Home /News /puducherry /

ஜிப்மரில் தொடரும் மருந்து பற்றாக்குறை... கையிருப்பு மாத்திரைகளை மட்டும் பரிந்துரைக்க மருத்துவர்களுக்கு சுற்றறிக்கை...

ஜிப்மரில் தொடரும் மருந்து பற்றாக்குறை... கையிருப்பு மாத்திரைகளை மட்டும் பரிந்துரைக்க மருத்துவர்களுக்கு சுற்றறிக்கை...

ஜிப்மர் மருத்துவமனை

ஜிப்மர் மருத்துவமனை

Puducherry | புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடரும் மருந்து பற்றாக்குறையால் கையிருப்பில் உள்ள மருந்துகளை மட்டும் பரிந்துரைக்க அனைத்து துறைகளின் மருத்துவர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India
புதுச்சேரியில் கோரிமேடு பகுதியில் அமைத்துள்ளது ஜிப்மர் மருத்துவமனை. மத்திய அரசின் நிறுவனமான இந்த மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த 2ஆண்டுகளாக வெளிப்புறச் சிகிச்சைகள் தொடர்ச்சியாக தரப்படாத சூழல் நிலவியது. தொலைபேசியில் முன்பதிவு செய்து அதன்பிறகே சிகிச்சைக்கு வரவேண்டிய நிலை இருந்தது.

கடந்த இரு ஆண்டுகளாக தொற்றா நோய்களான நீரிழிவு நோய், மனநோய், இதய நோய், நரம்பியல், இதய அறுவை சிகிச்சை நோயியல், நரம்பு அறுவை சிகிச்சை நோயியல், சிறுநீரகவியல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, புற்றுநோய் ஆகியவற்றுக்கு சிகிச்சையில் உள்ளோருக்கும் மாதந்தோறும் இலவசமாக தரவேண்டிய மருந்து மாத்திரைகளை ஜிப்மர் நிறுத்தியதால் பலர் பாதிக்கப்பட்டனர்.

தற்போது மீண்டும் சிகிச்சைகள் தொடங்கினாலும் மாத்திரைகள் பற்றாக்குறை ஓராண்டை கடந்தும் நிலவுகிறது. புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து சிகிச்சைக்கு வருவோருக்கு அத்தியாவசிய மாத்திரைகள் கையிருப்பில் இல்லை என்று வெளியில் வாங்க சொல்கின்றனர்.

இதையடுத்து புதுச்சேரி அரசு, மத்திய சுகாதாரத்துறை தரப்பில்  நேரில் வந்து ஆய்வு செய்து இப்பிரச்னை சரிசெய்யப்படும் என்று உறுதிதரப்பட்டது. ஆனால் இன்னும் சரியாகவில்லை. நோயாளிகளுக்கு டாக்டர்கள் எழுதி தரும் மருந்துகள் பெற வரிசையில் நின்று மருந்து சீட்டை காட்டினால், அம்மருந்துகள் இல்லை என்று தெரிவிப்பதால் வெளியில் வாங்கும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் அதிகளவில் புகார்கள் தொடர்கின்றன.

இந்த நிலையில் ஜிப்மர் மருத்துவ கண்காணிப்பாளர் அனைத்து துறைத்தலைவர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், "மருத்துவத்துக்கு பிறகு தரப்படும் மருந்து சீட்டில் ஜிப்மர் மருந்தகத்தில் கிடைக்கும் மருந்துகளை மட்டும் பரிந்துரையுங்கள். இங்கு இல்லாத அத்தியாவசிய மருந்தை வெளியில் பணம் செலுத்தி வாங்கிக்கொள்ளுமாறு குறிப்பிட்டு தனிச்சீட்டில் எழுதி தாருங்கள். மருந்தகத்தில் உள்ள மருந்து பட்டியல் அனைத்து துறைகளுக்கும் தரப்படும். மருத்துவர்கள் எழுதி தரும் மருந்துகள் பெற மருந்தகத்தில் வரிசையில் நின்று கிடைப்பதில்லை என்று புகார்கள் வருவதால் இச்சுற்றறிக்கை தரப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு திமுக கடும் கண்டத்தை தெரிவித்துள்ளது. புதுச்சேரி மற்றும் விழுப்புரம், கடலூர் மாவட்ட ஏழை எளியோருக்கு ஜிப்மர் மருத்துவமனை சிறந்த சேவையாற்றி வருகிறது. ஆனால் மருந்து தட்டுபாடு என்பது கடந்த ஓராண்டாக தொடர்கிறது. இதனை கண்டித்து வரும் 24ம் தேதி ஜிப்மர் மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.

Also see...ஓடும் ரயிலில் பெண்ணை தாக்கி நகையை கொள்ளையடிக்க முயற்சி செய்த வட இந்தியரக்ள்

விசிக எம்பி ரவிக்குமார் கூறும்போது,” ஜிப்மருக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் ஒதுக்கும் நிதியானது குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மருந்துகள் மட்டுமல்ல மருத்துவ கருவிகளுக்கும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. சிறந்த மருத்துவ நிபுணர்களும் வெளியேறி வருகின்றனர்”. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் கவனத்தை ஈர்த்து இருப்பதாக கூறியுள்ளார்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: JIPMER, Medicines, Puducherry

அடுத்த செய்தி