குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்த் பதவிக்காலம் முடிவடைகிறது. புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் ஜூலை 18ம் தேதி நடக்கிறது. தேர்தலில் பாஜக கூட்டணி கட்சிகள் சார்பில் திரவுபதி முர்மு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்கா போட்டியிடுகின்றனர். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இருவரும் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் நேரில் சென்று எம்எல்ஏக்கள், எம்பிக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இதன்படி பாஜக ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு, இன்று புதுவைக்கு வந்தார். டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் காலை புதுவை லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு காலை 11.40 மணிக்கு வந்தார். அவரை முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீஜெயக்குமார், சாய்சரவணக்குமார், சந்திரபிரியங்கா, பாஜக மாநில தலைவர் சாமிநாதன், எம்எல்ஏக்கள் வரவேற்றனர்.
விமான நிலைய நுழைவுவாயிலில் புதுவை மாநில பாஜக சார்பில் மங்கள இசையுடன் பூர்ணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அங்கிருந்து கார் மூலம் வழூதாவூர் சாலையில் உள்ள தனியார் விடுதிக்கு 12 மணிக்கு வந்தார். அங்கு பாஜக மகளிரணி சார்பில் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து ஓட்டலில் உள்ள அறைக்கு சென்றார். சிறிதுநேரத்துக்கு பின் தரை தளத்துக்கு வந்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் கூட்டத்தில் பங்கேற்றார்.
கூட்டத்தில் என் ஆர்.காங்கிரஸ் தலைவரும், முதலமைச்சருமான ரங்கசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் சாமிநாதன், என் ஆர்.காங்கிரஸ் அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீஜெயக்குமார், சந்திரபிரியங்கா, பாஜக அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்சரவணக்குமார், எம்எல்ஏக்கள், எம்பி செல்வகணபதி, துணை சபாநாயகர் ராஜவேலு, எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்டு, பாஸ்கர், லட்சுமிகாந்தன், ஆறுமுகம், ரமேஷ், திருமுருகன், சுயேச்சை எம்எல்ஏக்கள் அங்காளன், சிவசங்கரன், கொல்லப்பள்ளி சீனிவாச அசோக், பிரகாஷ்குமார், நியமன எம்எல்ஏக்கள் வெங்கடேசன், ராமலிங்கம், அசோக்பாபு, என்ஆர்.காங்கிரஸ் செயலாளர் ஜெயபால், அதிமுக மாநில செயலாளர்கள் அன்பழகன், ஓம்சக்திசேகர் ஆகியோர் பங்கேற்றனர்.

திரவுபதி முர்மு,
இந்த கூட்டத்தில் பங்கேற்க பத்திரிகையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்முவை அறிமுகப்படுத்தினர். அவர், எம்எல்ஏக்கள், எம்பியிடம் தனக்கு வாக்களிக்கும்படி ஆதரவு கோரி பேசினார். தொடர்ந்து பாஜக நிர்வாகிகளை சந்தித்தார்.
குடியரசு தலைவருக்கான வேட்பாளர் முர்முவுடன் மத்திய அமைச்சர்கள் முரளீதரன், எல்.முருகன், பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதிசீனிவாசன் எம்எல்ஏ, நீத்துதாமஸ், சுரத்குமார் முகந்தா, சுபாஷ் சந்திரா ஆகியோரும் பங்கேற்றனர். முதல்வர் ரங்கசாமி பேசுகையில், ஆளுங்கட்சியின் 22 எம்எல்ஏக்கள், ஒரு எம்பியின் ஆதரவு தங்களுக்கு உள்ளது. புதுச்சேரியில் அதிகப்படியான எம்எல்ஏக்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவீர்கள் என தெரிவித்தார்.
புதுவையில் உள்ள 6 சுயேச்சை எம்எல்ஏக்களில் பாஜகவுக்கு அங்காளன், சிவசங்கரன், சீனிவாச அசோக் ஆகியோர் ஆதரவு தருகின்றனர். அவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இவர்கள் தவிர 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் தனியாக செயல்பட்டு வந்தனர். இவர்களில் முத்தியால்பேட்டை தொகுதியை சேர்ந்த பிரகாஷ்குமார் இன்று நடந்த கூட்டத்தில் பங்கேற்றார். இதனால் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்களில் 20 எம்எல்ஏக்களின் ஆதரவு திரவுபதி முர்முவுக்கு கிடைத்துள்ளது. மீதமுள்ள 2 சுயேச்சைகளான நேரு, பிஆர்.சிவா ஆதரவு யாருக்கு? என்ற கேள்வி எழுந்துள்ளது.
Also see... திருவாரூர்: போதையில் காவலரின் கழுத்தை அறுத்த இளைஞர் கைது...
கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தும் அவர்கள் வரவில்லை. யாருக்கு வாக்களிப்பது என முடிவு செய்யவில்லை என அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே எதிரணியில் திமுகவுக்கு 6, காங்கிரசுக்கு 2 எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்கள் யஷ்வந்த் சின்காவை ஆதரவு தெரிவிக்க உள்ளனர்.
உங்கள் நகரத்திலிருந்து(புதுச்சேரி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.