ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

புதுச்சேரியில் மின்துறை தனியார் மயத்துக்கான டெண்டர் வெளியீடு...  காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டதில் ஊழியர்கள்...

புதுச்சேரியில் மின்துறை தனியார் மயத்துக்கான டெண்டர் வெளியீடு...  காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டதில் ஊழியர்கள்...

வேலை நிறுத்தம்

வேலை நிறுத்தம்

puducherry | புதுச்சேரி மின்துறை தனியார்மயத்துக்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. நவம்பர் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொறியாளர்கள், தொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி புதுச்சேரியில்  மின்துறையை தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதனை எதிர்த்து பல கட்ட போராட்டங்கள் நடந்தன. அனைத்து கட்சிகளும் போராட்ட களத்தில் இறங்கியதால் தனியார் மய நடவடிக்கை சில மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கடந்த அமைச்சரவை கூட்டத்தில் மின்துறையை தனியார் மயமாக்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

இதனிடையே தனியார்மயம் தொடர்பான வரைவு அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து பணிகளை புறக்கணித்து  ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை கடந்த பிப்ரவரியில் தொடங்கினர். தொழிற்சங்கத்தினரிடம் கலந்து ஆலோசிக்காமல் எவ்வித முடிவும் எடுக்கமாட்டோம் என்ற முதல்வர் ரங்கசாமியின் வாக்குறுதியை ஏற்று வேலைநிறுத்தத்தை திரும்ப பெற்றனர்.

இந்நிலையில் மின்துறை தனியார் மயத்துக்கான டெண்டர் நேற்று மாலை  வெளியிடப்பட்டுள்ளது. மின்துறை டெண்டரில், "புதுச்சேரி அரசு மின்துறைக்கான ஏலத்துக்கு ஆர்வமுள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். விநியோகத்தில் நூறு சத பங்குகளை வாங்க ஏலத்தாரர் தேர்வு செய்யப்படுவார்கள். முன்மொழிவுக்கான கோரிக்கைக்கு ஏலத்தாரர்கள் ரூ. 5.90 லட்சம் செலுத்த வேண்டும். வங்கி செக்யூரிட்டியாக ரூ. 27 கோடி இருக்க வேண்டும். முன்மொழிவுக்கான கோரிக்கை வரும் 30ம் தேதி தொடங்கும். விண்ணப்பிக்க வரும் நவம்பர் 25ம் தேதி இறுதிநாள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு  மின்துறை பொறியாளர்-தொழிலாளர் தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழு கண்டனம் தெரிவித்து இன்று முதல் வேலைநிறுத்தப்போராட்டத்தை துவக்கியுள்ளனர். மின்துறை  தலைமை அலுவலகத்தில் அனைத்து பொறியாளர்களும், தொழிலாளர்களும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை துவக்கியுள்ளனர். இதனால் அலுவலகத்தில் எந்த பணிகளும் நடைபெறவில்லை. அனைத்து பிரிவுகளிலும் அதிகாரிகள்-ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

இதனிடையே மின்துறை அமைச்சர் நமச்சிவாயம், மின்துறை தனியார் மையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய ஊழியர்களை பல கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் அவர்கள் வராததால் அரசு இந்த முடிவு எடுத்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளார். புதுச்சேரியில் மின்தடை ஏற்படாத அளவிற்கு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் ஓய்வு பெற்றவர்களையும் புதிதாக பணியில் சேர்க்கப்பட்டவர்களையும் வைத்து பணிகள் நடக்கும் என்றும் போராட்டத்தை கைவிட்டு ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் மின்துறை அமைச்சர் கேட்டு கொண்டார். இந்த போராட்டத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் உள்பட 2500 கும் மேற்பட்ட மின்துறை ஊழியர்கள்  ஈடுபட்டுள்ளனர்.  இதனால் அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

Also see... பில்டிங் கான்ட்ராக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த தில்லாலங்கடி திருநங்கை

மின்துறை போராட்ட குழு தலைவர் அருள்மொழி, பொதுசெயலாளர் வேல்முருகன் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியில்,”  நாங்கள் பலகட்ட போராட்டங்கள் நடத்தியும், எங்களை அழைத்து பேசாமல் அரசு தனியார் மயமாக்க  டென்டர் கோரியுள்ளது. இதற்காக நாங்கள் காலவரையற்ற போராட்டத்தினை தொடங்கி உள்ளோம். மின்துறை தனியார் மயமானால் எங்களுக்கு மட்டும் பாதிப்பு இல்லை. ஒட்டுமொத்த மக்களுக்கும் பாதிப்பு தான்.

முதலமைச்சர் ரங்கசாமி, பொதுமக்களை கலந்து ஆலோசிக்காமல் மின்துறை தனியார் மயமாக்கப்படாது என அரசு உறுதி அளித்திருந்தது. ஆனால் பொதுமக்களை கருத்து கேட்கவில்லை. அரசு எங்களை அழைத்து தனியார் மயமாக்கலுக்கு ஒத்துழைத்தால் எங்களுக்கு என்ன பலன் வழங்க வேண்டும் என கேட்டனர்” என்று தெரிவித்தார்கள்...

Published by:Vaijayanthi S
First published:

Tags: Electricity, Protest, Puducherry