புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்தும், அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரிவிதிப்பை கண்டித்தும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தராததை கண்டித்து இன்று ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. மாதா கோயில் அருகில் இருந்து பேரணியாக புறப்பட்ட காங்கிரசாரை ஆம்பூர் சாலை அருகே போலீசார் தடுப்புகளை வைத்து தடுத்து நிறுத்தினர். சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தடுப்புகளை மீறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு முன்னேறி சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
பிறகு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, கட்சி தலைவர் சுப்பிரமணியன், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, “ மத்திய பாஜக அரசை எதிர்த்து போராட்டம் நடத்தினால் அமலாக்க துறையை வைத்துக்கொண்டு பொய் வழக்கு போட்டு அவர்கள் மீது கைது நடவடிக்கையில் ஈடுபடுகிறது. நம் நாட்டில் ஜனநாயகம் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருக்கிறது. ஜனநாயகத்தின் மீது மோடிக்கு எந்த ஒரு நம்பிக்கையும் இல்லை. இந்த நாட்டில் அராஜக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.
மேலும் நாட்டு மக்களை கிள்ளுக் கீரையாய் நினைக்கின்றனர். திட்டமிட்டு எதிர்க்கட்சித் தலைவர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது என்றும் நாராயணசாமி தெரிவித்தார். சாவர்கர் பற்றி போராட்டம் நடத்துபவர்கள் அவருடைய சிறைக்குச் சென்று ஒரு மாதம் இருந்து வாருங்கள். அப்போது தெரியும் என தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தது குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தவர், இந்திய சுதந்திரப் போராட்ட தியாகியாக சாவர்கர் என்று சொல்லும் துணைநிலை ஆளுநர் மன்னிப்பு கடிதம் கொடுத்தவர்கள் எல்லாம் தியாகியாக எப்படி கருத முடியும். வீர சாவர்கர் ஒரு கோழை சாவர்கர். நானும் அந்தமானில் உள்ள சிறைச்சாலையை பார்த்து உள்ளேன். புதுச்சேரியில் தியாகச் சுவரில் அவருடைய பெயரை வைப்பதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
சாவர்கர் தியாகியா என ஒரே மேடையில் இதைப் பற்றி விவாதிக்க தமிழிசை சௌந்தர்ராஜன் தயாரா? அவர் தமிழ் புலமை பெற்றவர், என்னுடன் பேச வரட்டும் என்றும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.