விமானத்தில் மயக்கம்போட்ட பயணி.. அவசர உதவி செய்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
விமானத்தில் மயக்கம்போட்ட பயணி.. அவசர உதவி செய்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்
தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் இன்று காலை அவர் சென்ற விமானத்தில் பயணிக்கு முதலுதவி அளித்தார். அதனால் சமூக வலை தளங்களில் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை இன்று அதிகாலை 3 மணிக்கு டெல்லியிலிருந்து ஐதராபாத்துக்கு விமானத்தில் பயணம் செய்தார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, ஒரு பயணிக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டுள்ளது. விமான பணிப்பெண், அவசர உதவிக்கு டாக்டர்கள் யாராவது உள்ளீர்களா? என அறிவிப்பு வெளியிட்டார். உடனடியாக மருத்துவரான தமிழிசை அந்த பயணியிடம் சென்று ஸ்டெதஸ்கோப் வைத்து பார்த்து, தேவையான முதலுதவி சிகிச்சை அளித்தார்.
இதன்பின் சிறிது நேரத்தில் அந்த பயணி கண்விழித்ததால் சக பயணிகள் நிம்மதியடைந்தனர். அவரின் அருகிலேயே அமர்ந்து உடல்நிலையை கண்காணித்தபடியே ஆளுநர் தமிழிசை பயணம் செய்தார். விமானம் ஐதராபாத் இறங்கியதும் அந்த பயணி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பயணியின் நிலையை கண்டு உடனடியாக செயல்பட்ட விமான பணிப்பெண்ணை தமிழிசை பாராட்டினார்.
அவசர உதவி செய்த தமிழிசையை சக பயணிகள் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் தமிழிசை தனது மாளிகைக்கு புறப்பட்டு சென்றார். இந்த சம்பவத்தை சக பயணி ஒருவர் போட்டோ எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். ஆளுநர் என்ற உயர் பதவியில் இருந்தாலும் மருத்துவராக தனது கடமையை ஆற்றிய தமிழிசைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
முன்பு ஒருமுறை, தமிழிசையிடம் மாணவி ஒருவர், நீங்கள் மருத்துவராக இருப்பதை பெருமையாக கொள்கிறீர்களா...? ஆளுநராக இருக்க பெருமை கொள்கிறீர்களா...? என கேட்டதற்கு,."மருத்துவ ஆளுநர்" என தமிழிசை கூறிய பதில் நினைவு கூற தக்கது...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.