Home /News /puducherry /

காங்கிரஸ் மாநில தலைவரை மாற்றக் கோரி புதுவையில் போராட்டம் - காங்கிரஸ் கட்சி மேலிட பொறுப்பாளர் கார் முற்றுகை - 5 பேர் சஸ்பெண்ட்

காங்கிரஸ் மாநில தலைவரை மாற்றக் கோரி புதுவையில் போராட்டம் - காங்கிரஸ் கட்சி மேலிட பொறுப்பாளர் கார் முற்றுகை - 5 பேர் சஸ்பெண்ட்

புதுவை - காங்கிரஸ்

புதுவை - காங்கிரஸ்

Puducherry Congress : புதுவை மாநில தலைவரை மாற்றக்கோரி காங்கிரஸ் மேலிட பொருப்பாளர் தினேஷ் குண்டுராவ் காரை மறித்து போராட்டம் நடத்திய விவகாரத்தில் 5 நிர்வாகிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India
புதுச்சேரி காங்கிரஸ் தலைவரை மாற்றக் கோரி, மேலிடப் பொறுப்பாளர் காரை மறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்த நிலையில், புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியனை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை கட்சிக்குள் வலுத்து வருகிறது.

இதனால் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஒரு குழுவாகவும் முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அனந்தராமன் ஆகியோர் தனித்தனி குழுவாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கட்சியினரின் கருத்தை கேட்பதற்காக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ்  புதுச்சேரி வந்துள்ளார். அப்போது அவரை சந்திக்க ஒரு சிலரை மட்டுமே கட்சி அலுவலகத்துக்குள் அனுமதித்ததாகக் கூறப்படுகிறது. இதுபோல் ஒருதலை பட்சமாக நடந்துக்கொள்ள கூடாது என கூறி முன்னாள் அமைச்சர் கந்தசாமி அணியினர், நிர்வாகிகள் அலுவலகம் எதிரே போராட்டம் நடத்தினர்.



அப்போது இரு அணியினரிடமும் கருத்து கேட்டுவிட்டு வெளியே வந்த தினேஷ் குண்டுராவை அனந்தராமன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வழிமறித்து பழைய தலைவரை மாற்ற கோரினார்கள். அதற்கு No change மாற்றமில்லை என கூறி   மற்றொரு தரப்பினர், அவரது காரை மறித்து முழக்கமிட்டனர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. இதில் தினேஷ் குண்டுராவின் கார் சேதப்படுத்தப்பட்டது

நிர்வாகிகள் சஸ்பெண்ட்:

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ஏ வி சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை:

காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்து கொண்டிருந்த கூட்டத்தில் உள்ளே புகுந்து தகராறு செய்து கூட்டத்தை நிறுத்திவிட்டு உடனே வந்து எங்களிடம் பேசுங்கள் என்று அநாகரிமாக கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்ட கட்சியின் பொதுச் செயலாளர்கள் அப்துல் ரகுமான், கருணாநிதி, செயலாளர்கள் பி எம் சரவணன், சிவாஜி மற்றும் சேவா தள துணைத் தலைவர் ஆறுமுகம் ஆகிய 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இக்கூட்டம் நடந்துகொண்டு இருந்தபோது, மெயின் ஸ்விட்சை மூன்று முறை ஆஃப் செய்து மின் இணைப்பை துண்டித்தனர். தினேஷ் குண்டு ராவை எதிர்த்து கோஷம் போட்டு, தள்ளிவிட்டு, அவமானப்படுத்தி, அவர் காரில் ஏற சென்றதை தடுத்து, அவர் காரில் ஏறிய பிறகும் கார் கண்ணாடி, கதவுகள், டயர்கள் போன்றவற்றை சேதப்படுத்தி, மண்ணை வாரி காரில் மீது அடித்து, கார் போகவிடாமல் தடுத்தனர். .

இதனால் இவர்கள்  காங்கிரஸ் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மற்றும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் தற்காலிகமாக
நீக்கப்படுகிறீர்கள்.  ஏன் நிரந்தரமாக நீக்கக் கூடாது என்பதற்கான பதிலை, இன்றிலிருந்து ஏழு நாட்களுக்குள் புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டிக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவித்து 5 நிர்வாகிகளுக்கு கடிதம் அனுப்பி உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
Published by:Siddharthan Ashokan
First published:

Tags: Congress, Puducherry

அடுத்த செய்தி