புதுச்சேரி கம்பன் கழகத்தின் 55 வது கம்பன் விழா இன்று துவங்கியது. 3 நாட்கள் நடைபெறும் விழாவை துணைநிலை ஆளுநர் தமிழிசை துவக்கி வைத்தார். இதில், உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் தமிழறிஞர்கள் பலரும் பங்கேற்றனர்.
உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியன் பேசுகையில், கம்பன் விழா பலரையும் மேலே ஏற்றியுள்ளது. வழக்கறிஞராக வந்தேன். அடுத்து உயர்நீதிமன்ற நீதிபதி, அடுத்து உச்சநீதிமன்ற நீதிபதி என உயர்ந்துள்ளேன். இதை மேடையில் உள்ள ஒருவருக்கு (தமிழிசை) குறிப்பிட்டு சொல்கிறேன். புரிந்தவர்களுக்கு புரியட்டும்.. புரியாதவர்களுக்கு புரியாமல் போகட்டும் என பேசினார்.
அடுத்து பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை, இங்கே பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியன், " மேடை ஏற ஏற உச்சத்தை பெறுவார்கள் என பேசினார். அவரும் உச்ச நீதிமன்றத்தில் உச்சத்தை பெறுவார் என்றும் இன்றைய காலத்தில் திரைப்படங்கள் கூட 3 நாட்கள் அரங்கு நிறைவதில்லை. ஆனால் புதுச்சேரியில் கம்பன் விழா 3 நாட்களும் அரங்கு நிறைந்து இருக்கும் என்றும் கூறினார். கம்பன் வட மொழியையும் படித்து கம்ப ராமாயணத்தை எழுதியுள்ளார். பிற மொழியைக் கற்றால் தமிழ் எந்த வகையிலும் கரைந்து விடாது என்பதை கம்பர் நமக்கு உணர்த்தி இருக்கிறார்.
Also read... இளம் கணவன் - மனைவி அடுத்தடுத்து தற்கொலை... திருமணமாகி ஒர் ஆண்டில் விபரீத முடிவு
தாய்மொழி தான் உயிர். அதை முழுமையாக படிக்காமல் பிற மொழியை திட்டுவது தவறு. பிற மொழி கற்பது தவறு இல்லை என்றும் தாய்மொழி நமக்கு உயிர். அதை சரியாகப் படிக்காமல் பிற மொழியை நிந்திப்பது மொழிப்பற்று ஆகிவிடாது. தாய் மொழியில் வளம் பெற்று பக்கபலமாக இன்னொரு மொழியையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை நமது புதிய கல்வி கொள்கை கூறுகிறது. புதுச்சேரிக்கு தமிழ்ப் பற்று பற்றி யாரும் சொல்லித்தரத் தேவையில்லை. தமிழ் புதுச்சேரியில் விளையாடிக் கொண்டிருக்கிறது என்றும் தமிழிசை தெரிவித்தார்.
ஜிப்மர் மருத்துவமனையில் பணிபுரிபவர்கள் 85 சதவீதம் பேர் இந்தி தெரிந்தவர்கள். அவர்களுக்காக ஒரு சுற்றறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். இதை ஜிப்மரில் தமிழ் இல்லை என கூறி அரசியலாக்கி சிலர் தினமும் போராட்டம் நடத்துகிறார்கள். நோயாளிகளுக்கு தொந்தரவு தருகிறார்கள். தமிழுக்கு தலைகுனிவு என்றால் புதுச்சேரி அரசு ஏற்று கொள்ளாது. தமிழை உயிராய் ஏற்கும் நாம் பிற மொழியை நிந்திக்க கூடாது என்றும் தமிழிசை தெரிவித்தார்.
3 நாட்கள் நடைபெறும் விழாவில் வழக்காடு மன்றம், கவியரங்கம், பட்டிமண்டபம் போன்றவை நடக்கிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.