புதுச்சேரியில் தொடங்கிய அறிவியல், தொழில்நுட்பம் தொடர்பான ஜி-20 மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 75 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
ஜி - 20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளதை அடுத்து, நாடு முழுவதும் 200 நகரங்களில் பல்வேறு தலைப்புகளில் ஜி20 உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டங்கள் நடைபெறவுள்ளன. அதன்படி அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி என்ற தலைப்பில் புதுச்சேரி, முதலியார்பேட்டையில் தொடங்கியது.
தொடக்க விழாவில் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் இயக்குனர் பேராசிரியர் ஜி.ரங்கராஜன் வரவேற்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், “ ஜி20 நாடுகளின் இலக்குகளை அடைவதற்கு அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் மிக முக்கியமான பங்கினை ஆற்றி வருகின்றன. இன்றைக்கும் நாளைக்கும் மிகப் பெரும் பிரச்சனகளாக இருக்கின்ற பருவ நிலை மாறுதல், பெருந்தொற்றுப் பரவல், எரிசக்தி பாதுகாப்பு, நீர் மேலாண்மை, உணவு பற்றாக்குறை போன்றவற்றை ஒரே ஒரு நாடு மட்டும் தன்னளவில் தீர்த்துவத்துவிட முடியாது. இதற்கு பல நாடுகளின் ஒத்துழைப்பும் நட்புறவும் அவசியமாகும்” என்று பேரா.ரங்கராஜன் தனது வரவேற்புரையில் குறிப்பிட்டார்.
அறிவியல்-20 இன் இந்தியத் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பேராசிரியர் அஷுதோஷ் ஷர்மா துவக்கவுரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், “அழகான புதுச்சேரி நகரில் நடைபெறும் அறிவியல்20 ஆரம்ப நிலைக் கூட்டத்துக்கு வந்துள்ள ஜி 20 நாடுகளின் விஞ்ஞானிகள், பல்வேறு இந்திய நிறுவனங்களின் விஞ்ஞானிகளை அன்புடன் வரவேற்கிறேன். உலக அளவில் வளர்ச்சிக்கு இன்றியமையாத கூறுகளாக அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் மதிக்கின்ற பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் கூட்டத்தை இந்தியா நடத்துவது பெருமை மிக்க நிகழ்வாகும். அறிவியல் என்பது நமது பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமே பங்காற்றவில்லை. கூடுதலாக சமூக சீர்திருத்தங்களுக்கும் அறிவியல் உதவியுள்ளது. அறிவியலின் வளர்ச்சியால்தான் உலகில் வறுமை விகிதம் பெருமளவு குறைந்துள்ளது என்று பேராசிரியர் அஷுதோஷ் ஷர்மா தெரிவித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தேசிய தடைகளை நீக்குகின்றன. உலகை ஒருங்கிணைக்கின்றன் மற்றும் அமைதியை முன்னெடுக்கின்றன என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். அறிவியலின் ஆக்கப்பூர்வமான பங்களிப்புக்கு பிரதமரின் கூற்று அணி சேர்ப்பதோடு உலகத்தின் எதிர்கால நம்பிக்கைக்கும் வழிவகுக்கின்றது. பல தரப்பு ஒத்துழைப்பு மற்றும் நட்புறவுடன் அறிவியல் ஆராய்ச்சி, கல்வி மற்றும் புத்தாககங்களை நமது சொந்த நாட்டிலும் நாட்டு எல்லை கடந்து உலக அளவிலும் முன்னெடுப்பதற்காக நாம் இங்கு கூடியுள்ளோம். நாம் எதிகாலம் குறித்தும் விவாதிக்க உள்ளோம் என்று பேராசிரியர் அஷுதோஷ் ஷர்மா மேலும் தெரிவித்தார்.
இன்றைய தலைமுறை அறிவியல் வளர்ச்சியின் வசதிகளைப் பெற்று வளர்கின்ற தலைமுறையாக உள்ளது. இளைஞர்களின் எண்ணிக்கை மக்கள் தொகையில் பெரும்பங்கு வகிக்கின்றது. இன்று பிறக்கின்ற குழந்தைகள் நம்பிக்கையின் காலகட்டத்தில் பிறந்தவர்கள், பிறக்கின்றவர்கள். எனினும் எதிர்கால தலைமுறைக்கும் பல பிரச்சனைகள் உள்ளன. நமது வீடுகள் டிஜிட்டல் மயமாகி விட்டன. நமது வாழ்க்கையும் டிஜிட்டல் மயமாகின்றது. ஆனாலும் சமூகத்தில் இதற்கு இணையான மாற்றங்கள் மெதுவாகவே ஏற்பட்டு வருகின்றன. நாம் முன்வைத்துப் பேசுகின்ற பெருமளவு மாற்றத்தை ஏற்படுத்தும் அறிவியல் தொழில் நுட்பம் என்பது புதிய தீர்வுகளைத் தரக்கூடியது என்று பேராசிரியர் அஷுதோஷ் ஷர்மா மேலும் தெரிவித்தார்.
இன்றைய ஆரம்ப நிலைக் கூட்டத்தின் இலக்கு என்பது இனி தொடர்ந்து நடைபெறக்கூடிய கூட்டங்களுக்கான கருத்துவரைவை உருவாக்குவதுதான். அறிவியல் உச்சிநிலை கூட்டம் கோயம்புத்தூரில் நடைபுறும் என்று பேராசிரியர் அஷுதோஷ் ஷர்மா நிறைவாகத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பல அமர்வுகளாக கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன.
முன்னதாக, பிரதிநிதிகள் தங்கும் விடுதிகள், விமான நிலையம், மாநாட்டு அரங்கம் ஆகியவை அமைந்துள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி நகர் பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், பிரதிநிதிகளை வரவேற்க பேனர்கள் வைத்து, அரசு கட்டடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: G20 Summit, Puducherry