புதுச்சேரி அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் காமராஜர் பிறந்தநாளான இன்று மாணவர்கள் தின விழா கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தில் நடந்தது. விழாவுக்கு கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கிட துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
விழாவில் பேசிய தமிழிசை, "சரித்திரம் சில நேரங்களில் நல்ல பக்கங்களை எழுதும். அதில் ஒன்றுதான் காமராஜர் பிறந்தநாள். காமராஜரை பார்த்து வளர்ந்த நானும், அரசியலில் அவரை பின்பற்றும் முதலமைச்சர் ரங்கசாமியும் உயர்ந்த பதவியில் இருந்து புதுவை மக்களுக்கு சேவையாற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது. என் தந்தை குமரி ஆனந்தன் காமராஜரை சந்திக்க வீட்டுக்கு சென்ற போது வெளியில் காரில் வாசலில் பலமுறை காத்திருந்துள்ளேன். நான் அரசியலுக்கு வர காமராஜர் வீட்டு வாசலில் காத்திருந்ததுதான் எனக்கு ஊக்கமளித்தது என்றார்.
பிரதமர் நரேந்திரமோடி புதிய கல்வி கொள்கையை தேசிய கல்வி கொள்கையாக அறிவித்துள்ளார். இதில் மாணவர்களுக்கு உணவளிக்க வேண்டும் என முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக்கொள்கை மாணவர்களுக்கு கல்வியுடன், ஊட்டச்சத்து அளிக்கவும் வலியுறுத்துகிறது.
தமிழிசை
காமராஜர் என்றாலே கல்விதான் நினைவுக்கு வரும். புதுவை மாணவர்கள் நன்றாக படித்து பெருமை சேர்ப்பதுதான் காமராஜர் புகழுக்கு பெருமை சேர்க்கும். இந்த கல்வி வளாகம் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தேவையான அனைத்தையும் வழங்கும் என்றும் தமிழிசை கூறினார்.
முதலமைச்சர் ரங்கசாமி பேசும் போது, இந்த வளாகத்தை பிரதமர் காணொலி மூலம் திறந்து வைத்தார். இதன்மூலம் காமராஜர் மீது அவர் கொண்டுள்ள பற்று வெளிப்படுகிறது. அனைவருக்கும் கல்வி என்பதுதான் காமராஜரின் நோக்கம். இந்த வளாகத்தில் ஐஏஎஸ் பயிற்சி பெறும் வகையில் நூலகம், சென்டாக் அலுவலகம், அரங்கம் அமைக்கப்பட உள்ளது என்றார்.
பள்ளி கல்வியை ஏற்கனவே இலவசமாக வழங்கி வருகிறோம். தற்போது உயர்கல்வி படிக்கும் வகையில் கல்லூரி கல்வியையும் இலவசமாக வழங்கி வருகிறோம். எந்த படிப்பு வேண்டுமானாலும், எங்கு சென்று வேண்டுமானாலும் படிக்கும் நிலையை உருவாக்கியுள்ளோம். அரசின் இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி மாணவர்கள் படித்து முன்னேற வேண்டும் என கேட்டு கொண்ட முதல்வர், அரசு பணி அனைவருக்கும் கிடைக்குமா? என எண்ணக்கூடாது. படிப்பதன்மூலம் நல்ல சிந்தனை உருவாகும். அந்த சிந்தனை முன்னேற்றத்தை உருவாக்கும்.
புதுவை
புதுவையில் படித்த மருத்துவர்கள் இன்று உலகம் முழுவதும் சிறந்த மருத்துவர்களாக உள்ளனர். மருத்துவக் கல்வியும் இலவசமாக கிடைக்க வழி செய்துள்ளோம். மாற்று கட்சியை சேர்ந்தவர்கள்கூட காமராஜர் ஆட்சி வேண்டும் என விரும்புவர். பிரதமரின் கூற்றுப்படி காமராஜர் வழியில் சிறந்த ஆட்சியை பெஸ்ட் புதுவையை உருவாக்குவோம். பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றும் ரங்கசாமி தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.