புதுச்சேரியின் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து திருக்காஞ்சி கிராமத்தில் கங்கை வராக நதீஸ்வரர் கோயில் உள்ளது. செஞ்சியாறு, கிளிஞ்சியாறு, வராக நதி என்றெல்லாம் அழைக்கப்படும் சங்கராபரணி நதியே இந்த ஆலயத்தின் முக்கியத் தீர்த்தமாகும். இக்கோயிலின் கருவறை தஞ்சை பிரகதீஸ்வரர், கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய கோயில்களின் கருவறைகளை ஒத்திருக்கிறது.
ஸ்ரீ கங்கைவராக நதீஸ்வரரின் லிங்கம் பதினாறு பட்டைகளைக் கொண்ட ஷோடசலிங்கம். இது மிக அபூர்வம். இந்த லிங்கத்தை வணங்கினால் முன்னோர் சாபம் நீங்கும் என்பது நம்பிக்கை. நீண்ட ஆயுள், நோயற்ற வாழ்வு உள்ளிட்ட பதினாறு செல்வங்களையும் அளிக்கும் என்பது ஐதீகம். சுமார் 3,000ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவலிங்கத்தை அகஸ்திய மாமுனிவர் தனது திருக்கரத்தால் பிரதிஷ்டை செய்துள்ளார் என தல புராணம் கூறுகிறது. ஆரம்ப காலத்தில் சிறு கோயிலாக இருந்த கோயில் சோழர் காலத்தில் உன்னத நிலையை அடைந்தது.
ஒவ்வொரு ஆண்டும் மக நட்சத்திரத்தில் நடைபெறும் மாசிமகம் மிகவும் சிறப்பு பெற்றதாகும். மாசி மகத் திருவிழாவில் நீத்தார் கடன் செய்வது மிகச் சிறப்பாக நடக்கிறது. சங்கராபரணி ஆறு புதுச்சேரி அருகே கிழக்காகத் திரும்பிக் கடலை நோக்கிச் செல்லும்போது திருக்காஞ்சியில் வடக்கு நோக்கித் திரும்பி அதன் பிறகு கிழக்கே நோக்கி திரும்பி வங்கக்கடலில் சேருகிறது. இது மிகவும் அரிதானது. இத்தீர்த்தத்தில் புண்ணிய நீராடலாம். இது தவிர அமாவாசை, பெளர்ணமி, வெள்ளிக்கிழமை , மாதப்பிறப்பு, கார்த்திகை, சிவராத்திரி ஆகிய நாட்களிலும் புனித நதியில் புண்ணிய நீராடலாம்.
வரும் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி முதல் 15 நாட்களுக்கு புஷ்கரணி விழா நடக்க இருக்கிறது. விழாவில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவை யொட்டி 64 அடி உயரத்தில் சிவன் சிலை அமைக்கப்படுகிறது. இதற்கான பூமி பூஜையை வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் இன்று துவக்கி வைத்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.