புதுச்சேரி மாநிலத்தில் குடியரசு தின விழா - 2023 நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் அந்த மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு காலை 9.30 மணிக்கு தேசிய கொடியை ஏற்றுவதாக இருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத வானிலை காரணமாக துணைநிலை ஆளுநர் வந்த விமானம் தரை இறங்குவதில் ஏற்பட்ட காலதாமதத்தால் விழாவிற்கு சற்று கால தாமதமாக வந்து சேர்ந்தார்.
இதனிடையே, தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக இருக்கும் அவர் ஏற்கனவே திட்டமிட்டபடி காலை 7 மணி மணிக்கு ஐதராபாத்தில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு காலை 7.15 மணிக்கு தெலங்கானா ராஜ்பவனில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலந்துகொண்டார். அதன்பிறகு 8 மணி அளவில் ஐதராபாத் விமான நிலையத்திலிருந்து சிறப்பு விமானம் மூலம் புதுச்சேரிக்கு புறப்பட்டார்.
விமானம் சுமார் 9 மணி அளவில் புதுச்சேரி வான எல்லைக்குள் நுழைந்த போதிலும், தொடர்ந்து நிலவிய மோசமான வானிலை காரணமாக விமான ஓடுபாதை தெளிவாக தென்படாத காரணத்தால் (poor visibility) புதுச்சேரி விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு பிரிவு விமானத்தை தரையிறக்க அனுமதி வழங்கவில்லை. அதோடு, விமானத்தை சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கவும் அறிவுறுத்தியது. ஆனால், சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கி அங்கிருந்து சாலை வழியாக புதுச்சேரி வந்தடைய காலதாமதம் ஏற்படும் என்பதாலும் புதுச்சேரியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் உரிய நேரத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடும் விமானத்தை புதுச்சேரி விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்த முயற்சியில் விமானம் சுமார் 45 நிமிடம் வான்வழி பாதையிலேயே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. அதன்படி சுமார் 45 நிமிடத்திற்கு பிறகு சூரிய ஒளியில் பாதை சற்று தெளிவாக காணப்பட்டதும் விமான நிலைய கட்டுப்பாட்டு அறையின் அனுமதி பெற்று புதுச்சேரி விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. துணை நிலை ஆளுநர் குடியரசு தின விழாவில் குறித்த நேரத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக விமானத்தில் இருந்த அத்தனை பேரின் உயிர்களையும் பணையம் வைத்து விமானி மிகுந்த எச்சரிக்கையோடு விமானத்தை புதுச்சேரி விமான நிலையத்தில் தரையிறக்கினார்.
இந்நிலையில், விமானத்தில் இருந்து இறங்கிய துணைநிலை ஆளுநர் நேராக விழா அரங்கிற்கு வந்து தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். ஆகவே, எதிர்பாராத வகையில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக உரிய நேரத்தில் விமானத்தை தரை இறக்குவதில் உண்டான சிரமங்களால் துணைநிலை ஆளுநர் குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதில் காலதாமதம் ஏற்பட்டது என்பது இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது என துணைநிலை ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Puducherry