவந்தது.

தங்களது கடையில் யாருக்கு எப்படி டீ கொடுக்க வேண்டும் என்று தங்களுக்கு தெரியும் என்றும், இதுகுறித்து புகார் அளித்தால் சிறைக்கு செல்லவும் தயார் என்றும் அமோகவேல் கூறியுள்ளார். இதுகுறித்து வீடியோ வெளியான நிலையில், கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன், நாககுடி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து நேரில் விசாரணை நடத்திய போலீசார், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, வெங்கடாசலம் மற்றும் அருள்ராஜை கைது செய்தனர். இதற்கு முன்பு இதே புகார்கள் மங்களநாடு கிராமத்தில் எழுந்த நிலையில், வருவாய்துறையினர் நேரில் ஆய்வு டீக்கடைகளை எச்சரித்துள்ளனர். மேலும், தீண்டாமையை கடைபிடிக்கக்கூடாது என ஒவ்வொரு டீக்கடைக்கும் தலா 20 டம்பளர்கள் வாங்கி கொடுத்து அறிவுறுத்தியும் சென்றுள்ளனர். அதையும் மீறி மீண்டும் இந்த தீண்டாமை அட்டூழியம் அரங்கேறி வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவங்கள் நிகழ்ந்த இடத்தில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கூத்தங்குடியில் குளத்தில் குளிக்கச் சென்ற 2 பட்டியலின பெண்களை மாற்று சமூகத்தினர் இழிவுப்படுத்தி பேசிதாக புகார் எழுந்தது. இது குறித்து, நாககுடி காவல்நிலையத்தில் வழக்கு பதிவாகி உள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

ஒரே காவல்நிலையில் அடுத்தடுத்த நாட்களில் தீண்டாமை புகார்கள் பதிவாகி உள்ள நிலையில், தமிழ்நாடு அரசும் முதலமைச்சரும் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு சமூக ஒற்றுமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

First published:

Tags: Pudukottai