Home /News /puducherry /

'கடைசி பெஞ்ச் மாணவர்களை விட்டுவிடாமல் வாய்ப்பு அளியுங்கள்' - ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள்

'கடைசி பெஞ்ச் மாணவர்களை விட்டுவிடாமல் வாய்ப்பு அளியுங்கள்' - ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள்

தமிழிசை சௌந்தரராஜன்

தமிழிசை சௌந்தரராஜன்

'மாணவர்களின் மனநிலையை ஆசிரியர்கள் புரிந்துகொள்ள வேண்டும்' - ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India
கடைசி பெஞ்ச் மாணவர்களை விட்டுவிடாமல் அவர்களுக்கும் வாய்ப்பளியுங்கள். மாணவர்களின் மனநிலையை ஆசிரியர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நல்லாசிரியர்கள் 20 பேருக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விருதுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், என்னை போன்றவர்கள் இந்த மேடையில் நிற்க ஆசிரியர்கள் தான் காரணம். வீட்டில் எங்களுக்கு கிடைத்த அனுபவம், பயிற்சி மிக குறைவு. முழுமையாக ஆசிரியர்களால் வளர்க்கப்பட்டவர்கள் நாங்கள். எனவே ஆசிரியர் சமுதாயத்துக்கு என்றுமே நன்றி சொல்ல தவறுவது கிடையாது. மாணவர்களின் மனதையும், ஆசிரியர்களின் மனதையும் நன்கு அறிவேன். ராதாகிருஷ்ணன் ஆசிரியராக எவ்வாறு மதிக்கப்பட்டார்? என்பதை உலகமே உணர்ந்துள்ளது. இன்றைய மாணவர்களை கையாள்வது சிரமமான காரியம். பெற்றோர்கள் சிலரும், ஆசிரியர்களை குறைகூறி வந்தார்கள். 2 ஆண்டு கொரோனா காலத்தில் குழந்தைகளை பெற்றோர் கவனித்தனர்.

கொரோனாவுக்கு பின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் எப்படித்தான் சமாளிக்கிறார்களோ? என வியந்து போயினர். மாணவர்கள் நம்மைவிட புத்திசாலிகளாக, பல விஷயங்கள் தெரிந்தவர்களாக உள்ளனர். மருத்துவ மாநாடு, அரசியல் மாநாட்டில் பேசும்போதுகூட எனக்கு பயம் வராது. ஆனால் மாணவர்களிடையே பேசும்போது மட்டும் பயம் இருக்கும். குழந்தைகளை கையாள்வது மிகப்பெரும் கலை. அதற்கு மிகவும் பொறுமை வேண்டும். குழந்தைகளின் மனநிலையை புரிந்துகொண்டு ஆசிரியர்கள் பாடம் சொல்லித்தர வேண்டும். பாடம் சொல்வதை விட அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். பள்ளிக்கு வரவேண்டும் என்ற மனநிலையை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும்.



பள்ளி குழந்தைகள் தற்கொலை செய்வதை இந்த சமூகத்தில் யாரும் ஒத்துக்கொள்ள முடியாது. படிக்க முடியாமல் இறுதி முடிவை எடுக்கும் சூழ்நிலை எப்படி உருவாகிறது? அந்த சூழ்நிலை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது ஆசிரியர்கள் மட்டுமின்றி அனைவரின் கடமை. பெண் குழந்தைகள் உடல்ரீதியாக, மனரீதியாக பல பிரச்சினைகளை சந்திக்கின்றனர். அரசு பள்ளி ஆசிரியர்கள் மிகச்சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். கடைசி பெஞ்ச் மாணவர்களை விட்டுவிடாமல் அவர்களுக்கும் வாய்ப்பளியுங்கள். மாணவர்களின் மனநிலையை புரிந்துகொள்ளுங்கள்.

 

 



 

அவர்களை பாதுகாப்பது நம் கடமை. கண்டிப்பதை விட கண்காணிப்பது மிகவும் முக்கியம். போட்டி நிறைந்த உலகத்தில் இன்னொரு குழந்தைகளுக்கு விஷம் கொடுக்கும் நிலை உள்ளது. உலகில் இதைவிட கொடுமை வேறு எதுவும் இருக்க முடியாது. மாணவர்கள் போட்டியாக இல்லாமல், ஆசையாக படிக்கும் சூழ்நிலையை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.



புதுச்சேரி அரசு சார்பில் கருவடிகுப்பம் காமராஜர் மணிமண்டபத்தில் ஆசிரியர் திருநாள் விழா நடந்தது. இந்த விழாவில் கல்வித்துறை செயலர் முத்தம்மா வரவேற்க சபாநாயகர் செல்வம், அமைச்சர் சாய்சரவணக்குமார், தலைமை செயலர் ராஜீவ்வர்மா, முதலமைச்சரின் நாடாளுமன்ற செயலர் ஜான்குமார், எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம், கலெக்டர் வல்லவன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பணிஓய்வு பெற்ற ஆசிரியர்களை முதலமைச்சர் ரங்கசாமி பாராட்டி கவுரவித்தார். துணைநிலை ஆளுநர் தமிழிசை நல்லாசிரியர்கள் 20 பேருக்கு விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். விருதுபெற்ற ஆசிரியர்கள் ஏற்புரையாற்றினர்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: BJP, Puducherry, Tamilisai Soundararajan

அடுத்த செய்தி