ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

குழந்தைகளை நூலகங்களுக்கு அழைத்து வந்து படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்: தமிழிசை

குழந்தைகளை நூலகங்களுக்கு அழைத்து வந்து படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்: தமிழிசை

புதுச்சேரி- நூலகத்தில் தமிழிசை

புதுச்சேரி- நூலகத்தில் தமிழிசை

Puducherry | குழந்தைகளை நூலகங்களுக்கு அழைத்து வந்து படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என பெற்றோரை துணைநிலை ஆளுநர் தமிழிசை கேட்டு கொண்டுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Puducherry, India

புதுச்சேரியில் உள்ள அரசு நூலகங்களை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய, துணைநிலை ஆளுநர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்  கலை மற்றும் பண்பாட்டுத்துறை அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் இயக்குனர் சிவராஜன் பங்கேற்றார். நூலகங்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவுப்படுத்துமாறு துணைநிலை ஆளுநர் அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து முருங்கப்பாக்கம் மற்றும் வில்லியனூரில் உள்ள அரசு கிளை நூலகங்களை துணைநிலை ஆளுநர் பார்வையிட்டார். நூலகத்தில் படித்துக் கொண்டிருந்த பொது மக்களை சந்தித்து குறை-நிறைகளைக் கேட்டறிந்தார். நூலகத்தை ஆய்வு செய்த துணைநிலை ஆளுநர் புத்தகங்கள் கடைசியாக வாங்கப்பட்டது எப்போது? புத்தகங்கள் முறையாக பிரித்து அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறதா? குழந்தைகள்- பெரியவர்களுக்கான தனித்தனி பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறதா? என்பதை கேட்டு தெரிந்து கொண்டார்.

சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் படிப்பதற்கான தனி பகுதியை ஏற்படுத்த வேண்டும் என்றும் கல்லூரி மாணவர்கள் போட்டி தேர்வுகளுக்கான நூல்களைப் படிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் கூறினார். மேலும் கல்லூரிகளில் கேட்டு அதற்கான பார்வை நூல்களைப் பெறலாம் என்றும் அறிவுறுத்தினார்.

மாணவர்களும் சிறுவர்களும் அதிக அளவில் நூலகங்களுக்கு வந்து படிப்பதற்கான சூழலை உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு பொழுதுபோக்குக்காக பல்வேறு இடங்களுக்கு செல்வதை காட்டிலும் குழந்தைகளை நூலகங்களுக்கு அழைத்து வந்து படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். நூலகத்திற்கு வரும் பார்வையாளர்கள் பதிவேட்டில் கையொப்பம் இடுமாறும் கேட்டுக் கொண்டார். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த புகார் பெட்டியை ஆய்வு செய்தார்.

மேலும் நூலகங்களின் செயல்பாடுகளைக் கண்டறிந்து அவற்றை மேம்படுத்தவும் மாணவர்களிடையே படிக்கும் பழக்கம் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவும், நூலகங்களைப் பார்வையிட்டதாக கூறிய அவர், புதுச்சேரியில் உள்ள நூலகங்களை பொதுமக்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை அறிந்து அவற்றை மேம்படுத்த வேண்டும்.

இளைஞர்கள், சிறுவர்கள் மத்தியில் படிக்கும் பழக்கத்தை மேம்படுத்த வேண்டும். அவர்கள் படிப்பதற்கான தனித்தனி பிரிவுகள் நூலகங்களில் ஏற்படுத்த வேண்டும். சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் படிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தும்போது அவர்கள் தெளிவான சிந்தனையோடு வளருவார்கள். ஆராய்ச்சி புத்தகங்கள், போட்டி தேர்வுகளுக்கு படிப்பதற்கான பார்வை நூல்கள் வேண்டும் என்ற கோரிக்கை பரிசளிக்கப்படும். நூலகங்களை மக்கள் அதிகம் பயன்படுத்துவதற்கான சூழல் ஏற்படுத்த வேண்டும் என்பதே நோக்கம் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

Also see... பொன்னியின் செல்வனில் வைரமுத்து இடம்பெறாதது ஏன்?

முருங்கப்பாக்கம் நூலகத்தை ஆய்வு செய்தபோது சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் (எ) தட்சணாமூர்த்தி உடனிருந்தார்.

பின்னர் மின்துறை ஊழியர்களின் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த ஆளுநர், ”மின்துறை போராட்டம் என்பது விரும்பத்தக்கது அல்ல. பொதுமக்களுக்கு துன்பம் விளைவிக்கும் போராட்டம் சரியாக இருக்காது. மின்தடை ஏற்படுத்துவது நல்லதல்ல, என்ன பிரச்சனையாக இருந்தாலும் கோரிக்கையாக வைக்கலாம்.

அரசாங்கம் என்ன முடிவு எடுத்தாலும் அது மக்களுக்கு நன்மை தரும் முடிவாக தான் இருக்கும். மக்கள் இதன் மூலம் பலனடைய போகிறார்கள். மக்களின் செலவு குறைக்கப்பட இருக்கிறது. இதையெல்லாம் மனதில் கொண்டு தான் அரசாங்கம் இந்த முடிவை எடுத்திருக்கிறது. இதனால் மின் துறை ஊழியர்களின் போராட்டம் சரியானது அல்ல. போராட்டம் கூடாது என்ற எனது கோரிக்கையாக நான் வைக்கிறேன்”  என்றார். மேலும் மின்துறை தனியார் மையம் ஆக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு கண்டிப்பாக இது அரசாங்கத்தின் கொள்கை முடிவு என்று தெரிவித்தார்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Puducherry, Tamilisai Soundararajan