படிக்க சென்ற இடத்தில் தேசிய கனலை ஊட்டியவர் வீர சாவர்க்கர் என்றும் சுதந்திரப் போராட்ட வரலாற்றை தெரிந்து கொள்ளாதவர்கள் வீர சாவர்க்கர் பெயர் பொறித்த கல்லை பதித்ததற்கு அனாவசியமாக பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 75-வது சுதந்திர ஆண்டு கொண்டாட்டங்களை ஒட்டி சுதந்திரப் போராட்ட வரலாறு குறித்தும் விடுதலைப் போராட்ட வீரர்கள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி திடலில் நிறுவப்பட்டுள்ள தியாகச் சுவரில் விடுதலைப் போராட்ட வீரர்களின் பெயர்கள் பதிக்கப்பட்டு வருகிறது.
இதில் ஆர்.எஸ்.எஸ். இயக்க முன்னோடி வீர் சாவர்க்கர் பெயர் பொறித்த கல்வெட்டு பதிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், புதுச்சேரி அடுத்த வில்லியனூர் ஆச்சார்யா கல்லூரியில் நடைபெற்ற பன்னிரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், சுதந்திர தினத்தை நேர்மறையாக மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும், ஒரு நாள் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தாலும் அவர்களும் கௌரவிக்கப்பட வேண்டியவர்கள் தான். வீர சாவர்க்கர் நாட்டிற்காக போராடி இருக்கிறார், படிக்க சென்ற இடத்தில் தேசிய கனலை ஊட்டியிருக்கிறார் என்று குறிப்பிட்டார்.
மேலும் படிக்க: பரந்தூரில் விவசாய நிலங்களை அழித்து விமான நிலையமா- சீமான் எதிர்ப்பு
மேலும், சுதந்திரப் போராட்ட வரலாற்றை தெரிந்து கொள்ளாதவர்கள் வீர சாவர்க்கர் பெயர் பொறித்த கல்லை பதித்ததற்கு அனாவசியமாக பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தன் கண்டனத்தை பதிவு செய்த தமிழிசை , தன் மீது தவறு இருந்தும் விசாரணைக்கு செல்ல தயங்கும் இவர்கள் மத்தியில் வீரசாவர்கர் சிறையில் இறந்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறினார்.
வீர சாவர்க்கர் பெயர் குறித்த கல்லை பதித்ததில் எந்த தவறும் இல்லை, இதை யாரும் அரசியலாக்க வேண்டாம், அப்படி அரசியல் ஆக்கினாலும் அதை எதிர் கொள்ள தயாராக இருப்பதாகவும் தமிழிசை குறிப்பிட்டார். சுதந்திரத்திற்காக ஒரு சிறு கல்லை எடுத்து போட்டால் கூட அவரும் சுதந்திரப் போராட்ட வீரர் தான். அவரையும் மதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட தமிழிசை இந்த நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய யாரையும் கொச்சைப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: ரூ.5000 நிதி, 25 கிலோ அரிசி... ஏனாம் மக்களுக்கு முதல்வர் ரங்கசாமி நிவாரணம் அறிவிப்பு...
வீர சாவர்க்கரும் ஒரு சுதந்திர போராட்ட வீரர் தான் அதை எந்த சபையிலும் என்னால் அழுத்தமாக சொல்ல முடியும் என்றும் தமிழிசை குறிப்பிட்டார். மேலும், 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது அந்த கூட்டம் வருகின்ற 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தானும் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.
உங்கள் நகரத்திலிருந்து(புதுச்சேரி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.